Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழர்களுக்காக போராடக்கூடிய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பே –ஜனா

தமிழர்களுக்காக போராடக்கூடிய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பே –ஜனா

வடகிழக்கில் தமிழ் மக்களுக்காக போராடக்கூடிய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வினைப்பெற்றுக்கொள்ள பாடுபட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை மாலை ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரபலமாகவுள்ள ஒரு சில முக்கிய பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலை அதிபர்கள் பெரும் சவால்களை சந்தித்துவருகின்றனர்.

பெற்றோர் தமது வசதிகளுக்கு ஏற்றாற்போல் பிரபல பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்துகின்றார்களே தவிர தமது பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகளில் கற்பிக்கவிட்டு அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களையும் ஊக்கப்படுத்தி பிரதேச பாடசாலையினையும் அபிவிருத்திசெய்யும் நடவடிக்கைகள் மிகவும் குறைவான நிலையிலேயே இருக்கின்றது.

பாடசாலைகளை பெற்றோர் நம்புவதை விட தனியார் வகுப்புகளை அதிகளவு நம்பும் நிலையே நிலவுகின்றது.நகர்ப்புறத்திற்கு வெளியே உள்ள பாடசாலைகள் தமது பெறுபேறுகளை அதிகரித்துகாட்டும்போது பெற்றோரும் தமது பிள்ளைகளைக்கொண்டு பாடசாலைகளில் சேர்க்கும் நிலையேற்படும்.அனைவரும் இணைந்து மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு பாடுபடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இன்று படுவான்கரை பகுதியில் உள்ள சில பாடசாலைகள் வாழ்நாளில் ஆங்கில ஆசிரியர்களை காணாத பாடசாலைகளும் உள்ளது.இந்த நிலைமை மாறவேண்டும். மாகாணத்தில் உள்ள நிர்வாகம் இதனை கண்காணிக்கவேண்டும்.ஆசிரியர்கள் மத்தியிலும் இது எங்கள் மாவட்டம் எங்கள் மாணவர்கள் என்ற மனோநிலை உருவாகவேண்டும்.

தமிழர்களைப்பொறுத்தவரையில் அவர்களுக்குள்ள ஒரேயொரு சொத்து கல்வி மட்டுமே.கடந்த காலத்தில் பல சோதனைச்சாவடிகளை தாண்டிச்சென்று கல்வி கற்கவேண்டிய சூழ்நிலையிருந்தது.முன்னர் ஆற்றைக்கடந்து பல கஸ்டங்களுக்கு மத்தியில் செல்லவேண்டிய நிலையிருந்தது.ஆனால் இந்த நிலைகள் இன்று மாற்றப்பட்டுள்ளது.

2015 ஜனவரி 08க்கு பின்னர் இந்த சூழ்நிலையில் இன்னும் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்று சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.தமிழ் பேசும் மக்களே இந்த நிலைமையினை உருவாக்கியுள்ளோம்.இந்த நிலைமையினை விரும்பாத சிலர் தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளனர்.தெற்கிலும் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு வந்துவிடக்கூடாது.பாராளுமன்றம் அரசியல்சாசன சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணமுயற்சிக்கும் வேளையில் தெற்கில் வடகிழக்கில் சில சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.

வடகிழக்கில் ஒரு சுமுகமான சூழ்நிலையிருக்ககூடாது.ஒரு பதற்றமான சூழ்நிலையில் இருக்கவேண்டும் .அதன் ஊடாக தாங்கள் அரசியல் நடாத்தவேண்டும.வடகிழக்கில் உள்ள சக்திகள் தங்களது இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற வகையில் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் வழிநடத்தல் குழுவுக்கு ஒரு தீர்வித்திட்டத்தினை வழங்கியுள்ளது மாத்திரமல்லாமல் அதற்கொரு பின்னோட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

இணைந்த வடகிழக்கில் அதிகார பரவலாக்களுடன் கூடிய சமஸ்டிக்கு ஒத்ததான தீர்வு ஒன்று வரவேண்டும்.அதன் மூலம் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.மத்திய மாகாணசபைகளுக்கு இடையே செனட் சபையொன்று இருக்கவேண்டும்.இரண்டு சபைகளுக்கும் இடையே ஏற்படும் முரண்மாடுகளை தீர்க்கும் வகையில் இந்த செனட் சபை உருவாக்கப்படவேண்டும்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பல சக்திகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது.அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கத்திற்கு வெளியேயும் அரசாங்கத்திற்கு உள்ளேயும் சில சக்திகள் செயற்பட்டுவருகின்றன.

அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். வவுனியாவில் இடம்பெற்ற வழக்குகள் பாதுகாப்பு காரணங்களை காட்டி திடீரென வவுனியாவுக்கு மாற்றியுள்ளனர்.

58 தவனைகள் வவுனியாவில் நடைபெற்றுள்ளது.பாதுகாப்பு காரணம் என்று கூறுவதற்கு எதுவும் இல்லை.நீதியமைச்சர் இலங்கை சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லையென கூறியுள்ளார்.அப்படியென்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் யார் என அவரிடம் கேட்கவிரும்புகின்றேன்.

அரசியல் ரீதியாக தமக்கு உரிமை கிடைக்காது என்று போராடச்சென்றவர்களே இன்று அரசியல் கைதிகளாக உள்ளனர்.சுமார் 130பேர் பல சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாகுமு;.

இந்த நாட்டில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத இந்தவேளையில் வழக்கு விசாரணைகள் இன்றி பலரை ஏன் வைத்திருக்கவேண்டும்.யுத்தம் முடிந்து எட்டு வருடங்கள் சென்ற பின்னரும் கைதிகளை சிறையில் வைத்திருப்பதை நான் எதிர்க்கின்றேன் என்று ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.ஆனால் அரசியல் கைதிகள் இல்லையென்று நீதியமைச்சர் சொல்கின்றார்.

இன்று இந்த அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.சகல விட்டுக்கொடுப்புகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுள்ளது.பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஒரு தீர்வினைப்பெறவேண்டும் என்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு சார்பான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுவரும்போது எவ்வாறு நாங்கள் தொடர்ந்து ஆதரவினை வழங்குவது என்பதை அரசாங்கம் சிந்தித்து பார்க்கவேண்டும்.
வடகிழக்கில் தமிழ் மக்களுக்காக போராடக்கூடிய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வினைப்பெற்றுக்கொள்ளபாடுபட்டுவருகின்றது.

FullSizeRender_1 FullSizeRender_2 IMG_8491 IMG_8492


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *