Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்?

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்?

யதீந்திரா

கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சிக்கு ஒரு நீண்ட வரலாற்றுண்டு. 1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி 1970கள் வரையில் தீர்மானகரமான ஒரு கட்சியாக இருந்தது உண்மைதான். இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவல்ல பிரதான கட்சியாக தமிழரசு கட்சியே இருந்தது. ஆனால் 70களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தனித்து எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியை நிறுவிய, செல்வநாகமே தமிழரசு கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை நோக்கிச் செல்ல முற்பட்டார்.
இதன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தின் பின்னர், தமிழரசு கட்சி செயலிழந்துபோனது. இல்லாமலே போனது. அவ்வாறு செயலிழந்துபோன கட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே ஒட்சிசன் கொடுத்து மீளவும் உயிர்ப்பித்தனர். அந்த விடுதலைப் புலிகள் இயக்கம், அழிந்துபேகானது நல்ல விடயம் என்று இப்போது சம்பந்தன் கூறுகின்றார். 2004இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, கிட்டத்தட்ட 27 வருடங்களின் பின்னர், தமிழரசு கட்சியும் அதன் சின்னமான வீடும் மீளவும் தமிழ் மக்களுக்குள் தலைநீட்டியது. கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பு என்னும் பெயரில், தமிழரசு கட்சியே தமிழ் மக்கள் சார்பிலான அரசியலை தீர்மானித்துவருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நினைவுகொள்ளப்பட்டிருக்கின்றது. இதிலுள்ள சுவார்சியமான விடயம் என்னவென்றால், தமிழரசு கட்சி தமிழ் அரசியலிலிருந்து இல்லாமல் போன காலத்தையும் சேர்த்தே நினைவுகொள்ளப்பட்டிருக்கின்றது.

அரசியல் கட்சிகள்தான் ஒரு நாட்டின் – ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் முகங்களாக இருக்கின்றன. ஒரு நாட்டில் அரசியல் கட்சிகள் எந்தளவிற்கு சுதந்திரமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுகின்றனவோ அந்ளதவிற்கு, அந்த நட்டில் ஜனநாயக அரசியல் செழிப்பாகவும் பலமாகவும் இருக்கின்றன என்பது பொருளாகும். ஆனால் இந்த அளவீடு வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கும் ஒரு மாதிரியாக இருப்பதில்லை. ஜனநாயக அரசியலில் கட்சிகளின் பங்கு என்பது ஒரு நீண்ட விவாத்திற்குரியவை. ஆனால் இலங்கை நிலைமையில் கட்சிகளின் பங்கை ஆராய்கின்ற போது, இன ரீதியான வேறுபாடுகளை கருத்தில் கொண்டே நோக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் அரசியல் கட்சிகள் என்பவை ஒரு தெளிவான இலக்கை கொண்டிருக்கின்றன. இந்த அளவுகோல் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தாவிட்டாலும் கூட, தமிழ்த் தேசிய அரசியலை இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் கட்சிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

இன்று தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளுமே ஒரு இலக்கின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. அதாவது, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கில், தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதற்காக போராடுவதுதான் இந்தக் கட்சிகள் அனைத்தினதும் நிலைப்பாடு. தமிழரசு கட்சியின் அங்கூரார்ப்பன கூட்டத்தின் போது, செல்வநாயகம் கூறியதை இப்போது எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது சந்தேகமே! நாங்கள் ஒரு இலட்சியத்திற்காக பயணிக்கின்றோம். அதில் நாங்கள் வெற்றிபெறுவதற்கு எல்லாம் வல்ல கடவுள் எங்களுக்கு உறுதுனையாக இருப்பார் என்று நம்புகின்றோம். ஒரு வேளை நாங்கள் இதில் தோல்வியுற்றால், எங்களின் இளைய தலைமுறை எங்கள் பதாகைகளை சுமந்துசெல்லும். செல்வநாயகம் மறைந்து 27 வருடங்களாகின்றன. செல்வாயகத்தின் நம்பிக்கைக்கும் இன்றைய தமிழசு கட்சிக்கும் அதிக வித்தியாசம் உண்டு.

70 வருடங்கள் அரசியலில் பயணித்ததை நினைவு கூர்கின்ற போது, முக்கியமாக கேட்க வேண்டிய கேள்வி இந்த 70 வருடங்களில் நாம் மக்களுக்காக எதை அடைந்தோம்? எங்களால், நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரரீதியில் முன்னோக்கி பயணித்திருக்கின்றனரா? அவ்வாறு நிகழவில்லை என்றால் ஏன் நிகழவில்லை? எந்த இடத்திலெல்லாம் நாங்கள் தோற்றிருக்கின்றோம்? ஏன் நாங்கள் தோற்றோம்? ஏன் எங்களால் தொடர்ந்தும் எதனையும் அடைய முடியாமல் இருக்கின்றது? இது தமிழரசு கட்;சிக்கு மட்டுமல்ல தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் கட்சியால் குறிப்பிட்ட சூழலை கையாள முடியாமல் போகும் போது, ஒன்றில் அந்தக் கட்சி, புதிய சவால்களுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும் அல்லது அந்தக் கட்சியை கலைத்துவிட்டு புதிய ஒன்றை நோக்கிச் செல்ல வேண்டும். 70 ஆண்டுகள் தொடர்பில் பேசுகின்ற போது, தங்களின் தோல்வி தொடர்பிலும் ஒரு கட்சி சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு அந்தக் கட்சியின் இன்றைய தலைவர்கள் தயாராக இல்லை. பொதுவாகவே தமிழ்ச் சூழலில் சுயவிமர்சனம் என்றவுடன் எல்லோருக்குமே அச்சம் ஏற்பட்டுவிடுகின்றது. உண்மையில் சுயவிமர்சனம் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தேவையான ஒன்று. முக்கியமாக ஒவ்வொரு தோல்விகளின் போதும் அரசியல் கட்சிகள் தங்களை புதுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய சூழலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் அரசியல் சூழலில் இது அரிதாகக் கூட நிகழ்வதில்லை. இதனால் மீண்டும் மீண்டும் தோல்வி அனுபவமே கிடைக்கின்றது.

ITAK

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகளை நினiவு கொள்கின்ற போது அந்தக் கட்சியினர் ஒரு விடயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த 70 வருடங்களில் தமிழரசு கட்சி அதிகம் சிதைவுற்றிருப்பதும், அதன் தனித்துவங்களை இழந்திருப்பதும் கடந்த பத்து வருடங்களில்தான் நடந்திருக்கின்றது. தமிழரசு கட்சி தவறான ஒரு கடசியல்ல. அதனை உருவாக்கியவர்கள் அரசியலில் மதிப்புமிக்கவர்கள்தான். அதில் ஜயமில்லை. ஆனால் எப்போது தமிழரசு கட்சி இரா.சம்பந்தனின் தலைமையின் கீழ் வந்ததோ, அப்போதே அதன் தனித்துவம் காணாமல் போய்விட்டது. இன்றைய நிலையில் தமிழரசு கட்சியின் முத்த தலைவர் என்றால் அது மாவை சேனாதிராஜா மட்டும்தான். ஆனால் மாவை கட்சிக்குள் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்காமையால் அந்த இடத்தை சம்பந்தன் எடுத்துக் கொண்டார். மாவையின் இயாலாமைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

கடந்த பத்துவருட கால தமிழ் அரசியலானது, சம்பந்தன் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அனைத்து முயற்சிகளுமே படுதோல்விடைந்திருக்கின்றன. மேற்கு நாடுகளில் ஒரு அரசியல் கலாசாரமுண்டு அதாவது, ஒரு தலைவர் என்பவர், தனது முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவார். ஏனெனில் ஒரு விடயம் தோல்வியடைந்தால், அதற்கான முழுப் பொறுப்பும் அந்த கட்சியின் தலைவரையே சாரும். ஆனால் தமிழ் அரசியலை பொறுத்தவரையில் தோல்விக்கான காரணத்தை கொழும்பின் ஆட்சியாளர்களில் போட்டுவிட்டு, தொடர்ந்தும் கதிரையில் இருப்பது தொடர்பிலேயே தமிழ் தலைவர்கள் சிந்திக்கின்றனர். ஒரு கட்சி அல்லது ஒரு தலைவர் எத்தனை வருடங்கள் இருந்தன என்பதல்ல அவற்றின் பெருமை மாறாக, அந்தக் கட்சியின் ஊடாக, அந்தத் தலைவரின் ஊடாக மக்கள் அடைந்த நன்மைகள் என்ன என்பதுதான் முக்கியமானது. அந்த வகையில் நோக்கினால், 70 வருடங்களில் தமிழரசு கட்சி, தமிழ் மக்களுக்காக சாதித்தது என்ன? 70 வருடங்களில் சாதிக்க முடியாத ஒன்றை இனிவரப் போகும் காலத்தில் எவ்வாறு சாதிக்க முடியும்? கடந்த எழுபது வருடங்களில் தமிழ் கட்சிகளால் மாகாண சபையை (13வது திருத்தச் சட்டம்) தாண்டி பயணிக்க முடியவில்லை. அந்த மாகாண சபை கூட, தமிழரசு கட்சியினால் வரவில்லை. ஆயுதப் போரட்ட இயக்கங்களினால் வந்தது. அதிலும் முக்கியமாக பலரும் பொறுப்பெடுக்க அஞ்சிய காலத்தில், துனிந்து அதனை பொறுப்பெடுத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கே அதில் அதிக பங்குண்டு. 13வது போதுமானதல்ல என்பது வேறு விவாதம் ஆனால் அதன் போதைமைகளை தாண்டி ஏன் இன்றும் பயணிக்க முடியவில்லை. இத்ததனை கட்சிகள் இருந்தும், உலகெல்லாம் சத்தமிட்டும் ஏன் எதுவும் நிகழவில்லை? அவ்வாறாயின் எங்கு பிரச்சினையின் வேர் இருக்கின்றது? எனவே இந்தப் பின்புலத்தில், தமிழரசு கட்சி தன்னை மாற்றிக்கொள்ளாமல், தொடர்ந்தும் ஒரு கட்சியாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்? இந்தக் கேள்வி, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுக்குமானதுதான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *