Search
Wednesday 26 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் 16-ந்தேதி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த போது டெல்டா மாவட்டங்களை மிகக்கடுமையாக சேதப்படுத்தியது.நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன. புயல் சீற்றத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.

டெல்டா மாவட்டங்களில் சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள், தென்னை, வாழை மரங்கள் முற்றிலுமாக அழிந்தன. அதுபோல சுமார் 57 ஆயிரம் குடிசை வீடுகளும் சேதம் அடைந்தன. 21 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்தன.

வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டது. இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இழந்த டெல்டா மக்கள், தற்போது தான் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடுத்தர வசதி கொண்ட மக்கள் புயலால் சேதம் அடைந்த தங்களது வீடுகளை தாங்களே பழுது பார்த்துள்ளனர். ஆனால் நிரந்தர வருவாய் இல்லாத ஏழைகள், முற்றிலும் சேதம் அடைந்த குடிசை வீடுகளை மீண்டும் கட்டிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

குடிசை வீடுகளை புதிதாக கட்டவும், சீரமைக்கவும் கடன் வாங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய பரிதாப நிலையில் உள்ள ஒரு ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே விற்ற அவலம் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காரிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற கூலித் தொழிலாளிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவரது இரண்டாவது மகன் பெரமையா. இவனுக்கு 12 வயதாகிறது.

தினமும் கூலி வேலை செய்து பிழைத்து வந்த நிலையில் மாரிமுத்துவின் குடிசை வீடு, கஜா புயலால் முற்றிலும் அழிந்து போனது. புதிய குடிசை வீடு கட்ட அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அடகு வைத்து பணம் புரட்டவும் அவரிடம் எதுவும் இல்லை.

மகன் மட்டுமே இருந்த நிலையில், அவனை தற்காலிகமாக விற்று பணம் பெற ஏழை தினக்கூலித் தொழிலாளியான மாரிமுத்து முடிவு செய்தார். அதன்படி 3 வாரங்களுக்கு முன்பு 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி ஒரு பண்ணைத் தோட்டத்து முதலாளியிடம் விற்று விட்டார்.

நாகை மாவட்டத்தில் பனங்குடி என்ற கிராமத்தில் ரெட்டி திருவாசல் தெருவைச் சேர்ந்த பண்ணைத் தோட்டத்து உரிமையாளர் சந்துரு என்பவர் அந்த சிறுவனை வாங்கி இருந்தார். அந்த சிறுவனை அவர் பண்ணைத் தோட்டத்து வேலைகளில் ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு மட்டுமின்றி ஆடு மேய்க்கும் வேலையிலும் அந்த சிறுவன் ஈடுபடுத்தப்பட்டான்.இந்த நிலையில் பனங்குடி பண்ணையில் 12 வயது சிறுவன் கொத்தடிமை போல வேலையில் உள்ளதாக சிறுவர்கள் நல அதிகாரிகளுக்கு 1908 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் வந்தது. இதையடுத்து கடந்த 22-ந்தேதி மாவட்ட அரசு அதிகாரிகளும், சைல்டு லைன் உறுப்பினர்களும் அந்த பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.

அப்போது 12 வயது சிறுவன் பெரமையா கொத்தடிமை போல இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். பிறகு அந்த சிறுவன் நாகை உதவிக் கலெக்டர் கமல்கிஷோர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.201812281146564752_1_00gaja._L_styvpf

அங்கு அவனிடம் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கஜா புயலால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு சோகம் காரணமாக அந்த சிறுவனை அவனது பெற்றோரே விலை பேசி விற்று விட்ட அவலம் நடந்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த சிறுவன் நாகையில் உள்ள சிறுவர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கடந்த திங்கட்கிழமை அந்த சிறுவனை விடுவிப்பதற்கான சான்றிதழை நாகை உதவி கலெக்டர் அமல்கிஷோர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் தஞ்சை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டான். அங்கு அவன் சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளான்.இதற்கிடையே ஏழ்மையைப் பயன்படுத்தி அந்த சிறுவனை விலைக்கு வாங்கியது குறித்து நாகை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கிய பண்ணைத் தோட்ட உரிமையாளர் சந்துரு மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர்கள் சட்டம்-1976ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அந்த சிறுவனின் தந்தையிடமும் அரசு அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.அப்போது மாரிமுத்து கூறுகையில், “கஜா புயலால் எங்கள் வீடு தரைமட்டமாகி விட்டது. அதை பழுது பார்க்க எங்களிடம் எந்த பணமும் இல்லை.வயல்களிலும் வேலை வாய்ப்பு இல்லை. எனவே தான் இந்த முடிவு எடுக்க வேண்டியதாகி விட்டது. எனது மகனை அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தால் இதை செய்தேன்” என்றார். (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *