Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் அரசியலில் என்னதான் நடக்கிறது…?

தமிழ் அரசியலில் என்னதான் நடக்கிறது…?

நரேன்-

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருமா…?, வராதா…? என்ற பட்டிமன்றங்களுக்கு ஒரு மாதிரியாக விடை கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் அணிகள் மாறுமா…? அல்லது பழைய அணிகளே தொடருமா…? என்ற கேள்விகளுக்கு முழுமையாக பதில் கிடைக்காவிட்டாலும், ஒரளவுக்கு ஊகிக்கக் தக்க வகையில் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்காக அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் போதும் அதன் பிறகு அண்மையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டதிருத்தங்களும் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவை நிறைவேறுமா..?, நிறைவேறாதா…? என்ற வாதப்பிரதிவாதங்கள் அதியுச்சத்தில் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது. பின்னர் அவைகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. இதனைப் போன்றே புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையானது அரசியல் நிர்ணய சபையில், குறிப்பிட்ட தினத்தில் முழுமையாக விவாதம் இடம்பெறுமா….?, இடம்பெறாதா…?, யாரும் குழப்புவார்களா….? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் அது நிர்ணயிக்கப்பட்ட காலத்தை கடந்தும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பார்க்கின்ற போது தென்னிலங்கை அரசியல் சமூகம் எதிர் எதிராக செயல்படுவது போல் தோன்றினாலும், இறுதியில் ஒன்றுபட்டு நிற்பதை அவதானிக்க முடிகிறது.

இந்தப் பின்னனியிலேயே புதிய சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு டிசம்பர் 11 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அணியினர் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து விடுவார்கள். அதனால் மைத்திரியின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அஞ்சியிருந்த நிலையில், மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஏறக்குறைய சாத்தியமாகும் சூழலும் உருவாகியுள்ளது. இந்தச் சூழலானது 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலை மீள நினைவுபடுத்துகிறது.

ஒட்டுமொதத்தில் இந்த நாடு சுதந்திரம் அடையும் தருவாயில் இருந்து இன்று வரையில் உருவாக்கப்பட்டு வருகின்ற அரசியல் சாசனங்களும், சாசன திருத்தங்களும், சட்டங்களும், சட்ட திருத்தங்களும் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கும், எதிர்கட்சியில் இருப்பவர்களின் குரல்களை மௌனிக்கச் செய்வதற்குமே பயன்பட்டு வருவதை மேற்சொன்ன விடயங்களின் மூலமும், கடந்த கால அனுபவத்தில் இருந்தும் நிரூபணமாகிறது. இவைகள் எதுவுமே ஒரு தொலைநோக்கு பார்வையுடன் நாட்டின் ஸ்த்திரத்தன்மையையும், இறையாண்மையையும், சுயசார்ப்பு தன்மையையும் கட்டிக் காட்டு ஒட்டுமொத்த இலங்கையையும் இறைமையுள்ள ஒரு நாடாக உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஏற்ற வகையில் அன்று முதல் இன்றைய அரசியல் தலைவர்கள் வரை ஒருவருமே சிந்திக்கவில்லை என்பதும் புலனாகிறது.

அத்துடன், இதுவரை காலமும் தேசிய சிறுபான்மை இனமான தமிழ் தேசிய இனத்தை தமது சிங்கள பௌத்த பெரும்பான்மை மேலாதிக்க வாதத்துடன் அடக்கி, ஒடுக்குவதற்காகவும் இந்த நாட்டில் அரசியல் யாப்புக்களும், சட்டங்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும், அதைப் பயன்படுத்தி எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காகவும், அவர்களை மௌனிக்கச் செய்வதற்கான வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. குட்டக் குட்ட குனிபவன் முட்டாள். குனிய குனிய குட்டுபவனும் முட்டாள் என்னும் பழமொழிக்கு ஏற்ப தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ் தேசிய இனம் தலைநிமிர்ந்தது. தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக குட்டுபவனின் கைகளை தமிழ் தேசிய இனம் பிடிக்கத் தொடங்கியது. இது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு குட்டுபவனை தடுத்தவனின் கைகள் வெட்டப்பட்டுள்ளன. இருப்பினும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இப்பொழுது வாய் ஒன்றின் மூலம் மட்டுமே உரிமைக் குரலை எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், தமிழ் தலைமைகள் எந்தளவிற்கு சரியாக தமது வாயை பயன்படுத்தியுள்ளன என்பதே இங்குள்ள கேள்வி.

ஆட்சி மாற்றத்திற்கு பங்களிப்பு செய்ததில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட இருந்த நெருக்கடியை குறைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்து, அதற்கு இந்த அரசாங்கத்தையும் இணை அணுசரனை வழங்கச் செய்து அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதே பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி இந்த அரசாங்கதிதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் காப்பாற்றி வருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல்முறையில் அங்கத்துவ கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமலேயே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இருவரால் மட்டுமே கருமங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாகவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த அடிப்படையில் கடந்த ஆண்டு முழுபாராளுமன்றமும் அரசியல் யாப்பு நிர்ணய சபையாக மாற்றம் பெற்று, புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவும், அந்த வழிநடத்தல் குழுவிற்கு உறுதுணையாக ஆறு உபகுழுக்களும் நியமிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. புதிய அசியல் யாப்பின் மூலம் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும், அதற்கான சமிக்ஞைகள் இடைக்கால அறிக்கையில் வெளிப்படுத்தப்படும் என்றும் கூட்டமைபின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆகியோர் கருத்துரைத்து வந்தனர். இடைக்கால அறிக்கையில் அத்தகைய விடயங்கள் வெளிப்படாமையினால் பலரும் அதிருப்தி தெரிவித்திருத்து வரும் நிலையில், இது வெறும் இடைக்கால அறிக்கை தான். இதை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் நடத்தப்படுகின்ற விவாதத்தின் மூலம் கருத்துக்களைப் பெற்று இதனை மேலும் முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.

அண்மையில் அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்ற விவாதங்களை தொகுத்து நோக்குகின்ற போது, அந்தக் கட்சிகள் தாம் முன்வைத்த கருத்துக்களை ஏனைய கட்சிகள் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்கின்றன என்பது தொடர்பாகவோ அல்லது ஒட்டுமொத்த இடைக்கால அறிக்கையில் உள்ள இந்த விடயங்களை என்ன காரணத்திற்காக ஆதரிக்கின்றோம் அல்லது எதிர்க்கின்றோம் என்றும், இத்தகைய திருத்தங்கள் இருந்தால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என்றும் நாட்டின் மீது கரிசனை செலுத்தி, நாட்டின் ஸ்திரத்தன்மை மீது அக்கறை கொண்டு கருத்துரைத்ததாக தெரியவில்லை. உரையாற்றிய அனைவரது குரல்களும் வரப்போகும் தேர்தலுக்கு முகம் கொடுப்பதை மையமாகக் கொண்டே அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த விவாதத்தின் பின்னர் அரசியல் வழிநடத்தல் குழு இன்னும் எத்தனை சந்திப்புக்களை மேற்கொண்டு, ஒரு வரைபு யாப்பை எவ்வளவு காலத்தில் அரசியல் நிர்ணயசபையிடம் கையளிக்கப் போகிறது என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜனாதிபதி இந்த விவாதங்களுக்கு அப்பால் சர்வகட்சி மாநாட்டையும், சர்வ மதத்தலைவர்கள் மாநாட்டையும், புத்திஜீவிகள் மாநாட்டையும் தனித்தனியாக நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றார். இந்நிலையில் புதிய அரசியல் யாப்பின் மூலம் தங்களுக்கு நிரந்தர விடிவு கிட்டும் என்று எதிர்பார்த்து இருந்த தமிழ் சமூகத்திற்கு ஏமாற்றமே இப்போது மிஞ்சியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு விதத்தில பார்க்கின்ற பொழுது இதுவரை காலமும் சிங்கள தேசியவாதம் தமிழ் சமூகத்தை நேரடியாக தாக்கியது. இப்பொழுது தமிழ் தேசிய இனத்தின் கைகளைக் கொண்டே அவர்களது கண்களை குத்திக் கொள்ள வைக்கிறதா என்றுடி சந்தேகிக்க வைத்துள்ளது.

தங்களது அபிலாசைகளுக்கும், விருப்பங்களுக்கும் புதிய அரசியல் யாப்பில் இடமளிக்காமல் போய்விடுமோ என்றும், தொடர்ந்தும் நாம் எம்மவர்களாலேயே பேரினவாதத்தின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுமோ என்றும் அச்சம் கொள்ளும் நிலை தமிழ் சமூகத்திடம் தோன்றியுள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் புதிய தலைமைக்கான அறைகூவலும், அந்த அறைகூவலின் பின்னால் இளைஞர்களும், அணிதிரண்டு இருப்பதை காணமுடிகிறது. நாளாந்த பிரச்சனைகளை முன்வைத்து வீதிகளில் இறங்கியிருக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சமூகம் உள்ளிட்ட அனைத்து தமிழ் சமூகமும் இன்றைய தமிழ் தலைமையான கூட்டமைப்பின் மீது பரவலாக அதிருப்தி கொண்டிருக்க கூடிய நிலையில் அதனை சரி செய்வதற்கான முயற்சிகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதாகவே அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் போக்கானது தமிழ் மக்களின் விடிவுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதை கூட்டமைப்பின் பெயரால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அதற்கு ஆதரவு அளித்து வரும் சக்திகளும் உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இது.

தமிழரசுக் கட்சியின் நடவடிக்கையும், அணுகுமுறைகளும் வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தற்போதுள்ள பங்காளிக்கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியங்களை இல்லாமல் செய்திருக்கின்றது. உட்கட்சி ஜனநாயகம் இன்றியும், மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதும் ஏதேச்சதிகார போக்கில் அந்தக் கட்சி செயற்படுவதானது தமிழ் மக்களின் ஒற்றுமை என்ற கோசத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது. புத்திஜீவிகள், கல்வி சமூகம், மாணவர் சமூகம், தொழிலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் ஒருமித்து நிற்கும் நிலையில் அவர்களது மனநிலைகளை புரிந்து கொள்ளாது கூட்டமைப்பு தலைமை தனித்து பயணிப்பதாகவே தெரிகிறது. குறைந்தபட்சம் தமது பயணத்தின் பாதை குறித்து கூட தம்மை தெரிவு செய்த அல்லது தாம் சார்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியிருக்கின்றது.

பிரதிநிதித்துவ வாய்ப்புக் கோரிய குடியேற்றவாசிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க சுதந்திரப் போராட்டம் முதல் உலகில் நடந்த அத்தனை சுதந்திரப் போராட்டங்களின் போதும், புரட்சிகளின் போதும் அந்த மக்களை வழிநடத்திய தலைமைகளால் தமது பயணத்தின் இலக்கு, பாதை குறித்து தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இதனாலேயே மக்கள் எழுச்சியும், ஆதரவும் அத்தகைய போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் அதிகரித்தது. இதன் மூலமே அந்தப் போராட்டங்களும், புரட்சிகளும் வெற்றியடைந்ததான வரலாறுகளை உலகம் கண்முன்னே காட்டியிருக்கின்றது. ஆனால் அத்தகைய உலக வரலாறுகளையோ அல்லது இலங்கையின் கடந்த கால படிப்பினைகளையோ புரிந்து கொண்டவர்களாகவோ அல்லது அதில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டவர்களாகவோ தற்போதைய தமிழ் தலைமைகள் செயற்படுவதாக தெரியவில்லை. இதுவே தமிழ் தேசிய இனத்தை இன்று வீட்டில் இருந்து வெளியேற்றி வீதிகளில் இருக்கச் செய்திருக்கின்றது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *