Search
Friday 25 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழே! உயிரே!

தமிழே! உயிரே!

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மொழியியலை ஆராய்ந்து, மனித இன வரலாற்றில், உலக நாகரிகத்தின் மிக உயர்ந்த தொன்மையான அழியாத பண்பாடு, தமிழர்களின் பண்பாடு என்பதை நிறுவியவர் செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவெலபில் (Kamil Zvelebil).

செக்கோஸ்லோவாகியா நாட்டில் பிறந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநரானகவும் , தமிழ், தமிழர் பற்றியும் பிறமொழியினருக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான கமில் சுவெலபில் பெயர் தமிழ் இயல் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் !

நம் தாய்மொழியாகிய தமிழுக்குப் பல சிறப்புகள் உண்டு.

உலகின் ஏழு செம்மொழிகளுள் ஒன்று தமிழ்.

தமிழின் மிகப் பழைய இலக்கண நூலாக அறியப் பட்டிருக்கும் தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது.

தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மூவேந்தர்கள் என்று அழைக்கப்பட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், பல சிற்றரசர்களும் ஆண்ட பல நாடுகளாய் விளங்கியது.

மதுரையைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் புலவர் கூடும் சங்கம் தோற்றுவித்ததாய் அறியப் படுகிறது. ஏறக்குறைய கி. பி. இரண்டாம் நூற்றாண்டுவரை, தங்கள் படைப்புகளை, புலவர்கள் சங்கத்தில் அரங்கேற்றியதாய்க் கருதப்படுகிறது.

முற்காலத்தில் அச்சிடுதல் அறியப்படாமல் இருந்ததால், பனை ஓலைகளில் புலவர்களும் அறிஞர்களும் தங்கள் படைப்புகளை எழுதினார்கள். அப்படி உருவான பல மேன்மையான இலக்கியங்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்தன.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தோன்றத் துவங்கிய நம் இலக்கியச் செல்வங்களில் இன்று காணக் கிடைப்பவை மிகச் சிலவே.

அவற்றுள் பதினெட்டு நூல்கள் பதினெண் மேல்கணக்கு என்று அழைக்கப்படுகின்றன. இவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று தொகுக்கப் பட்டிருக்கின்றன. அக நானூறு, புற நானூறு, ஆற்றுப்படை நூல்கள், நற்றிணை, குறுந்தொகை, மதுரைக்காஞ்சி போன்றவை அத்தொகுதியில் அடங்கும்.

காலத்தால் இவைகளுக்குப் பின்னால் தோன்றியதாய் அறியப்படும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாக உலக அறிஞர்களால் போற்றப் படுகின்றது. பைபிளுக்கு அடுத்து பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள்.

சங்க காலத்திற்குப் பின் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் படைக்கப்பட்டன. இவற்றுள் சிலப்பதிகாரம் சிறந்த இலக்கியச் செழுமையுடனும், உலகின் பழைமையான இசைகளுள் ஒன்றான தமிழ்ப் பண்ணிசை பற்றிய பல நுட்பங்களை விளக்குவதாயும் அமைந்திருக்கின்றது.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சைவம் வைணவம் என்ற இரு சமயச் சார்பான இலக்கியங்கள் தமிழில் தோன்றின. அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் என்ற மூன்று சைவ சமயச் சான்றோர்களின் பாடல்கள் தேவாரம் என்று தொகுக்கப்பட்டன. வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்று தொகுக்கப்பட்டன.

இவற்றைத்தவிர, மாணிக்க வாசகரின் திருவாசகம், ஆண்டாளின் திருப்பாவையும் சிறந்த இலக்கிய நூல்கள்.

வடமொழி நூலான இராமாயணத்தின் அடிப்படையில் கம்பர் படைத்த கம்ப இராமாயணம் தமிழின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளின் முதல் வரிசை நூல்களில் ஒன்று.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மறைந்த சுப்பிரமணிய பாரதியார் தத்துவம், தேசியம், தெய்வீகம், இயற்கை வருணனை, அறிவியல் பொருளியல், சமுதாயப் பொதுநோக்கு என்று பல துறைகளில் கவி பாடிய பெருங் கவிஞர். மானிடத்தின் மேன்மையைப் போற்றி வாழ்ந்த சங்க காலத்தின் இருபதாம் நூற்றாண்டு வாரிசு பாரதியார்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றி மறைந்த கவிஞர்களில் நினைவில் நிற்போரில் முதல் வரிசையில் பாரதிதாசனும் கண்ணதாசனும் காணப்படுகிறார்கள்.

அறிவியலும் பொருளியலும் உலக நாடுகளின் சக்தியைத் தர வரிசைப் படுத்துகின்ற இந்த நூற்றாண்டில் தமிழில் அறிவியல் பொருளியல் நூல்கள் உருவாதல் காலத்தின் தேவை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தம் வணிகத் திறனை வளர்த்ததனால், தமிழர்கள் உலகின் வணிக சக்தி கொண்ட இனங்களுகள் ஒன்றாக உலகெங்கிலும் அறியப்பட்டார்கள். இந்த நூற்றாண்டிலும் அத்தகு நிலைக்குத் தமிழர்கள் தங்களை உயர்த்திக் கொண்டால், தமிழ் இனம் உயர்ந்த செழிப்புறும். அதனால் தமிழ் உலகத் தலையாய மொழிகளுள் ஒன்று என்று நின்று நிலைக்கும்.

– கோ. பாலச்சந்திரன், இ. ஆப(ஓய்வு) 19/01/2020


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *