Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தன்னிலை விளக்கமும் தமிழரசுக் கட்சியும்

தன்னிலை விளக்கமும் தமிழரசுக் கட்சியும்

நரேன்-

கடந்த மாதம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வடமாகாண சபை விவகாரம் ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தபோதும் அதனையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள் இன்னமும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் குறிப்பாக முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டவர்கள் மக்களின் எழுச்சி காரணமாக தன்னிலை விளக்கம் கொடுக்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு செயற்பட்டவர்கள் மக்கள் முன் தோன்றுவதற்கும், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும் முடியாத நிலையில் ஓடியொழிய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே மக்கள் மத்தியில் செயற்படாதவர்களாகவும், மக்களின் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்களாகவும் இருந்த இவர்கள் மக்கள் தங்களை தேடி வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் மத்தியில் இருந்து கிட்டதட்ட ஒரு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. தன்னிலை விளக்கம் அளிப்பதில் வடமாகாண சபையின் தவிசாளரும், தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆன சீ.வீ.கே முன்னிலை வகிக்கிறார்.

யாழ் நீர்வேலியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கேள்வி நேரக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீ.வீ.கே தன்னிலை விளக்கம் அளிக்கையில், ‘ ‘சம்மந்தரின் கைகளில் சிங்கக் கொடி திணிக்கப்பட்டதைப் போன்று எனது கைகளில் நம்பிக்கையில்லா பிரேரணையின் கோப்பு திணிக்கப்பட்டது. அந்தவிடத்தில் வேறுவழியின்றி நான் அதை ஏற்றுக் கொண்டு ஆளுனரிடம் கையளித்தேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘ கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் என்னுடைய பதவி நிலை கருதி நான் முதலாவது நபராக கையெழுத்து இடமாட்டேன்’ என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அவைத் தலைவர் திரு சிவஞானத்தின் கூற்றில் இருந்து தான் வகிக்கும் பதவி நிலையினுடைய தன்மையை அவர் நன்கு உணர்ந்திருப்பதையும், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றில் தான் கையெழுத்து இட முடியாது என்பதையும் அறிந்தவராகவே காணப்படுகிறார். இவை அனைத்தையும் மீறி கட்சியின் நிர்பந்தத்தினால் தான் நான் அதை செய்தேன் என்றும் விளக்கமளித்துள்ளார். வடமாகாண சபையின் முதலாவது ஆட்சி காலத்திலேயே சபையின் மான்புகள், விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக தனிநாடு கோரி நடத்திய ஒரு போராட்டத்திற்கு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்றதே மாகாண சபை முறைமை. இன்று சமஸ்டி கோரி போராடி வரும் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் அந்த மாகாணசபை முறைமையை அவமதித்திருப்பதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார்கள்.

மாகாணசபை அமர்வுகளில் நான்கு அமைச்சர்களும் ஊழல் புரிந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த விடயங்களை சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி நிவர்த்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது கைகூடாதவிடத்து சபையில் விவாதித்து இருந்தனர். அதன் பின்னரும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே முதலமைச்சர் ஒரு விசாரணைக்கழுவை நியமித்தார். அந்த விசாரணைக்குழு இரண்டு அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோக மோசடிகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களை பதவி விலகக் கோரியதுடன், ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சியமளிக்க ஒருவரும் வரவில்லை என்ற காரணத்தை காட்டி விசாரணைக் குழு அவர்களை விடுவித்து இருந்தது. ஊழல் மோசடி விசாரணை என்பது ஒரு அரசியல் ரீதியான பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் ஊழல் புரிந்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களை நிர்வாக ரீதியில் கண்டறிய வேண்யது மாகாண சபையினதும், அதன் நிர்வாகத்தினதும் பொறுப்பாகும். சாட்சிகள் முன்வரவில்லை என்ற ஒரு காரணத்திற்காக நீதிமன்றத்தில் வழங்கப்படுகின்ற தீர்ப்பு போன்று இரண்டு அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் விசாரணைக்குழுவிற்கு தலைமை தாங்கியவர்கள் ஒரு நீதிபதியாக இருந்து தான் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சாட்சிகள் முன்வரவில்லை என்பதற்காக அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பது பொருளாகிவிடாது. முதலமைச்சருக்கு அந்த அமைச்சர்கள் ஊழல் புரிந்துகிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரம் இருந்ததன் காரணமாகவே இரண்டாவது விசாரணையை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். தாங்கள் நிரபராதிகள் ஆக்கப்பட்ட பிறகு ஏன் மற்றொரு விசாரணை எனக் கேட்பவர்கள், தாங்கள் நிரபராதிகள் என்பதை அனைத்து இடத்திலும் நிரூபிக்க ஏன் தயங்குகிறார்கள் என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. மேலும், விசாரணைக்கு உத்தரவிட்ட உடனேயே சம்மந்தப்பட்ட அமைச்சுக்களில் இருந்து சில கோப்புக்கள் மாயமாகியுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இரு அமைச்சர்களை காப்பாற்றுவதற்காகவே முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்களும், எதிர்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வடமாகாண சபை தவிசாளரின் கைகளினால் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் மக்கள் அனைவரும் முதலமைச்சரின் பின்னால் அணிதிரண்டனர். இதனால் முதலமைச்சரின் மீது தமிழ் மக்களின் அனுதாபமும், ஆதரவும் திரும்பியது. தனி நபர்களாகவும், அமைப்புக்களாகவும் அணிஅணியாக மக்கள் முதலமைச்சரை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் மாற்று தலைமை ஒன்று ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதன் காரணமாக அது நிறைவேறி விடுமோ என்ற அச்சம் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டது. இந்த எழுச்சி காரணமாகவே நம்பிக்கையில்லா பிரேரணை செயலிழக்கச் செய்யப்பட்டது.

தற்பொழுது முதல்வருக்கு எதிராக செயற்பட்டவர்கள் தமது அரசியல் இருப்பை காப்பாறிக் கொள்ள தன்னிலை விளக்கமளிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கமளிக்கும் அனைவருமே தாங்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு இப்படி நடந்து கொண்டதாக கூறுகின்றனர். அப்படியென்றால், தமிழரசுக் கட்சிக்கு முதல்வரை பதவி நீக்க வேண்டிய தேவை ஏற்கனவே இருந்ததா…?, அதற்காக இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனரா என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகின்றது. முதலமைச்சரை பதவி விலகச் செய்ய வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு ஏன் வந்தது..? அதற்கு மாகாண சபையின் தவிசாளரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏன் வந்தது…? என்பதும் விடை காண வேண்டிய கேள்வி.

சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியிலும் இலங்கை அரசாங்கத்தின் உயர் பீடத்திடமும் முதலமைச்சர் தொடர்ந்தும் மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பிலும், மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும், மக்கள் நலன்சார்தே கருத்துக்களை முன்வைத்து வருகிறார். மறுபுறத்தில் கட்சித் தலைமை அரசாங்கத்துடன் இணைந்து நெருங்கி செயற்படும் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தைப் போலவேஇ தமிழ் தேசியச் கூட்டமைப்பின் தலைவருக்கும், அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் நட்புறவு நிலவுகிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. இதனால் தமிழ் மக்களின் அபிலாசைகளும், எதிர்பார்ப்புக்களும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் தன்னிடம் வருவோரிடம் அவ்வாறு தெரிவித்து வருகின்றார்.

முதலமைச்சரின் இந்தச் செயற்பாடு கட்சித் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சித் தலைமை கருதுகிறது. தனக்கு போட்டியாக மாற்றுத் தலைமை ஒன்று உருவாகுவதை சம்மந்தர் ஒருபோதும் விரும்ப மாட்டார். ஆகவே, முதலமைச்சரை தன்னுடைய பிடிக்குள் வைத்துக் கொண்டு அவரது தனிப்பட்ட செல்வாக்கை இல்லாது ஒழிக்கும் முயற்சியிலேயே சம்மந்தர் ஈடுபடுவார். இந்த பின்னனியிலேயே சிவஞானத்தின் தன்னிலை விளக்கத்தையும் அணுக வேண்டியுள்ளது.

விரைவில் தேர்தல் அறிவிப்பு வரும் தருணத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்றும், இன்னும் பல விடயங்களில் நாம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் சுயாட்சி அலகை பெற்றுக் கொள்வதில் இருந்து நாம் பின்னிற்க மாட்டோம் என்றும் அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சம்மந்தர் கூறியிருக்கிறார். பேரவைக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு எதிராகவும் இதுவரை காலமும் எடுத்திருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி அவர்களுக்களின் கருத்துக்களை பிரதிபலித்து இருப்பதில் இருந்து சம்மந்தர் என்ன சொல்ல முயல்கிறார்…?

தற்போதைய சூழலில் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. மக்களின் முழுக்கவனமும் முதலமைச்சர் மாற்றுத் தலைமைக்கு தலைமை தாங்க முன்வரவேண்டும் என்பதில் குவிந்துள்ளது. இந்த விடயத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதைக் கூட அறிந்து கொள்வதற்கு கூட மக்கள் அக்கறை காட்டவில்லை. இந்த எழுச்சியே சம்மந்தரையும், தமிழரசுக் கட்சியினரையும் நிலை குலையச் செய்துள்ளது.

தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எத்தகைய காத்திரமான பங்களிப்பையும் செய்யாத தமிழரசுக் கட்சியும், கூட்டமைப்பின் தலைவரும் அரசாங்கத்திளற்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகவும், கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்ற கருத்துக்களை மக்கள் ஒரு நகைச்சுவையாகவே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவற்றை நிறைவேற்றுவதற்கு எத்தகைய காத்திரமான பங்களிப்புக்களை செய்யப் போக்கின்றார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமே.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *