தலைப்பு செய்திகள்

தமிழ் தேசிய இனத்தின் தன்மானத்தை கேள்விக்குட்படுத்தி இருக்கும் தேர்தல்!

தமிழ் தேசிய இனத்தின் தன்மானத்தை கேள்விக்குட்படுத்தி இருக்கும் தேர்தல்!

நரேன்-

உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா…? நடக்காதா என்ற பட்டிமன்றம் ஒருவாறு முடிவுக்கு வந்து தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்குகின்றது. நாடு முழுவதிலும் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை விடவும், கட்சிகள் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளன. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி ஒருபுறமும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து மஹிந்தவுடன் இணைந்திருப்பவர்கள் மீண்டும் தமது தாய் கட்சியில் இணைந்து கொள்வார்களா என்ற கேள்வியையும், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் இழந்து போன தமது செல்வாக்கை மீளவும் மஹிந்தா கட்டியெழுப்புவாரா என்ற கேள்வியையும் தென்னிலங்கை சூழலில் இந்த தேர்தல் ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கைகள் இணக்க அரசியல் என்ற போர்வையில் மழுங்கங்கடிக்கப்படுகிறதா..? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சரிந்து வருகின்ற ஆதரவுத் தளமானது தேசிய இன விடுதலைக்கான குரல்களை விட்டுக் கொடுப்பின்றி முன்னெடுத்துச் செல்கின்ற அரசியல் கட்சிகளின் கரங்களை வலுப்படுத்துமா என்ற கேள்வியையும், இந்த உள்ளூராட்சி தேர்தல் எழுப்பியிருக்கின்ற அதேவேளையில், தென்னிலங்கை ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளாக வடக்கு, கிழக்கில் செயற்படுகின்றவர்கள் தாங்களும் தமிழ் தேசிய இனத்தின் மீது பற்றுள்ளவர்களாகவும், பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவே குரல் கொடுப்பவர்களாகவும் காட்டிக் கொள்வதன் மூலம் தென்னிலங்கை தேசியக் கட்சிகளின் ஆதரவுத்தளம் அதிகரிக்குமா என்ற கேள்வியும் தற்போது புதிதாக எழுந்துள்ளது.

TNA meeting PTKதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்த இலங்கை அரசாங்கத்தின், தற்போதைய ஜனாதிபதியாக திகழ்கின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அலுவலகத்திறப்பு விழா நிகழ்வில் விடுதலைப் புலிகளின் எழுச்சிக் கீதங்களை ஒலிக்க விட்டு வேறு எவருக்கும் இல்லாத தைரியம் தனக்கு மட்டுமே இருப்பதாகவும், எவருக்கும் இல்லாத தமிழ் தேசிய உணர்வு தனக்கு மட்டுமே இருப்பதாகவும் காட்டியிருக்கிறார். அவரைத் தவிர, வடக்கு- கிழக்கில் அந்தக் கட்சியைச் சேர்ந்த வேறு எவரும் அத்தகைய கீதங்களை ஒலிக்கச் செய்யவில்லை. அந்த பாராளுமன்ற உறுப்பினரின் செயலைப் பார்க்கின்ற பொழுது அரசாங்கத்துடன் இருந்தால் எதையும் செய்து கொள்ள முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு அமைப்பை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட நிலையில், அந்த இயக்கத்தின் பாடலை ஒலிக்கச் செய்ததன் மூலம் அரசாங்கத் தரப்பினராக இருந்தால் அவர்களை சட்டம் கட்டுப்படுத்தாதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.

அந்த பாடலை ஒலிப்பரப்ப துணிந்த அல்லது விரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியுடன் அல்லது அரசாங்கத்துடன் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கூடாது என்று வடமாகாண சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும், அந்த மக்கள் மத்தியிலேயே வசிப்பவர் என்பதையும் மறந்து ‘கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் கையொப்பம் இட்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரினால் தான் அதனை ஜனாதிபதியடம் சமர்ப்பித்து பேசுவேன்’ எனத் தெரிவித்திருக்கின்றார். இதே பாராளுமன்ற உறுப்பினர் தான், காணாமல் போகச் செய்யப்பட்ட உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்தார் என்பதும், இவரும் யாழ்ப்பாணத்தில் வசிக்கக் கூடிய ஒரு தமிழர் என்பதும் அந்த உணர்வுடன் இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒருவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த சந்திப்பின் பின்னர் தன்னுடன் புகைப்படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்த பிள்ளையின் பெற்றோரிடம் விரைவில் உங்களுக்கு பதில் தருவேன் என்று கூறிய போதிலும் இதுவரையும் ஜனாதிபதியால் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

mullai-checking-300118-seithy (2)தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதுடன், அவர்களின் பெயரால் தமது அரசியலை கொண்டு நடத்துவர்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றிருந்தாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பாராளுமன்றத்தில் முன்னர் உரையாற்றியிருந்தார். அத்துடுன் தொலைகாட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்க வில்லை என்வும், அவர்கள் தன்னை தலைவராக தெரிவு செய்யவில்லை எனவும் கூறியிருந்தார். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு முன்னாள் போராளிகள் சிலரால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சிலர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் பற்றி தமது கட்சியின் மனநிலை, கட்சி தலைவர் மற்றும் பேச்சாளர் ஆகியோரின் முடிவுகள் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வடக்கு மாகாண சபை தவிசாளருமான சீ.வீ.கே இருக்கின்றாரா என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட பாதுகாப்பு தரப்பினர் அதிகமாக நிலை கொண்டுள்ளதாகவும், அவர்களை வடக்கு- கிழக்கில் குறைக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளாலும் கோரிக்கைகள் முன்வைக்படபட்டு வரும் நிலையில் கூட்டமைப்பினர் அவர்களிக் பாதுகாப்பை கோருவது வேடிக்கையான விடயமாகவுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பு பேச்சாளருக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்று வருகின்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருபவர்களை உடல் பரிசோதனை செய்வதிலும் அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவாக பொலிசார் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இத்தகைய பாதுகாப்பு சோதனைகள் இடம்பெறுவது வழக்கம். கொழும்பில் இருந்து வடக்கு, கிழக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொள்கின்ற அனைத்து அமைச்சர்களுமே எவ்வித அச்சமின்றி இயல்பாக வந்து செல்கின்றனர். ஆனால் எந்த மக்களை வைத்து, எந்த மக்களை பிரதிநித்துவப்படுத்தி, அவர்களின் பேராதவுடன் எதிர்கட்சி தலைவர் என்கின்ற அந்தஸ்தை பெற்றனரோ அந்த மக்களிடம் மீண்டும் வாக்கு சேரிக்க வருகின்ற போது, அந்த மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்ற பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய பொலிசாரைக் கொண்டு அந்த மக்களையே சோதனை மேற்கொள்ளச் செய்வது என்பது சுயமரியரியாதைக்காக போராடும் தமிழ் தேசிய இனத்தை சினம் கொள்ள வைத்திருக்கிறது. இந்நடவடிக்கையானது தங்கள் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அந்த மக்களால் பார்க்கப்படுகிறது. மற்றுமோர் வேடிக்கை என்னவென்றால் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி 2009 ஆம் ஆண்டு அந்த போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினரும் அந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளியாக கலந்து கொண்டனர் என்பதும் அவதானத்திற்குரியது.

sumanthiran STFதமிழ் தேசிய இனம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை பயங்கவரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதனை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டு சர்வதேச சமூகத்திற்கு உறுதி மொழியும் வழங்கியிருந்தது. அதற்கு அமைவாக புதிய சட்டத்திற்கான வரைபையும் வெளியிட்டு இருந்தது. அந்த வரைவானது தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் ஆபத்தானது என்று கூட்டமைப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன் விளைவாக அந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்சொன்ன தரப்புக்கள் அனைத்துத் அரசாங்கத்தின் இந்த நிலையை ஒரு காலம் கடத்தும் நடவடிக்கையாகவே எண்ணி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர் பிரதமர் தனது பதவியேற்பின் போது இந்த நாட்டில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பேய்க்கு சமமானது. நாம் அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம். அது காலாவதியாகிவிட்டது. இனி ஒரு போதும் இதன் கீழ் ஒருவரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது ஒரு ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கும் வரை தற்போதைய சட்டம் அமுலில் இருக்கும். ஏனெனில் சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஏற்ற வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்க வேண்டும். அதனை கவனமாக செய்ய வேண்டும். கொள்கையின் பிரகாரம் இதனை நீக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்கள் அண்மையில் பாராளுன்றத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒத்தி வைப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்து தடுப்பில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுடைய விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியான முடிவுகளே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனை முன்வைத்தே அரசியல் கைதிகளும் சிறைகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதுடன், வடக்கு- கிழக்கு எங்கும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. சர்வதேச சமூகம் கூட இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இருப்பினும் அரசாங்கம் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

IMG_0089மறுபுறம், பாராளுமன்றத்திற்குள் குரல் கொடுப்பதுடன் தங்களது கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்களை அணிதிரட்டி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக தமது மக்களிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் இருப்பதைப் போன்று அந்த மக்களை யுத்தகால சோதனை கெடிபிடுகளுக்குள் மீள அழைத்துச் சென்றுள்ளதை அண்மைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒட்டுமொத்ததில் இந்த உள்ளூராட்சி தேர்தல் மூலம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் ஆளும் வர்க்கம், ஒடுக்கின்ற தேசிய இனத்தின் ஆளும் வர்க்கம் மற்றும் அதற்கு சார்ப்பாக இருக்கின்றவர்கள அனைவரும் ஒர் அணியில் திரண்டு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினதும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினதும் உரிமைக் குரல்களை நசுக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த தேர்தலானது கிராம புற உட்கட்டமைப்புக்களை கட்டியெழுப்பி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கிராமிய பொதுசுகாதாத்தை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பதிலாக ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதற்கான சாத்தியக் கூறுகளையே அதிகமாக கொண்டுள்ளது. எதிர்த்து குரல் கொடுப்பவர்களையும், ஊழல்களையும், மோசடிகளையும் அம்பலப்படுத்துபவர்களையும் எதிரிகளாக பார்கின்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. தேர்தலுக்கு பின் ஆளும் வர்க்கங்களின் உண்மையான முகங்களை இந்நாட்டின் மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே இந்த தேர்தலில் மக்கள் சிந்து வாக்களிப்பதன் மூலமே அத்தகைய அச்சுறுத்தல்களில் இருந்து விடபட முடியும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *