தலைப்பு செய்திகள்

தமிழ் தேசியத்தை காக்கும் மாற்றுத் தலைமைக்கான இன்றைய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் அது என்றும் கிட்டாது

தமிழ் தேசியத்தை காக்கும் மாற்றுத் தலைமைக்கான இன்றைய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் அது என்றும் கிட்டாது

லோ. விஜயநாதன்

ஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வடபகுதியை நோக்கிய தென்னிலங்கை அரசியல்வாதிகளின் படையெடுப்புக்களும் அபிவிருத்திக்கான புதிய பல கவர்ச்சிகரமான அறிவுப்புக்களும் வெளிவரத்தொடங்கியுள்ளன. அத்துடன் “மறப்போம், மன்னிப்போம், இரு இருதரப்பும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று வடக்குக்கு சென்று தொடர் இன அழிப்பை மறைப்பதற்கான இறுதி அத்தியாயத்தை எழுதுவதற்கான ஆலோசனை ஒன்றை பிரதமர் முன்வைத்துள்ளார். உண்மையை கண்டறியும் தென் ஆபிரிக்க மாதிரி இலங்கைக்கு பொருத்தம் அற்றது என்று கடந்த சில வருடங்களாக தமிழ் தரப்புக்கள் காரணங்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றன. எமக்கு முற்றிலும் பொருத்தம் அற்ற இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை யுத்தம் முடிவடைந்த கையோடு கொண்டுவந்திருந்தால் கூட ஒருவேளை நேர்மையான முயற்சியாக நாம் பார்த்திருக்கக்கூடும். ஆனால், யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் ஆபத்து நிறைந்தது என்று விமர்ச்சிக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு யோசனையாக்களுக்கு தெற்கில் கடும் எதிர்ப்புக்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு பற்றி அரசாங்கம் கூடுகிறது. இந்த நிலைமை குதிரைக்கு முன்பாக வண்டியை கட்டுவதற்கு ஒப்பானது. கடந்த 5 வருடங்களாக புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை காட்டி தீர்வு வருகிறது தீர்வு வருகிறது என்று தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதன் உண்மையான சாயம் வெளுத்து கடும் அதிருப்தியை மக்கள் மத்தியில் சந்தித்திருக்கும் நிலையில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கத்துடன் கைகோர்த்து மேற்கு பொருள்கொண்டிருக்கும் முயற்சி தான் இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு.

மறுபுறத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் முப்படை தளபதிகள் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதைபோல் தெற்கில் நடந்த கடத்தல், கப்பம், கொலைகளுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன்ர். இங்கு ஆச்சரியப்படவேண்டிய விடயம் என்னவென்றால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்துவிட்டு அதற்கெதிராக உலகநாடுகளை திரட்டி போர்தொடுத்து அவர்களை அழித்துவிட்டு பயங்கரவாதிகளும் செய்தார்கள் நாங்களும் செய்துள்ளோம் என்று கூறுவதாக இது உள்ளது. இங்கு குற்றம் தொடர்பில் இருவரும் சமநிலையில் பார்க்கப்படவேண்டும். ஆனால் உரிமை என்று வரும்போது ஒருவர் பயங்கரவாதியாகவும் தடைவிதிக்கப்பட்டவராகவும் பார்க்கப்படுகிறார். மற்றையவர் இறைமை உள்ள நாடாக கருதப்படுகிறார். அதாவது, விடுதலைப்புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட நிர்ப்பந்தித்து விட்டு அவர்களும்தானே பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் நாங்கள் ஈடுபட்டால் என்ன என்ற பாணியில் அரசாங்கம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இறுதிக்கட்ட போரில் சிறிலங்கா அரசால் நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் இத்தகைய பாரிய தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மிகவும் பலவீனமாக நிலையில் முன்னெடுக்கப்பட்ட சிறிய தாக்குதல்களையும் சமப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசாங்கம்.

Elukathamil batticaloa 6

அரசாங்கத்தின் இந்த பரப்புரைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் பேச்சாளர் சுமந்திரன் தலைமையில் ஒத்து ஊதிவருகிறது. கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் வெறும் தலை ஆட்டிகளாக செயற்படுகிறார்கள். தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவதாக வாக்கு கேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இன்று செயற்படுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் தமக்கிடையே ஏட்டா போட்டியாக செயற்படுகிறார்கள். மாவை சேனாதிராசா, சரவணபவன், அடைக்கலநாதன் ஆகியோர் தமது பிள்ளைகளுக்கு மத்திய வங்கியிலும், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் வேலைகளை பெற்றுக்கொடுத்திருப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வேலையற்ற பட்டதாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலங்களை மீட்பதற்காக வருடக்கணக்கில் வீதிகளில் நின்று போராடிவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிதளவேனும் கடந்த 5 வருடங்களில் சிறிதளவேனும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. பல தடவைகள் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டும் காணாமலும் இருந்துவருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் சிறிது காலமே இருப்பதால், தமது பதவிகள் பறி போவதற்கு முன்னர் தம்மையும் தமது குடும்பத்தவர்களையும் உறவினர்களையும் பலப்படுத்தும் தீவிர முயற்சிலைலேயே கூட்டமைப்பு உறுப்பினர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துவருகின்றனர்.

அதேவேளை, மக்களை ஏமாற்றும் வகையில் கவர்ச்சிகரமான அபிவிருத்தி அறிவிப்புக்களையும், முன்னர் குறிப்பிட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழு போன்ற பிரசார கதைகளையும் கூறிவருகின்றனர்.
ஆட்சி நிறைவுக்குவர ஒருவருடகாலமே உள்ள நிலையில் சிறிலங்காவின் திறைசேரியும் முழுமையாக காலியாகின்றது. ஆனால், பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு தாங்கள் விமானங்களை பறக்க விடப்போவதாகவும் காங்கேசன்துறையிலிருந்து கப்பல் சேவைகளை ஆரம்பிக்கப்பபோவதாகவும் புனை கதைகள் கூறப்படுகின்றன. இவையெல்லாம், கூட்டமைப்பின் கடந்த 5 வருட விசுவாசத்துக்கு நன்றிசெலுத்தும் வகையில் அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு கூறி வரும் கதைகளே அன்றி வேறு எதுவும் இல்லை. எவையுமே நடக்கப்பபோவதில்லை. ஆனால், தேர்தல் நடைபெறும் வரை இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதுபோல அடிக்கடி பிரதமரும், அமைச்சர்களும் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்வார்கள், பல கதைகளை கூறுவார்கள்.

வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் என்ற பெயரில் இன்று வவுனியா சிங்களபிரதேசத்தில் பொருளாதார மத்திய நிலையம் கட்டப்பட்டுள்ளது. அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்ட சிங்கள விவசாயிகளின் நலன்களை மையப்படுத்திய திட்டமே இது என்று முன்னர் ஒரு கட்டுரையில் இப்படித்தான் நடக்கப்போகின்றது என்று நான் எழுதியிருந்ததை இந்த சந்தர்ப்பதில் நினைவுபடுத்துகிறேன். ஆகவே வடக்கு கிழக்கில் நடைபெறும் ஒரு சில அபிவிருத்தி திட்டங்களும் இவ்வாறான உள்நோக்கங்களுடனேயே நடைபெறுகின்றன.

விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள் எனக் கூறிக்கொண்டே புலி நீக்க அரசியலையும் தமிழர்களின் அடிப்படை உரிமை கோட்பாடுகளையும் இல்லாமல் சேயும் நடவடிக்கைகளை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கச்சிதமாக செய்துள்ளது. சிறிலங்கன் என்ற சிங்கள தேசியத்துக்குள் தமிழ்தேசியத்தை மூழ்கடிப்பதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைத்திருக்கிறது. சிறிலங்காவின் அரச தலைவர், பிரதமர் ஆகியோர் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்று கூறினாலும் அது சாத்தியமானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகிறது. புதிய அரசியலமைப்பு ஏற்கனவே உள்ள ஒற்றை ஆட்சி கட்டமைப்பைவிட ஆபத்தானது என்று தமிழ் கல்விமான்கள் கூறினால் அது சமஷ்டி தீர்வு அடிப்படையிலானது என்றுகூறுகிறது. தமது நடவடிக்கைகள் எப்படி இருந்தாலும் பெரும்பணச்செலவில் தேர்தல் காலங்களில் பொய்களை கூறி பரப்புரைகளை செய்து கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டது அதனால் அதனை அழித்துவிடாதீர்கள் என்று கூறினால் மக்கள் குருட்டுத்தனமாக தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே கூட்டமைப்பு இருக்கிறது.

wigneswaran

கூட்டமைப்பின் பேச்சாளர் தான் கூறுவதை மக்கள் நம்ம்பும் வகையில் பேசும் ஆற்றல் கொண்டவர். அவர் பேச்சை கேட்பவர்கள் இவர் சொல்வது சரிதான் அநியாயமாக கூட்டமைப்பின் மீது பழி போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் புதிய அரசியலமைப்பில் பெளத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு இணங்கியமை குறித்தும் கிழக்கை வடக்குடன் இணையாமல் நிரந்தரமாக பிரிப்பதற்கான உபாயமாக அருகருகே உள்ள மாகாணங்கள் விரும்பினால் இணையலாம் என்று உத்தேச அரசியல் அமைப்பு முன்மொழிவில் குறிப்பிடப்பட்டு கிழக்கை ஏனைய நான்கு சிங்கள மாகாணங்களுடன் இணைப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என்றும் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு இன்னமும் கூட்டமைப்பின் பேச்சாளரால் பதில் வழங்க முடியவில்லை. இதைத்தான் சிங்கள அரசுடன் இணைந்து தெரிந்துகொண்டே செய்துவருகிறோம் என்ற அவரது சுய புரிதல் இதற்கு காரணமாக இருக்கக்கூடும். எமது பிரதிநிதிகளே எமக்கு எதிராக குழிபறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும்போது எமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லையென்று நாம் எவ்வாறுசர்வதேச சமூகத்தை குறை கூற முடியும்? ஜெனீவாவில் நாம் எதைக் கேட்கமுடியும்?

ஆகவே தான் கடந்த சில வருடங்களாக பேசப்பட்டுவரும் மாற்றுத் தலைமையின் முக்கியத்துவம் இன்று பெரிதும் அவசியமானது என்று உணரப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை முற்றிலும் தமிழர் அரசியலில் இருந்து நீக்குவது ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமை ஆகியுள்ளது. நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் இருந்தே அவர் மாற்றுத் தலைமையை ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் விடுக்கப்பட்டது. இன்று விக்னேஸ்வரன் தலைமையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்று தலைமை உருவாகிவரும் நிலையில் மாற்று தலைமைக்கான கோரிக்கைகளை முன்வைத்தவர்களே தமது கட்சி நலன்களை முதன்மைப்படுத்தி சிறுபிள்ளைதனமான வியாக்கியானங்களை இன்று செய்து வருவது கவலைக்குரியது. மாற்றுத் தலைமையை முதலில் இல்லாமல் செய்வோம் கூட்டமைப்பை பின்னர் பார்த்துக்கொள்வோம் என்ற சுயலாப அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியலினால், விக்கினேஸ்வரனோ சுரேஷ் பிரமச்சந்திரனோ தோற்கடிக்கப்படவில்லை. மாறாக எல்லோரும் ஒருங்கிணைந்து முன்வைத்த மாற்று தலைமை என்ற கரு கலைக்கப்படுகிறது. தேசியம் என்பது எழுத்திலும் சொற்களிலும் இல்லாது செயலில் இருக்கவேண்டும். அதனால்தான் இன்றுவரை விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் உள்ளனர். தேசியத்துக்கான ஆபத்தை உணர்ந்தே சுயநலம், பகைமை ஆகியவற்றை களைந்து எல்லோரையும் ஒரு குடையின் கீழ் விடுதலைப்புலிகள் அணிதிரட்டினர். மாற்றுத் தலைமைக்காக இன்று கனிந்துள்ள சந்தர்ப்பம் தவறவிடப்படுமானால் எக்காலத்திலும் தமிழ் தேசியத்தை மீட்கமுடியாத ஒரு நிலைமை ஏற்படும். மூலோபாய நடவடிக்கைகள் எதுவும் இன்றி செயற்படுவதனால் ஏற்படும் தற்காலிக முன்னேற்றங்கள் ஈற்றில் வெறும் கானல்நீராகவே மாறும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *