Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழீழம் ஜிந்தாபாத்

தமிழீழம் ஜிந்தாபாத்

ஜுட் பிரகாஷ் தனது kanavuninaivu.blogspot.com என்ற இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை 

தமக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் மீது இந்தியா தொடுத்துள்ள போர் பற்றி, பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் அளித்த கொள்கை விளக்க உரையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 “தற்கொலை தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம்” என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார். இம்ரான் கானின் இந்தக் கருத்து, தேசியத் தலைவரின் “பலவீனமான இனத்தின் பலமான தூண்களாய் நான் அவர்களை (கரும்புலிகளை) உருவாக்கினேன்” என்ற சிந்தனையோடு ஒத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஈழத் தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அகிம்சை வழியில் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை, அதில் ஆதிக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருப்பதாகவும் நம்ப வைக்கப்படும் மிகப்பெரிய சக்தி இந்தியா தான்.

அறுபதுகளில் பெரியாரும் அண்ணாவும் வழிநடாத்திய தனித் தமிழ்நாடு போராட்டமும், மொழிப் போரால் கிளர்ந்த மொழிப் பற்றும், எழுபதுகளில் இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தம்மினத்திற்கு எதிராக கட்டவிழுத்து விடப்பட்ட அநியாயங்களை அறுக்கவென வீறுகொண்டெழுந்த இளைஞர்களின் சிந்தனையிலும் பாரிய தாக்கம் செலுத்தியிருந்தது.

“அடைந்தால் தனி நாடு, இன்றேல் சுடுகாடு” என்று வீரவசனம் பேசியவர்கள், மாநில சுயாட்சிக்கு இறங்கி வந்து, தமிழ் நாட்டை பெற்றுக் கொள்ள, வல்வெட்டித்துறையில் இருந்து படகேறியவர்கள் தமிழ்நாட்டில் ஆயுதங்கள் வாங்கி பயிற்சியெடுக்கத் தொடங்கினார்கள்.

23 ஜூலை 1983ல் யாழ்ப்பாணத்தில் வெடித்த கண்ணிவெடியால் தென்னிலங்கையில் இனவாதம் தீயாக கிளர்ந்து, தமிழர்களை அடித்துக் கொன்று, அகதிகளாக வடக்கு கிழக்கிற்கும் தமிழ் நாட்டுக்கும் அனுப்ப, இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜி. பார்த்தசாரதி இலங்கையில் காலடி எடுத்து வைத்தார்.

அதே நேரத்தில், எந்த இயக்கப் படகில் ஏறுகிறோம் என்பது கூட அறியாத இளைஞர்கள், மாதகலில் படகேறி உத்தர பிரதேசத்தில் இந்திய இராணுவத்திடம் ஆயுதப் பயிற்சி பெறத் தொடங்கினார்கள்.

இந்திராவின் ஆசியுடன் இந்திய இராணுவத்திடம் பயிற்சி பெற்ற இயக்கங்களிற்கு தமிழ்நாடு தளமாகியது, மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் களங்களாகின.

1977ல் பதவியேற்ற UNP அரசாங்கத்தின் அணுகுமுறையால் இலங்கையின் பொருளாதாரம் வளம்பெறத் தொடங்கியதை முடக்கவும், இலங்கையில் அதிகரித்து வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுக்கவும், தமிழர்களின் போராட்டத்தை இந்தியா தனது ஆயுதமாக்கிக் கொண்டது.

“இந்தியா வரும்.. விடுதலை வாங்கித் தரும்” என்று நம்பியிருந்த தமிழ் மக்களின் (கெட்ட) கனவு, 1987ல் இந்திய இராணுவ வருகையோடு சுக்கு நூறாகிப் போனது.

JR ஜெயவர்த்தனாவின் நரித்தனமான இராஜதந்திர காய் நகர்த்தில் இந்திய வல்லரசு தோற்றுப் போனது, இன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறது.

1971 இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது, மேற்கு பாக்கிஸ்தான் விமானங்கள் இலங்கையில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு, கிழக்கு பாக்கிஸ்தான் (பங்களாதேஷ்) நோக்கி பறக்க அனுமதியளித்த அதே இலங்கை அரசாங்கத்திற்காக, 1987ல் கொழும்பு வந்த இந்திய பிரதமரை கொல்லத் தாக்கிய இலங்கை கடற்படை வீரன், “சூரிய வெட்பத்தில் மயங்கி விழுந்தான்” என்று அறிக்கை விட்ட அதே இலங்கை அரசாங்கத்திற்காக, தமிழர்களிற்கு எதிராக இந்தியாவின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.

ரஜீவ் காந்தியின் படுகொலை, இலங்கைத் தமிழர்களுடனான இந்தியாவின் உறவை முப்பதாண்டுகள் தாண்டியும் பாதித்துக் கொண்டிருக்கிறது, ராகுலும் ப்ரியங்காவும் குடும்பத் தொழிலை தொடர்வதால் இனியும் பாதிக்கத் தான் போகிறது.

1991ல் நிகழ்ந்த அந்த துன்பியல் சம்பவத்திற்கு பின்னர், இந்தியா தானுண்டு தன்பாடுண்டு என்று சும்மா இருக்கவில்லை. 2000ம் ஆண்டளவில் யாழ்ப்பாண நகரை மீண்டும் கைப்பற்ற நெருங்கிய புலிகளை முன்னேற விடாமல் தடுத்ததும் இந்தியா தான். ஒரு வளமாக இந்தியா முன்னேறிய புலிகளை தடுத்து வைக்க, மறுவளமாக பாக்கிஸ்தான்காரன் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்த Multi Barrel, அரியாலையில் நின்ற புலிகளை முகமாலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

2002ல் நோர்வே அனுசரணையில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க, லண்டனில் இருந்த புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை, மருத்துவ காரணங்களிற்காகவேனும் சென்னை வழியாக Transitல் பயணிக்க அனுமதியளிக்க மறுத்ததும் இதே இந்திய அரசாங்கம் தான்.

கிளிநொச்சிக்கும் கொழும்புக்கும் பறந்து வரும் நோர்வேக்காரன்கள், நாடு திரும்பும் வழியில் புதுடெல்லியை தொடாமல் மீண்டும் ஒஸ்லோ போக மாட்டார்கள். “பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு அறிவிக்கும் நோர்வே, ஜனாதிபதியாகிய என்னை சந்திப்பதுமில்லை அறிவிப்பதுமில்லை” என்று அந்நாளில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்து பேச்சுவார்த்தைகளை குழப்பியதில் முக்கிய பங்காற்றிய சந்திரிக்கா குமாரணதுங்க பின்னாளில் தனது நடவடிக்கைகளிற்கு காரணம் கற்பித்தார்.

இறுதி யுத்த காலத்தில் இந்திய மும்மூர்த்திகளும் (நாராயணன், மேனன், விஜய் சிங்) இலங்கை மும்மூர்த்திகளும் (கோத்தா, பஸில், லலித்) இணைந்து செயற்பட்டுத் தான் புலிகளை அழித்தார்கள் என்பது உலகறிந்தது. புலிகளை அழித்ததும் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழர்களிற்கு அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று, மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வைக்க இந்தியாவால் இன்றுவரை முடியவேயில்லை, இல்லை நிறைவேற்ற வைக்க விரும்பவேயில்லை.

யுத்தம் முடிந்த பின்னும், சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பி தனது குரூர முகத்தை இந்தியா திரும்பவும் ஒருமுறை நமக்கு ஞாபகப்படுத்தியது.

சீனாவின் பக்கம் மஹிந்தர் தலை வைத்து படுக்க, அவரை கவிழ்த்து மைத்ரி-ரணிலை ஆட்சிக் கட்டிலேற்றியதில் மீண்டும் இந்தியா தனது வகிபாகத்தை தக்க வைத்துக்கொண்டது. “நல்லாட்சியில் நல்லது நடக்கும், நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்வோம்” என்று தமிழர் தலைமைகளிற்கு இந்தியா அளித்த நம்பிக்கையும் காற்றோடு கலந்து விட்டது, இல்லை இன்னுமொரு முறை சிங்களத்திடம் இந்தியா ஏமாந்து விட்டது.

“இலங்கையில் ஆட்சியை மாற்ற முடிந்த எங்களால் உங்களுக்கு தீர்வை பெற்றுத் தருவது பெரிய விடயமல்ல, பொறுத்திருங்கள்” என்று புலம்பெயர் தமிழர் தரப்புகளிற்கு இந்திய தரப்புக்கள் கூறிய கதையை இன்னும் யாரும் நம்புபவார்களா?

2009ற்கு பின்னர் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எத்தனை தரம் இந்தியா எதிர்த்திருக்கிறது, எத்தனை தரம் அதை வலுவிழக்கச் செய்திருக்கிறது. கடைசியாக 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தச் சொல்லி இலங்கையை வலியுறுத்தாத ஒரே நாடு இந்தியாவாகத் தானிருக்க வேண்டும்.

ஆக, இலங்கைத் தமிழர்களிற்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத் தரவேண்டிய தார்மீக கட்பாடு இருந்தும், பெற்றுத்தரவல்ல வல்லமை இருந்தும் இந்தியா இன்றுவரை தனது தார்மீக கடப்பாட்டில் இருந்து விலகியே நடந்து கொண்டிருக்கிறது. மேற்கத்தைய நாடுகள் தமிழர்களிற்கு சார்பாக எடுத்த, எடுக்கும் நடவடிக்கைகளிற்கும் “தானும் படுக்கான், தள்ளியும் படுக்கான்” ரகத்தில் தடைகளை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

பாக்கு நீரிணையில் கடற்புலிகள் கோலோச்திய காலத்தில் இந்தியாவிற்கு இல்லாதிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் இந்தியாவிற்கு இன்று ஏற்பட்டிருப்பதற்கான காரணத்தை இந்தியா புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முனைய வேண்டும்.

எழுபதுகிலும் எண்பதுகளிலும் வளர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர், இலங்கை கிரிக்கெட் அணியை ஆதரிக்காது இந்தியாவை ஆதரித்த காலம், அவர்களிற்கு பின்வந்த சந்ததிகளில் மாறிவிட்டது. இலங்கை கிரிக்கெட் அணி தோற்க வேண்டும் என்று எண்ணிய போக்கு மாறி, இன்று இந்தியா யுத்தத்தில் பாக்கிஸ்தானிடம் அடிவாங்க வேண்டும் என்ற மனக்போக்கே, ஈழத்தமிழர்களின் சமூக வலைத்தளங்களில் பரவலாக காணக் கிடைப்பதையும் இந்தியா கருத்தில் எடுக்க வேண்டும்.

இந்தியாவை சூழ எல்லா நாடுகளும் இந்தியாவிற்கு எதிரானவையாக இருக்க, இலங்கைத் தமிழர்கள் மட்டுமே இந்திய எதிர்ப்பு குறைந்த இனமாக இருந்த காலம் மாறி வருகிறது. தமிழ்நாட்டிலும், ஜல்லிக்கட்டு, காவேரி, ஏழு தமிழர்கள் விடுதலை என்று இன்னாரென்ன பிரச்சினைகளில் இந்திய மத்திய அரசிற்கு எதிரான உணர்வுகள் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

இலங்கைத் தமிழர் தரப்பும் பாரம்பரிய இராஜதந்திர உறவாடல்களை விட்டகன்று, தங்களது நலன் சார்ந்து சில தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த முறை சம்பந்தரும் சுமந்திரனும் இந்தியாவிற்கு போகும் போது, ஒரு பொடி நடையாக இஸ்லாமாபாத்திற்கு போய் இம்ரான்கானோடு ஒரு படம் எடுத்து Twitterல் போட வேண்டும். சென்னைக்கு சாறி வாங்க போய், சரவணபவனின் தோசையைப்  பற்றி blog எழுதுவோரும், கராச்சிக்கு போய் சல்வார் வாங்கி விட்டு, லாகூர் பிரியாணி பற்றி பந்தி பந்தியாக எழுத வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான, இந்தியாவின் தார்மீக கடப்பாட்டை நிறைவேற்ற வைக்க இஸ்லமாபாத்தும் இம்ரான் கானும் உதவட்டும்.

தமிழீழம் ஜிந்தாபாத்!


One thought on “தமிழீழம் ஜிந்தாபாத்

  1. சேலம் பிந்துசாரன்

    சிறப்பு. என்னுடைய எண்ண ஓட்டகளும் உங்கள் கட்டுரை யோடு ஒத்து போகின்றது.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *