Search
Wednesday 15 July 2020
 • :
 • :
தலைப்பு செய்திகள்

ஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும்

ஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும்

வீ.தனபாலசிங்கம்  ( 30/03/2019 வீரகேசரியில் வெளியான கட்டுரை )

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் 2019 பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு குறித்து பெரும்பாலான  பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்களோ இல்லையோ கடந்தவாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பற்றி தவறாமல் பேசிவிடுகிறார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் அரசாங்கத்தின் பட்ஜெட் யோசனைகளை விமர்சனம் செய்கின்றதை விடவும் ஜெனீவா விவகாரத்தில் அதிக தீவிரம் காட்டி காரசாரமாக உரையாற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இதற்கு புறம்பாக, தற்போது ராஜபக்சாக்களின் அரசியல் கட்சியாக விளங்குகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் (இவர்கள் பாராளுமன்றத்திற்குள் தங்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் என்றே கூறிக்கொள்கிறார்) பாராளுமன்றத்துக்கு வெளியே கொழும்பில் தினமும் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி ஜெனீவா விவகாரம் தொடர்பில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

அவர்களின் விமர்சனங்கள் எல்லாம் பெருமளவுக்கு கடந்தவாரம் ஜெனீவாவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதைப் பற்றியதாகவே இருக்கிறது. குறிப்பாக உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தும் நிபந்தனையை மீண்டும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கிவிட்டது என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அரசாங்கத் தரப்பினரும் ஜெனீவாவில் தாங்கள் இணங்கிக்கொண்ட நிபந்தனைகள் அல்லது ஏற்பாடுகளை முழு உலகமுமே நன்கறியும் என்பதைத் தெரிந்துகொண்டும் கூட கலப்பு நீதிமன்றத்துக்கு ஒருபோதும் தாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும்  வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் நீதி விசாரணைச் செயன்முறைகளில் சம்பந்தப்படுத்தப்போவதில்லை என்றும் மறுதலித்துக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்ச முகாமின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில், ஜெனீவா விவகாரம் அரசியல் கட்சிகள்  குறிப்பாக, இரு பிரதான கட்சிகளும் பரஸ்பரம்  தங்களது  தேசப்பற்றின் வலிமையையும்  எதிர்த்தரப்பினரின்  துரோகத்தனத்தின்  பாரதூரத்தன்மையையும் நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கான ஒரு வசதியான கருவியாக மாறியிருக்கிறது எனலாம்.

மாற்றமில்லை

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய தீர்மானம் 2015 அக்டோபர் தீர்மானத்தின்(30/1) வாயிலாக வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இருவருடகால அவகாசத்தை வழங்குவதை நோக்கமாகக்கொண்டதே. இலங்கையின் பொறுப்புக்கூறல் கடப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளும் நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச்செயன்முறைகள் தொடர்பிலான ஏற்பாடுகளும் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை. அவற்றை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது என்ற சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படுவதாகவும் கூறமுடியாது.

ஜெனீவாவுக்குச் சென்ற இலங்கைக் குழுவின் தலைவரான வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இம்மாத ஆரம்பத்தில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை நிலைவரம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பல விடயங்களை மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில் கடுமையாகக் கண்டனம் செய்திருந்ததுடன் ஆணையாளர் செய்த பல விதந்துரைகளையும் நிராகரித்திருந்தார் என்ற போதிலும்  காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதில் தயக்கம் இருப்பதாகக் கூறவில்லை. அந்த குழுவில் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகச் சென்றவர்களும் இணை அனுசரணையை ஜெனீவாவில் வைத்து ஆட்சேபிக்கவில்லை.ஆனால், நாடு திரும்பிய உடனடியாக அவர்களும் இணை அனுசரணையைக் கண்டனம் செய்பவர்களுடன் உற்சாகமாக இணைந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கத் தரப்பினரின் பிரதிபலிப்பு அவர்கள் மீதான எதிரணியின்  குற்றச்சாட்டுக்களை பலப்படுத்துவதாக அமைகின்றதே தவிர உண்மை நிலையை விளக்குவதாக இல்லை. இந்த இடத்தில் தான் ஜெனீவா கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் உரையாற்றியபோது ‘ இலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களின் உயர்மட்டத்தில் பொதுவான நோக்கு இல்லாததே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாதமைக்கு முக்கிய காரணம் ‘ என்று சுட்டிக்காட்டிய உண்மையை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

UNHRC

2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானம் 30/1 நிறைவேற்றப்பட்ட பிறகு அதன் ஏற்பாடுகளை இலங்கை 18 மாதங்களில் அதாவது 2017 மார்ச் அளவில் நிறைவேற்றவேண்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் இலங்கையின் இணை அனுசரணையுடனேயே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் (34/1) மூலமாக இரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கால அவகாசத்திற்குள் அரசாங்கம் திருப்திகரமான முறையில் நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனினும் முன்னெடுக்கப்பட்ட செயன்முறைகளை மனித உரிமைகள் பேரவை வரவேற்கத்தவறவில்லை.

காணாமல்போனோர் விவகார அலுவலகம் 2017 செப்டெம்பரில் அமைக்கப்பட்டு அதற்கான ஆணையாளர்கள் 2018 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டதன் பிறகு அது செயற்பட ஆரம்பித்திருப்பதையும் இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை  நிறுவுவதற்கு சட்டமூலம் ஒன்றைக்கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டதையும் கடந்த வாரத்தைய ஜெனீவா தீர்மானம் வரவேற்றிருக்கிறது. அந்தச் செயன்முறைகள் எல்லாம் மிகுந்த மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும்,போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதத்திலும் திருப்திப்படக்கூடியதாக இருக்கவில்லையெனினும் இலங்கை அரசாங்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினதும் மனித உரிமைகள் பேரவையினதும் அபிப்பிராயங்கள் அமைந்திருக்கின்றன.

ஐந்தரை வருடங்கள்

2015 அக்டோபர் தீர்மானத்துக்குப் பிறகு இதுவரையில் மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. கடந்த வாரம்  வழங்கப்பட்டிருக்கும் இரு வருடகால அவகாசத்தின் முடிவில்  அந்த தீர்மானம் ஐந்தரை வருடங்களை எட்டும். அப்போது இலங்கை அரசாங்கம் அதன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லணக்க கடப்பாடுகளை எந்தளவுக்கு நிறைவேற்ற முன்னவே இருக்கும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

ஜெனீவாவில் இருந்து நாடு திரும்பிய கையோடு அரசாங்கத் தூதுக்குழுவின் தலைவரான வெளியுறவு அமைச்சர் மாரப்பனவும் முன்னாள் அமைச்சரான சரத் அமுனுகமவும் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவை.

மனித உரிமைகள் பேரவையில் தான் நிகழ்த்திய உரை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்த மாரப்பன இலங்கையில்  நடத்தப்படக்கூடிய நீதிவிசாரணைச் செயன்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை சம்பந்தப்படுத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஜெனீவாவில் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மான ஆவணத்துக்கு புறம்பான ஆவணம் ஒன்றின் மூலமாக கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு தான் இணக்கம் தெரிவித்ததாக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

அதேவேளை, ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் ஊடாக அளிக்கப்பட்ட  உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரையறை  எதற்கும் தாங்கள் இணங்கவில்லை என்று அமுனுகம பாராளுமன்றத்தில்  குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள்  தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு  முன்னெடுக்கப்படக்கூடிய  எந்தவொரு நீதிச்செயன்முறையிலும் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை ஒருபோதும் அனுமதிக்க இலங்கை தயாராயில்லை என்பதை மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை களுத்துறையில் வைபவம் ஒன்றில் உரையாற்றியபோது ஜெனீவா தீர்மானத்தின் மூலமாக இலங்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தார்.அரசியலமைப்புக்கு முரணானதாக அமையக்கூடிய எந்தவொரு யோசனையும் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்யப்போவதாகவும்ஜனாதிபதி சூளுரைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அது மாத்திரமல்ல,  ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவது தொடர்பில் தனது அனுமதி இல்லாமலேயே அங்குள்ள இலங்கையின் தூதுவர் கைச்சாத்திட்டதாகவும் அவர் கைச்சாத்திட்டது வெளியுறவு அமைச்சுக்கோ அல்லது வெளியுறவுச் செயலாளருக்கோ கூட தெரியாது என்றும் ஜனாதிபதி சிறிசேன கூறியிருக்கிறார்.ஜனாதிபதி கூறுகின்ற இந்த கையெழுத்து சர்ச்சை குறித்து அரசாங்கத்தரப்பில் இருந்து இதுவரை பிரதிபலிப்பு எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. அதேவேளை, ராஜபக்ச தரப்பைச் சேர்ந்தவர்கள் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவரை திருப்பியழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சர்வதேச சமூகத்துடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான விவகாரத்தை இவ்வாறாக பொறுப்புணர்ச்சியற்ற முறையில்  அணுகுவது உலகநாடுகள் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அரசியல் தலைவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உள்நாட்டு விவகாரங்களை கட்சி அரசியல் மாச்சரியங்களின் அடிப்படையில் அணுகுவதற்கு பழக்கப்பட்டுவிட்ட அவர்கள் வெளியுறவு விவகாரங்களையும் அவ்வாறே அணுகுகிறார்கள். வெளியுலகில் கூறுவது ஒன்று, உள்நாட்டில் ‘ கலரிக்கு ‘ பேசுவது  வேறொன்றாக இருக்கிறது.

Thilak

மஹிந்தவின் முதல் வாக்குறுதி

இலங்கையின் விவகாரம் ஜெனீவாவுக்கு சென்ற நாள் தொடக்கம் இதுவரையில் கொழும்பு எவ்வாறு அதைக் கையாண்டுவந்திருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் திரும்பிப்பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

2009 மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்கு வந்து ஒரு வாரகாலத்திற்கு பிறகு இலங்கை வந்த அப்போதைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ — மூனுடன் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டு மனித உரிமை மீறல்கள் ஃ போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிசெய்வதாக முதலில் வாக்குறுதி அளித்தவர் வேறு யாருமல்ல, இன்று ஜெனீவா செயன்முறைகளுக்கு எதிராக போர்முழக்கம்  செய்யும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே. அந்த கூட்டறிக்கை தொடர்பிலான கடப்பாட்டை வெளிப்படுத்தி அதே வருடம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையே முன்னின்று கொண்டுவந்த தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

பான் கீ — மூனுடனான கூட்டறிக்கை தொடர்பிலும் மேற்கூறப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அடுத்த நகர்வுகளைச் செய்வதற்கு இலங்கை தவறியதால் இந்த விவகாரத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று செயலாளர் நாயகம் 2010 ஆம் ஆண்டில் தருஸ்மன் குழுவை நியமித்தார்.அந்தக்குழு 2011 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையில் போரின் இறுதி மாதங்களில் மாத்திரம் 40 ஆயிரம் குடிமக்கள் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

தருஸ்மன் குழு நியமிக்கப்படவிருந்த வேளையில் ஜனாதிபதி ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.அந்த ஆணைக்குழுவும்  2011 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையில் பாதுகாப்பு படைகளினாலும் விடுதலை புலிகளினாலும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே விதந்துரை செய்தது.

ஆனால், ராஜபக்ச அரசாங்கம் அதுவாகவே நியமித்த அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் கிஞ்சித்தேனும் அக்கறை காட்டாத நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை 2012 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் அதன் முதன்முதலான தீர்மானத்தை நிறைவேற்றியது. அதே ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் இலங்கையைக் கேட்டுக்கொண்டது. ராஜபக்ச அரசாங்கம் அந்த தீர்மானத்தை நிராகரித்தது.ஆனால், பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் தேசிய நடவடிக்கைத்திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தது. இத்தகைய திட்டமொன்றை  முன்வைக்குமாறு மனித உரிமைகள் பேரவை அதன் தீர்மானத்தில் இலங்கையைக் கேட்டுக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே இராணுவத்துக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணைசெய்வதற்கு  6 உறுப்பினர்களைக்கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றும் நியமிக்கப்பட்டது.

தேசிய நடவடிக்கை திட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் பேரவை  2013 ஆம் ஆண்டில் அதன் இரண்டாவது தீர்மானத்தின் மூலமாக ( கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் விததந்தரைக்கப்பட்ட கடப்பாடுகளுக்குப் புறம்பாக) வேறு கடப்பாடுகளை இலங்கை மீது விதித்தது.புதிய கடப்பாடுகளில் அதிகாரப்பரவலாக்கல் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தீர்மானத்துக்கான பதிலாக ஜனாதிபதி ராஜபக்ச காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். போரின் இறுதிக்கட்டங்களில் எவரும் காணாமல்போகவில்லை என்று இராணுவ நீதிமன்றம் கூறியபோதிலும் இந்த ஆணைக்குழுவைஅவர் நியமித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

மனித உரிமை மீறல்கள் ஃ போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்று கோரும் தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியபோது  மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளையும் ஆராய்வதற்கு பரணகம ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ராஜபக்ச இரண்டாவது ஆணையொன்றையும் வழங்கினார்.

அதற்குப் பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து புதிய அரசாங்கம் பல்வேறு கடப்பாடுகளுடன்  வெளிநாட்டு நீதிபதிகளினதும் பங்கேற்புடன் கூடிய நீதிச்செயன்முறையை வலியுறுத்திய 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு ஜெனீவாவில் இணை அனுசரணை வழங்கியது. ஆனால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு தொடர்பான உறுதிமொழியை அரசாங்கம் மீறியது.

2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 மார்ச்சில் ஜெனீவாவில் ஒரு இணை அனுசரணைத் தீர்மானத்தின் மூலமாக அரசாங்கம் இருவருட காலஅவகாசத்தைப் பெற்றுக்கொண்டது. இப்போது  உள்நாட்டு நீதிச்செயன்முறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புக்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று உச்சத்தொனியில் பேசிக்கொண்டே அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் கூடிய நீதிச்செயன்முறையை வேண்டிநிற்கும் அதே தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இருவருட கால அவகாசத்தைக் கேட்டுப்பெற்றிருக்கிறது.

ஜெனீவா தீர்மானங்களை நிராகரிப்பதாகக் கூறிய ராஜபக்ச ஆட்சியாக இருந்தாலென்ன, தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய இன்றைய அரசாங்கமாக இருந்தாலென்ன போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதாக சர்வதேச சமூகத்துக்கு கூறிவிட்டு உள்நாட்டில் வந்து மறுதலையாக பேசுவதையே வழமையான தந்திரமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. அது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.


One thought on “ஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும்

 1. நக்கீரன்

  நடுநிலைமையோடு எழுதப்பட்ட கட்டுரை. தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுக்கு சிக்கல்கள் இருக்கிறது என்று பேசுபவர்கள் கூட அதற்கான தீர்வை முன்வைக்க அணியமாக இல்லை.
  பன்னாட்டு சமூகத்திடம் இருந்து தீர்வை எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால் அது நீண்ட காலம் எடுக்கும். காரணம் நோய் நீண்ட காலமாக இருந்துவருகிறது.
  திபெத்திய மக்களது விடுதலைப் போராட்டம் நீர்த்துப் போய்விட்டது. அது போலவே 22 மில்லியன் குர்திஷ் மக்களது சுதந்திரப் போராட்டமும் பேசாப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால் 2.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கைத் தமிழர்களது சிக்கல் மட்டும் தீர்வு இல்லாவிட்டாலும் ஒரு பேசு பொருளாக இருந்து வருகிறது. அதையிட்டு ஆறுதலடையலாம்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *