Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ்த் தேசிய அரசியல் போக்கினை சிதைத்துவிட்ட ‘விருப்புவாக்குப் போட்டி’

தமிழ்த் தேசிய அரசியல் போக்கினை சிதைத்துவிட்ட ‘விருப்புவாக்குப் போட்டி’

பொன்.எஸ்.பி.ராஜ்

வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லுவோம் என ஹம்பாந்தோட்டையில் மஹிந்த  ராஜபக்ஷ சபதமெடுக்க, என்னைப் பிரதமர் ஆக்குங்கள், நாட்டில் புதுயுகம் படைப்பேன் என சஜித் பிறேமதாஸா சூளுரைக்க, போட்டிக்கு நம்மாலும் சரித்திரம் படைப்போம் என திருமலையில் முழங்க என இவை அனைத்தும் கேட்க காதுக்கு குளிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் நிறைவேற முடியாத கனவாகவே முடியும் என்பதே திண்ணம்.

தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் தமிழின அழிப்பை மறந்துவிடப் போவதில்லை. போர்க்குற்றவாளிகளிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தகுந்த பாடங்களை கற்பிக்கும் வகையில் தர்ம அடிகொடுத்தே வருகின்றார்கள். அதன் விளைவாகவே மஹிந்த முகாமினர் வடக்கு, கிழக்கில் தாமரை மொட்டில் களமிறங்கினால் எங்கே தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தில் சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்திலும் தனியாக களமிறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உளுந்து வடை கேட்டுச்சாம் என்கிற மாதிரி கடந்த ஐந்தாண்டுகள் ரணில் மைத்திரி கூட்டிற்கு முண்டுகொடுத்து வடக்கு, கிழக்கின் நிலை பரிதாபமாக உள்ள நிலையில சம்பந்தர் இம்முறை ராஜபக்ச முகாமிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளமை வேடிக்கையானதாகும். இத்தகைய ஒத்துழைப்புக்கள் அல்லது ஆதரவுகள் நிபந்தனையின் பெயரில் வழங்கப்படும் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வது இலகுவானதாக இருக்கும். அதனையும் சம்பந்தர் தலைமையில் நிகழுமாயின் அதனை தமிழ் மக்கள் நம்புவதற்கு  தயாராக இல்லை.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் போக்கினை சிதைத்து தென் இலங்கையினதும் ஆதிக்க சக்திகளதும்  நலன்களிற்கு ஏற்றவகையில் நகர்த்திக் கொண்டு செல்லும் சம்பந்தர் இந்தியா தம் பின்னால் நிற்கிறது என்று கூறுகின்றார். சாதாரண பாமர மக்களிற்கே தெரியும் இந்தியாவின் கைப்பொம்மை மட்டுமல்ல தென் இலங்கையின் கூலி என்றும்.  அப்படி இருக்கும் போது இவர் தமக்கு பின்னால் இந்தியா நிற்கிறது என்று கூறுவதன் மூலமாக யாரை ஏமாற்ற, இப்படி சொல்ல முனைகின்றார்.

புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பு தலைமை புலி நீக்க அரசியல் செய்ய முற்பட்ட போது தொடங்கி கூட்டமைப்பின் பிளவு (2010) தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களிலும் கொள்கை முரண்பாடுகளால் பிளவுகளை சந்தித்தே வந்துள்ளது. இந்தியாவினதும்   இலங்கையினதும்  கைக்கூலிகளாக மாறிய கூட்டமைப்பு தலைவர்கள் இந்தியா ஒருபக்கமும் மறுபக்கத்தில் ரணில் விக்கிரமசிங்ஹவுமாக அவர்கள் விரும்பும் வகையிலான அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகரும் வகையில் தீவிர தமிழ்த் தேசியவாதிகளை கட்சிக்குள் இருந்து களையெடுத்து விட்டு இலகுவாக நகர்கின்றார்கள்.

இதன் மூலமாக எதிர்ப்பு அரசியலை முற்றுமுழுதாக கைவிட்டு இணக்க அரசியலிற்குள் அடியெடுத்து வைத்த தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவரையில் சாதித்தவை என்ன? இணக்க அரசியல் என்பதைக் காட்டிலும் சரணாகதி அரசியல் என்று சொல்வதே சாலப் பொருத்தமானது. ஏனெனில் இணக்க அரசியலின் போதும் ஓரளவிற்கு ஏனும் தாம் சார்ந்த சமூகத்தின் நலன்களிற்காக பேரம்பேசலில் ஈடுபடுவார்கள்.

இத்தகைய சரணாகதி அரசியல் மூலமாக கூட்டமைப்பினர் சாதித்தவை என்ன? தமிழினத்தை சிங்கள பௌத்தர்களிடம் அடகுவைத்தமை, சர்வதேச விசாரணையினை இல்லாமல் செய்து தமிழின அழிப்பு போர்க்குற்றவாளிகளை சர்வதேச அரங்கில் காப்பாற்றியமை, சமஷ்டிஎன பூச்சாண்டி காட்டி ஒற்றையாட்சி முறைக்குள் அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு புதிய யாப்புருவாக்க முயற்சியினை மேற்கொண்டமை என முற்றுமுழுதாகவே தமிழ் மக்களிற்கு எதிராகவே தமிழ் அரசியல் தலைமை கடந்த காலத்தில் செயற்பட்டதன் விளைவே இன்று மாற்று அரசியல் தலைமை தொடர்பான தேடல்களும் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எழுவதற்கு காரணமாகும்.

இதுவரையில் தமிழ்த் தேசிய அரசியலிற்கும் அபிவிருத்தி அரசியலிற்கும் இடையிலான போட்டியாகவே தேர்தல் களம் காணப்பட்ட நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய அரசியலிற்குள்ளேயே மூன்று முனைப்போட்டி காணப்படுகிறது. அது மட்டுமன்றி அபிவிருத்தி அரசியல் கோஷத்திற்கும் கணிசமான வாக்குகள் சிதறும் என்பதால் கடந்த முறை போன்று இம்முறை எந்த தரப்பினராலும் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்பதால் ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெறும் வேட்பாளராக நிச்சயம் தாங்களே இருக்க வேண்டும் எனில் கட்சிக்குள் விருப்பு வாக்கில் முன்னிலை வகிக்க வேண்டிய தேவை உள்ளது. கட்சி அரசியலைவிட இனத்தின் அரசியலைவிட சுய இலாப அரசியலுக்குள் அகப்பட்டு அழிவை நோக்கி பயணிக்கின்றனர்.

அபிவிருத்தி அரசியலை நோக்கமாகக் கொண்ட கொழும்பு மைய தேசியக் கட்சிகளும் அவர்களின் பங்காளிக் கட்சிகளும் இத்தகைய விருப்பு வாக்குப் போட்டியில் மல்லுக்கட்டுவது வேடிக்கையான ஒன்றல்ல. ஆனால் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்குடன் பாராளுமன்றில் தமது தனித்துவமான பலத்தைக் காட்ட வேண்டிய தமிழர் தரப்பு உரிமைக்கான போராட்டத்தை ஜனநாயக அரசியல் மூலமாக வென்றெடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் தம்மை குழுவாகப் பலப்படுத்தும் பொருட்டு கணிசமான ஆசனங்களே வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பொருட்படுத்தாமல் ஆசனங்கள் கட்சிகளிற்கு இடையில் சிதறடிக்கப்படவுள்ள நிலையில் தமது கட்சிக்கு கிடைக்கப்போகும் ஒரு சில ஆசனங்களிற்குள் தமது தனிப்பட்ட வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளமையினையே வேட்பாளர்களிற்கு இடையிலான முரண்பாடுகள் காட்டி நிற்கின்றன.

இன்று தவறினால் எள்ளெண்ணை எரிக்க முடியாது என்று தலைப்புச் செய்தி போட்ட குறிப்பிட்ட நாளிதழ் இன்று சொந்தக் கட்சியினரையே தாக்கி தலைப்புச் செய்தி போடுகின்ற போது அதன் நாற்றம் தமிழ் இனத்தின் இருப்பு முழுவதும் நிகழவாய்ப்புள்ளது.

ஆக மொத்தத்தில் கூட்டமைப்புக்குள் மட்டும் தான் விருப்பு வாக்குப் போட்டி என்றில்லை தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்திற்குள்ளும் அத்தகைய விருப்பு வாக்குப் போட்டி உள்ளது. இத்தகைய விருப்பு வாக்குப் போட்டி தமிழ்த் தேசிய அரசியலை எதிர்கால சந்ததி பழிசொல்லும் என்பதை தமிழ்த்தேசியவாதிகள்(?) கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் தமிழ்த் தேசிய அரசியலில் தனிநபர்களிற்காக வாக்களிப்பதில்லை மாறாக தமிழ்த் தேசிய அரசியலை தாங்கிச் செல்லக்கூடிய கட்சிக்கே வாக்களிப்பார்கள். எனவே தனிநபர்களை விட கட்சிகளே முதன்மை பெறுகின்றது என்பதால் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமே தவிர கட்சிக்குள் மற்றையவர்களை விட தாம் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்றோ அல்லது சக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கிலோ செயற்படுவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

இத்தகைய விருப்பு வாக்குப் போட்டிகளிற்கும் முரண்பாடுகளிற்கும் யுத்தத்திற்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் போக்கில் ஏற்பட்ட விடயம் இனத்திற்கு  இழைக்கப்படும் துயரமாகவே அமையப் போகிறது. இத்தகைய போலிகளை தகர்த்து சரியானவர்களை நோக்கி தமிழ் மக்கள் செயல்பட தயாராக வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *