Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழர்கள் தோற்றுப் போன நாள் அல்ல மே 18

தமிழர்கள் தோற்றுப் போன நாள் அல்ல மே 18
வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் இலங்கைத் தீவு எங்கும் பரந்தும், உலகம் எங்கும் புலம்பெயர் மக்களாகப் பரவியும், வாழும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நாளைய தினம் – மே 18 ஆம் திகதி – மிக முக்கியமான ஒரு நாள். ஈழத் தமிழர் தாயகத்தின் தேசத்தின் – ஆன்மா வையே உலுக்கிப் புரட்டிப் போட்ட ஒரு தொடர், கட்டவிழ்ந்த வரலாற்றுக் கொடூரத்தின் குறியீட்டு நாள் இது. அந்தச் சரித்திரப் பிரளயத்தின் முதல் தசாப்தத்தின் – பத்து ஆண்டுகளின் – முடிவு நாள் நாளைதான்.
நீதிக்கான தமது நெடும் பயணத்தில் – அந்த நீதி யைத் தேடிய ஒரே குற்றத்துக்காக மட்டும் – நம் தமிழ் உறவுகள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு, பழி வாங்கப்பட்டு, பலி வாங்கப்பட்டு, குற்றுயிரும் குலையு யிருமாகப் பந்தாடப்பட்டு, இன அழிப்புச் செய்யப்பட்டதின் பத்தாம் ஆண்டு நிறைவின் கடைசி நாளில் இன்று நிற்கி றோம். தமது வாழ்வியல் உரிமைகளைக்  கேட்ட ஒரே குற்றத் துக்காக மட்டுமே நமது தமிழினத்தின் மீது பேரினவாதம் நடத்திய வெறியாட்டத்தின் வெற்றித் தினம் இது. ஆம். தென்னிலங்கைக்கு –  சிங்களத் தேசத்துக்கு –  இது வெற்றித்தினம். ஆனால் தமிழர் தேசத்துக்கு இது தோல்வித் தினம் அல்ல. தமிழர்கள் துவண்டு போன நாளாக இது இருக்கலாம். தமிழர்களின் வெற்றி அடியோடு முறியடிக்கப்பட்ட தினமாக இது இருக்கலாம். ஆனால் தமிழர்கள் தோற்றுப் போன நாள் அல்ல இது. முள்ளிவாய்க்கால் தமிழர் போராட்டத்தின் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தின் முடிவாக இருக்கலாம். அதுவே இன்னொரு வரலாற்று நெடும் பயணத்தின் ஆரம்பப் புள்ளியும் கூட என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அடுத்த அத்தியாயத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட முக்கிய நாளே இது. ஆனால், அந்த அத்தியாயத்தை நாம் எப்படி வரை கிறோம் – முற்கொண்டு செல்கிறோம் – என்பதுதான் கேள்வி.
சரி. முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அங்கு எழுதப்பட்டது முடிவுரையும் அல்ல. அது மற்றொரு பயணத்தின் ஆரம்பம் என்றால், இந்தப் பத்தாண்டுப் பயணத்தில் நாம் என்ன செய்திருக்கிறோம், என்ன சாதித்திருக்கிறோம் என்று புரட்டிப் பார்க்க வேண்டாமா? நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் நடுவில் – எண்ணிக்கையில் சிறிதான ஒரு தேசிய இனம் அந்தத் தீவில் தனித்து விடப்பட்ட நிலையில் – வெளி உதவி, ஆதரவு, ஒத்தாசை ஏதுமின்றி – இரும்புத் திரைக் கவசங்கள் போன்ற மறைப்புகளுக்குப் பின்னால் – உலகின் கண்களுக்கு எதுவும் தெரியாமல் உருமறைப்புச் செய்யப்பட்ட நிலையில் – பேரினவாதத்தின் பேராயு தங்களுக்கும், போராயுதங்களுக்கும் நிகராக நின்று போராடிய வீர சரித்திரத்தின் கடைசிப் பக்கங்களில் இருந்து ஆரம்பித்துள்ளது இந்தப் புதிய அத்தியாயம். மனித உரிமைகள், மனித நேயச் சட்டங்கள் ஆகியவற்றை மீறும் வகையில், கொடூர யுத்தக் குற்றங்களோடு தமிழர் தாயகம் துவம்சம் செய்யப்பட்ட கொடூரத்தில் இருந்து தொடங்குகின்றது இந்தப் புதிய அத்தியாயம். தமிழர் தேசத்தின் வாழ்வியல் பெரும் துன்பியல் அலங்கோலமாக முடிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கொடூரத் தின் அடுத்த அத்தியாயத்தை வலுவுள்ளதாக – வலிமை மிக்கதாக – நாம் முன்னெடுத்திருக்கின்றோமா என்பது தான் இன்றுள்ள கேள்வி. தமிழர் தேசத்தின் நலனை முன்னிறுத்தி அந்த அரசியல்  பயணத்தை நாம் செம்மையாக முன்நகர்த்தியிருக் கின்றோமா என்பதுதான் அந்தப் புதிய  அத்தியாயத்தின் பத்தாம் ஆண்டில் எம்மை நாமே கேட்க வேண்டிய வினா.
எந்த அரசியல் நீதிக்காக – எந்த மானுட உரிமைக் காக  – நமது உறவுகள் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள்  உயிரையும், உடலையும், சொத்துக்களையும் ஈகம் செய்து  போராடி, முள்ளிவாய்க்காலோடு மடிந்து செத் தழிந்தனரோ அந்த உரிமைக்கான குரலை இந்தப்  புதிய அத்தியாயத்தில் நாம் செம்மையாக முன்னெடுத்திருக் கின்றோமா? சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமைப் பட்டயங்கள், அடிப்படை மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு முரணாக நிகழ்த்தப்பட்ட  இந்த இன அழிப்புக்கு நீதி கேட்பதிலும், பொறுப்புக் கூறலை நிலைநாட்டச் செய்வதிலும், உண்மைகளை அம்பலப்படுத்த வைப்பதிலும் இந்தப் பத்து ஆண்டுகளில் நாம் சாதித்தவை  திருப்திப்படக்கூடி யவைதானா? நீதிக்கான மக்களின் குரலை வன்முறை மூலம் – வன்மம் மூலம் – அடக்கி ஒடுக்கி விட்டதாகப் பேரினவாதம் உள்ளூற மகிழ இடமளித்து நாம் பார்த்து நிற்பதுதான் இந்த அத்தியாயத்தில் நாம் எழுதிய வரலாற்றுச் சரித்திரமாக அமைந்துள்ளது என்பது உண்மை. எமது இனத்தின் நலனுக்காக மட்டுமே போராடி, எம்முடன் கூட நின்று முள்ளிவாய்க்கலோடு தமது இறுதி மூச்சை முடித்துக்கொண்ட உறவுகளின் கனவை நினைவாக்க தொடர்ந்து சாத்தியமான – சாத்வீகமான – வழி யில் உறுதியுடன் போராடுவதே அவர்களுக்கு நாம் செய் யக் கூடிய நியாயமான – நேர்மையான – உண்மையான – அஞ்சலியாக இருக்க முடியும்.
காலைக்கதிர் நாளிதழ் ஆசிரியர் என். வித்தியாதரன் 17.05. 2019 அன்று எழுதிய ஆசிரியர் தலையங்கம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *