Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழர் தரப்பில் அபிவிருத்தியும் உரிமையும்

தமிழர் தரப்பில் அபிவிருத்தியும் உரிமையும்

நரேன்-

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அந்த தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மறுபுறத்தில் இந்த தேர்தலை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகளும் அதேவேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்து இதனை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது. ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்க செயன்முறையில் நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலும் அந்த முயற்சியை பாதிக்கும் என்றும் அதன் காரணமாகவே தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்றும் கருத்துப்பட கூறியிருந்தார். உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்த வரையில் அந்தந்த பிரதேசங்களில் அடங்கியுள்ள கிராமங்களின் அபிருத்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக இன்னும் சொல்லப்போனால் மாகாண சபைகளை விடவும் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் சற்று கூடுதல் அதிகாரம் உள்ள ஒரு நிர்வாக கட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றங்கள் திகழ்வதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் அபிவிருத்தியை மட்டுமே இலக்காக கொண்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி போடவேண்டியதன் அல்லது பின்தள்ளிப் போட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரினுடைய கருத்தில் இருந்து இந்த உள்ளூராட்சி தேர்தல்களிலும் அபிவிருத்திக்கு அப்பால் ஒரு அரசியல் சூட்சுமம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுவே உண்மையும் கூட.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அதன் பேச்சாளர் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆகியோர் இடைக்கால அறிக்கை சமஸ்டி தீர்வை முன்வைக்கும் என்றும், அந்த அறிக்கை வந்த பின்னர் தமிழ் மக்களுக்கு தாங்கள் மேற்கொண்ட பணி எவ்வளவு சிறப்பானது என்பது புரியவரும் என்றும் தெரிவித்து வந்தனர். அந்த அறிக்கை வெளிவந்ததன் பின்னர் தமிழ் அரசியல் தளத்தில் பல்வேறு மட்டங்களில் இருந்து இடைக்கால அறிக்கைக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூவரும் தற்போது வந்திருப்பது இடைக்கால அறிக்கையே. இதில் ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ எதுவும் இல்லை. இதை வைத்துக் கொண்டு மேலும் எவ்வாறு முன்னேறிச் செல்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இத்தகைய சூழலிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான அறிவிப்பும், அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த நாட்டில் நடைபெறுகின்ற எந்தவொரு தேர்தலும் அபிவிருத்தியை மட்டும் மையப்படுத்தாமல் அதனுடன் ஒரு அரசியலும் இணைந்திருப்பதை புரிந்து கொள்ள வைக்கிறது. அபிவிருத்தியை மட்டுமே இலக்காக கொண்டிருந்தால் தேர்தல்களை பிற்போட வேண்டிய தேவை இருந்திருக்காது.

உள்ளூராட்சித் தேர்தல்கள் எந்த விதத்திலும் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனாலும் அரசியல் ரீதியில் அவர்களின் தற்போதைய நிலை குறித்த உண்மையை வெளிப்படுத்துவதாக அமைந்து விடும். புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால் அது அரசாங்கத்திற்கும், அதற்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவாக அமைந்து விடும். ஒரு புறம் அரசாங்க தரப்பு வெற்றியடைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடையுமாக இருந்தால் அது கூட்டமைப்புக்கு பாரிய பின்னடைவாக அமைந்து விடும். கூட்டமைப்பு வென்று அரசாங்க தரப்பு தோல்வி அடைந்தால், மக்கள் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்கியுள்ளார்கள் என்று கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்து இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்து வரும் தமிழ் தரப்பினரை வாயடைக்கச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பாக அமையும். இரு தரப்பும் வெற்றி பெற்றால் அரசின் தற்போதைய செயற்பாடுகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வரும் இணக்கத்திற்கும் மக்கள் அங்கீகாரம் தந்து விட்டார்கள் என்ற அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் இடம்பெறும்.

தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் அனைத்து கட்சியினரும் இடைக்கால அறிக்கை தொடர்பிலும், அரசியல் தீர்வு தொடர்பிலும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால், அவர்களின் வெற்றி, தோல்வி என்பது அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வை சிறிதளவு பாதிக்குமே தவிர, அவர்களின் நோக்கங்கள் எதிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. தமிழ் தரப்பில் மட்டும் தான் இந்த தேர்தல் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய அவர்களின் உரிமைக் குரலை நாடிபிடித்து பார்த்து ஒரு சரியான பாதையில் செல்லக் கூடிய, அதே நேரத்தில் அபிவிருத்திகளையும், முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு தேர்தலாக அமைந்திருக்கின்றது.

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வினைத்திறனுடனான, நீடித்து நிலைத்திருக்கக் கூடிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அபிவிருத்திப் பணிகள் எதுவும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மையே. யுத்தம் முடிவடைந்து எட்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட இத்தகைய அபிவிருத்திப் பணிகள் குறித்து அரசாங்கம் முறையாக சிந்தித்ததாக தெரியவில்லை. இந்த நால்லாட்சி அரசாங்கம் ஏற்பட்டதன் பின்னரும் கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைவாகவே இருந்திருக்கின்றன. மாகாண நிர்வாகத்தை முழுமையாக மாகாணத்திடம் கொடுக்காததன் காரணமாக மாகாண சபைகள் திறப்பட செயல்பட முடியாத நிலை உள்ளது. பல திட்டங்களுக்கு மத்திய அரசே நேரடியாக மூலதனத்தை செலவு செய்து தனது அபிவிருத்தியாக காட்டிக் கொள்வதுடன், மாகாண சபைகள் நிர்வாக திறனற்று இருக்கின்றன என்றும் பிரச்சாரம் செய்கிறது.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை சமூகத்தை அல்லது சிங்கள தேசிய இனத்தை பிரதிநித்துவப்படுத்துகின்ற இரண்டு பிரதான கட்சிகளும் அதன் கூட்டனிகளுமே ஆட்சி செய்வதால் அங்கு இத்தகைய நிலமை தோன்றுவதில்லை. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் எந்தவாரு சந்தர்ப்பத்திலும் தங்களால் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலையில் மேற்குறித்த கட்சிகள் முறையாக நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தடை போடுவதை காணமுடிகிறது. ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் இதனை நிரூப்பிப்பதாகவே அமைந்திருக்கின்றன. அரச நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் என்ன தான் மாகாண அரசின் கீழ் அதிகாரிகள் செயற்படுவதாக இருந்தாலும், மத்திய அரசாங்கத்தின் சுற்று நிருபங்களுக்கு ஏற்பவே அவர்கள் செயற்பட வேண்டி உள்ளது. இது நிர்வாக ரீதியில் பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக அண்மையில் மாகாண சபையின் கீழ் பணியாற்றும் அரச அதிகாரி ஒருவர் தொடர்பில் மத்திய அரசின் கீழ் நேரடியாக செயற்படும் ஆளுனர் செயற்பட்ட விதத்தை யாழ் மேல் நீதிமன்றம் கண்டித்திருந்தமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

இத்தகையதொரு நிர்வாகப் பின்னனியிலேயே உள்ளூராட்சி சபைகள் மாகாண சபையின் கீழ் இயங்குகின்றன. ஆனால், மாகாண சபைகளை விடவும் தமது பிரதேசத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு ஓரளவுக்கு இந்த சபைகளுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிகிறது. அந்த அடிப்படையில் பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதற்கேற்ற வினைத்திறன் மிக்கதும், துடிப்புள்ளவர்களுமான நபர்களை தெரிவு செய்ய வேண்டிய தேவையேயுள்ளது. ஆனால் தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரை அவர்களின் அபிவிருத்தி என்பது அரசியலுடன் இணைந்ததாக காணப்படுகின்றது. இதுவரை காலமும் தமிழர் தரப்பு அரசியல் தீர்வு, அபிவிருத்தி என்கின்ற போது அரசியல் தீர்வை முன்னகர்த்தி அதற்கான ஆணையாகவே அனைத்து தேர்தல்களையும் கையாண்டு வந்திருக்கின்றது. தற்போதைய சூழலிலும் அதுவே தேவையாகவும் உள்ளது.

ஏனெனில், தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது அபிவிருத்தியை அவர்களால் தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. மத்திய அரசாங்கம் திணிப்பதையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகவோ அல்லது மாகாண சபைகள் ஊடாகவோ அல்லது தமிழர் தாயகப் பிரதேசத்திலோ மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தியை தீர்மானிக்க வேண்டியவர்கள் அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களே. ஆனால் அதற்கு காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் சரி, தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் சரி இடம் தரவில்லை. வவுனியா பொருளாதார மத்திய நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய பேரூந்து நிலையம், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் என்பன இவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இந்தநிலையில், அரசியல் வேறு. அபிவிருத்தி வேறு என்று தமிழ் தரப்பு கருதி விட முடியாது. அரசியல் அதிகாரத்தை பெறுவதன் மூலமே அவர்களுக்கான அவிருத்தியை அவர்களால் தீர்மானிக்க முடியும். இதனால் வெறும் உள்ளூராட்சி மன்றம் என்று தமிழ் தரப்பு வரும் தேர்தலை நோக்க முடியாது. இது அவர்களின் இருப்பு, அபிலாசைகள் என்பவற்றை அடைவதற்கு ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையைப் பெறும் ஆரம்ப படிநிலை. அந்த ஆணையை வைத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை புதிய அரசியல் யாப்பு விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு திட்டம் என்பவற்றை கையாளப்போகிறது. இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய இனத்தின் அந்த ஆணையே தொடர்ந்தும் தமிழ் தரப்பின் அரசியல் நகர்வையும், அவர்களின் இருப்பையும் தீர்மானிக்கப்போகிறது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *