Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ்மொழி மூலமான மருத்துவக் கல்வியின் அவசியம்

தமிழ்மொழி மூலமான மருத்துவக் கல்வியின் அவசியம்

மருத்துவர். சி. யமுனாநந்தா
மனிதனின் தொடர்பாடலுக்குத் தாய்மொழி மிகவும் இன்றியமை-யாதது. தாய்மொழியினாலேயே ஒரு மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவான். குறிப்பாக ஒருவர் நோயுற்றபோது அவருடனான தொடர்பாடல் அவரது மொழியிலேயே அமைதல் வேண்டும். தமிழர்களாகிய நாங்கள் தமிழ்மொழியிலேயே நோயாளர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளவும், சுகநலம் தொடர்பான விழிப்பினை ஏற்படுத்துவதற்கும் தமிழ்மொழி மூலமான மருத்துவக் கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படாமை மற்றும் ஊக்கப்படுத்தப்படாமை மிகவும் பின்னடைவாகும்.

தமிழ் இனத்தின் வரலாற்றுக்காலம் முதல் தமிழ்மொழியில் பல மருத்துவ இலக்கியங்கள் காணப்படுகின்றன. திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் (95ம் அதிகாரத்தில்) உடலுக்கு நோய் வராது காக்கும் முறைகள் கூறப்பட்டுள்ளன.

‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று’ திருக்குறள் (941)

அதாவது மனிதனுக்கு உணவும் அவனது செயல்களும் அதிகரித்தாலும் குறைந்தாலும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நோய்களும் துன்பம் செய்யும். அடுத்து

‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ திருக்குறள் (947)

என மாறுபாடு இல்லாத உணவைத் தன்மனம் விரும்பிய அளவில் அன்றி, நோய் வராத அளவில் ஒருவன் உண்பானாயின் அவனுக்கு நோய்த் தாக்கம் வராது.

மேலும்
‘நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்’. திருக்குறள் (948)

நோய் இன்னது என்று அறிந்து, அதற்குரிய காரணத்தை அறிந்து, அந்நோயினைத் தீர்க்கும் வழியினை அறிந்து, தவறு நிகழாது மருத்துவம் செய்தல் வேண்டும்.

‘உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்’. திருக்குறள் (949)

நோயுற்றவனது பருவத்தை அறிந்து அவனுக்கு உண்டான நோயின் அளவினை அறிந்து, நோயை நீக்குவதற்கு ஏற்ற காலத்தையும் அறிந்து, யாவும் பொருந்துமாறு மருத்துவம் செய்தல் வேண்டும்.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துளைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து’. திருக்குறள் (950)

நோய் குணப்படுத்தலில் நோயுற்றவன், மருத்துவன், ஏற்றமருந்து பக்கத்தில் இருந்து மருந்தினைக் கொடுத்து உதவுபவன் ஆகிய நான்கு நிலைகளும் அவசியம். சித்த மருத்துவ நூல்கள், தமிழர்களின் உணவுப் பாரம்பரியமான நூல்கள், சிறந்த மருத்துவப் பொக்கிஷங்கள் ஆகும்.

மனித உடலினுள்ளேயே ஐம்புலன்களும் உணர்வுகளின் ஒடுக்கம் நிகழும் என்பதனை சிவஞானபோதம் எடுத்துக் கூறுகின்றது.

‘உளது இல் தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா’. (சிவஞானபோதம் 3)

மனம், சித்தம், அகங்காரம், புத்தி ஆகிய அந்தக்கரணங்களையும் நனவு, கனவு, துயில், உறக்கம், பேருறக்கம் என்ற அஞ்சவத்தைகளையும் ஆன்மா உடையது. இவற்றினையே இன்றைய நரம்பியல், உளமருத்துவ ஆய்வுகள் ஆராய்கின்றன.

‘அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று அவை
சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது
அமைச்சரசு ஏய்ப்பநின்று அஞ்சவைத்தைத்தே'(சிவஞானபோதம் 6)

தமிழ்மொழியிலே மெய்யியல், உளவியல் தத்துவங்கள் உள்ளமைக்கு சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் என்பன சிறந்த எடுத்துக்காட்டுக்கள். அடுத்து மூச்சுப்பயிற்சி தொடர்பான சித்தநூல்கள் சிறந்த விஞ்ஞானக் கருவூலங்களாகும்.

திருமந்திரத்திலே உயிரை இயக்குவது பிராணன் என்றும், பிராணன் சுழுமுனையில் மின்னல் கொடிபோல தோன்றும் ஒளியொடு பொருந்தும். பிராணன் பேரொளி வடிவுடையது (மின்காந்தசக்தி). பிராணன் 513 நாடிகளிலும் உயிர்ப்புடன் கலந்து சுழுமுனையில் ஒருமுகப்பட்டுச் சுழலுகின்றது. மூச்சுப்பயிற்சி, யோகாசனம், தியானம் என்பன ஆத்மாவினைக் கட்டுப்படுத்துகின்றன என திருமூலர் அருளியுள்ளார்.

‘தாரத்தினுள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தினுள்ளே பரத்துள் எழுந்திட
வேரறு வொன்றி நின்று எண்ணும் மனோமயம்
காரறு போலக் கலந்தெழு மண்ணிலே’ (திருமந்திரம் 1405)

இன்றைய விஞ்ஞானிகள் விந்து சூழுடன் இணையும்போது ஒளிகாழும் தன்மையினை அவதானித்துள்ளனர். இதனை திருமூலர்,

‘சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்று மவ்வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்வரம் எட்டும் எண்சாணது வாருமே’ (திருமந்திரம் 464)

இவற்றினையே தற்கால மேலைத்தேய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சிகளுக்கு உசாத்துணையாகப் பயன்படுத்துகின்றனர். உண்மையில் பல ஆங்கில மருந்துகளுக்குப் பதிலாக மூலிகைகளை எமது ஆரோக்கியத்துக்குப் பயன்படுத்தலாம். தமிழ்மொழி மூலமான மருத்துவக்கல்வி இன்மையினால், எமது பண்டைய சிறப்புக்களை நாமே இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளது.

அடுத்து ஆங்கில மருத்துவக்கல்வியினைக் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி போன்றவர்கள் தமிழ்மொழியிலே கற்பிப்பதற்காக, பல நூல்களைத் தமிழ்மொழியிலே மொழிபெயர்த்துள்ளனர். அவர்களது முயற்சியினை ஏனையவர்கள் தொடரவில்லை. மேலும் இலங்கையில் தமிழ்மொழி மூலமான மருத்துவக் கல்விக்கு அரச அங்கீகாரம் கிடைப்பதற்கு தமிழர்கள் முயற்சி எடுக்காமையும் ஓர் பின்னடைவே.

தமிழ்மொழி மூலமான மருத்துவக் கல்வியினாலேயே தமிழ் பிரதேசங்களில் போதிய மருத்துவர்கள் சேவையாற்றக்கூடிய சூழல் ஏற்படும். மேலும் துணை மருத்துவக் கல்வியும் தமிழ்மொழி மூலம் ஏற்படுத்தப்படல் வேண்டும். அடுத்து மருத்துவ தமிழ் மொழிபெயர்புக் கல்வியினையும் பட்டப்படிப்பில் உட்புகுத்துதல் அவசியம். இவை தமிழில் புதிய மருத்துவ விஞ்ஞானக் கலைச்சொற்களை உருவாக்க மிகவும் இன்றியமையாதவை ஆகும். கணனிக்கற்கையில் தமிழ்மொழிமூலமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு விருத்தி செய்து வருவதுபோல் மருத்துவத்துறையிலும் புதிய மருத்துவக் கலைச்சொற்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

அடுத்ததாக தற்போது மருத்துவக் கல்வியைப் பயிலும் மாணவர்-களுக்கு குறிப்பாக யாழ். மருத்துவபீடம், மட்டக்களப்பு மருத்துவபீடம் என்பவற்றில் தமிழ் இலக்கியமும் ஒரு பாட அலகாகக் கற்பிப்பதால் மருத்துவ மாணவர்களின் தொடர்பாடல் ஆற்றல் அதிகரிக்கும். வெறுமனே விஞ்ஞானக் கல்வியைப் பெற்று மருத்துவர்களாக உருவாக்கம் பெறுதல் மருத்துவ சமூகமயப்படுத்தலில் பின்னடைவினையும், வர்த்தகமயப்பட்ட சூழலையும் உருவாக்கி உள்ளது. திருக்குறள், திருமந்திரம், திரிகடுகம், அகநானூற்றுப் பாடல்கள், திருவாசகம், பகவத்கீதை என்பன மருத்துவச் சமூகவியலுக்கு மிகவும் அவசியமானவை.

மேனாட்டு அறிஞர் சாஸ்திரங்களைத் தமிழ்மொழியில் ஆக்கிடல் வேண்டும் என்று பாரதி புரட்சி செய்தார். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர்கள் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவது எப்படி எனப் பல ஆய்வுக் கட்டுரைகளை எமக்குத் தந்துள்ளனர். அவ்வாறே பேராசிரியர் நந்தி அவர்களும் மருத்துவத் தமிழ் இலக்கியத்திற்கு ஆணித்தரமான பங்களிப்பினை நல்கினார். அடுத்து மருத்துவர் முருகானந்தன் அவர்கள் பருத்தித்துறையிலும் கொழும்பிலும் இருந்து பல மருத்துவ விளக்கக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக உருவாக்கி உள்ளார். மேலும் இவற்றினை இணையத்திலும் தொடர்பாடலுக்கு உருவாக்கி உள்ளார். பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும் பல உளவியல் நூல்களை தமிழில் உருவாக்கி உள்ளார்.

மருத்துவமொழியில் தமிழின் பிரயோகத்தினை அதிகரிப்பதற்கும், தமிழ்மொழியில் மருத்துவ இலக்கியத்தின் செழிப்பினை அதிகரிக்கவும், தமிழ்மொழியிலான மருத்துவ ஆற்றுப்படுத்தலை அதிகரிக்கவும் மருத்துவக் கல்வியைத் தமிழ்மொழி மூலம் வழங்குவதற்கான வழிவகைகளை நாம் ஆராய்தல் அவசியம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *