ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு இரண்டு கட்சிகளும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு கட்சிகளுக்கும் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான அருதிப் பெரும்பான்மை ஆசனங்கள் பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்து ஜனவரி மாதத்தில் தனியான அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்காகவே இரண்டு கட்சிகளும் முயற்சித்து அதற்கான திட்டங்களை இப்போதிருந்தே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசஸ் ஆகியவற்றுக்கு இரண்டு ஆசனங்களும் உள்ளன. இவ்வாறான நிலைமையில் மற்றைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவின்றி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றன. இதனால் தம்மிடமுள்ள ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டு மற்றைய கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்தே ஆக வேண்டிய நிலையிலேயே இரண்டு கட்சிகளும் உள்ளன.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்க இன்னும் 7 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிமைக்க 18 ஆசனங்களும் இன்னும் தேவையாக உள்ளன. இவற்றில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவுமாக இருந்தால் அந்த கட்சி இலகுவாக அரசாங்கத்தை அமைத்துவிடும். ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பது தொடர்பான அறிவித்தல் எதனையும் விடுத்ததில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. இதன்படி ஐக்கிய தேசிய கட்சி தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் மாதங்களில் பேச்சுக்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் குறியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக ஆதரவு கிடைப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துவிடக் கூடாது என்பதற்காகவே தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டி வந்ததாக அண்மையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் அந்த கட்சி உறுதியாக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
இதேபோன்று கடந்த ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த கடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஜாதிக ஹெல உறுமய மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகளினதும் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆதரவை தமது பக்கம் இழுத்து ஐக்கிய தேசிய கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைப்பதை தடுத்து நிறுத்தி மேலும் சிலரை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தம் பக்கம் இழுத்து தனித்து தமது அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு இடமளிக்காது தமது பக்கம் உள்ள உறுப்பினர்களை வெளியில் செல்ல விடாது ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பக்கமிருந்து உறுப்பினர்களை தமது பக்கம் இழுத்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி தற்போது இரண்டு தரப்பிலுலும் இரகசிய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களில் 50 பேர் வரையிலானோர் தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பதால் அவர்களின் ஆதரவு இன்றி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் அரசாங்கத்தை அமைக்க முடியாது. இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைக்க அந்த கட்சியினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தற்போது இரண்டு தரப்பிலும் இரகசிய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் ஆதரவு வழங்குவது தொடர்பாக அப்போது ஆராய்கிறோம். என மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசாங்கத்திலுள்ள உறுப்பினர்கள் பலர் ஒன்று தனித்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் அவர்களில் சிலர் விரைவில் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேற போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ஐக்கிய தேசிய கட்சியுடன் தாம் கூட்டு அரசாங்கத்தை செய்வதற்கான ஒப்பந்தம் இருப்பதாகவும் அதன்பின்னர் அது தொடர்பாக தீர்மானிப்போம் எனவும் அதுவரை பொறுமையாக இருப்போம் எனவும் ஜனாதிபதி தனது கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் டிசம்பர் மாதத்தில் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதால் அது முடிவடையும் வரையில் தற்போதைய அரசாங்கத்தை தொடருவதற்கு ஜனாதிபதியும் , பிரதமரும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஜனவரி மாதம் முதல் தனித்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது. -(3)