தலைப்பு செய்திகள்

தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றமும் வடக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் எழுச்சியும்!

தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றமும் வடக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் எழுச்சியும்!

நரேன்-

நல்லாட்சி என அழைக்கப்படும் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் முதலாவது தேர்தலாக நாடு முழுவதும் உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கிராமிய மற்றும் பிரதேச அபிவிருத்தியுடன் தொடர்புடைய இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அந்த நோக்கத்திற்கும் அப்பால் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக நோக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில் செயற்பட்டு வந்த மஹிந்த தரப்பு தனது செல்வாக்கை மீள வெளிப்படுத்துவற்கான ஒரு தளமாக இந்த தேர்தலை கையாள முயன்றிருந்தது. அதன்pபடி உள்ளூராட்சி தேர்தலில் அதிக சபைகளைக் கைப்பற்றி தென்னிலங்கை அரசியலை சூடு பிடிக்கச் செய்தும் உள்ளது. கூட்டரசாங்கம் அமைத்துள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதநதிரக் கட்சி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் பாரிய பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றன. கூட்டரசாங்கத்தின் செயற்பாடுகள் தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தும் முகமாக இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றது. இதனால் கூட்டரசாங்கத்தை கொண்டு நடந்துவது தொடர்பிலும் இழுபறி தோன்றியிருக்கிறது. மஹிந்த தரப்பால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தாமரை மொட்டு சின்னம் இன்று தென்னிலங்கை அரசியல் களத்தை ஆட்டம் காணவைத்துள்ளதுடன், சர்வதேச இரபஜதந்திரிகளும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றால் மஹிந்த தரப்பு தனது செல்வாக்கை மீள நிலைநிறுத்தும் என இப் பத்தியாளர் ஏற்கனவே சுட்டிகாட்டியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையின் ஆட்சி பீடத்தையே ஆட்டம் காணவைத்துள்ள நிலையில், வடக்கு- கிழக்கில் இதுவரை காலமும் பிரதான கட்சியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் தனது வாக்கு வங்கியில் பாரிய சரிவை சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் இரு நகரசபைகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியிடம் பறி கொடுத்திருக்கின்றது. யாழ் மாநகரசபையில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னனி கூட்டமைப்பை கதிகலங்க வைத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை முன்னகர்த்த உருவாக்கப்பட்ட ஒரு கூட்டாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை கருதி வந்தனர். இதன்காரணமாவே 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர் தமிழ் தேசிய மக்களின் அரசியல் அபிலாசைகளை இடைவதற்கான தொடர் ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்திருந்தது. இதன் மூலம் 2009 இற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அமோக ஆதரவையும் பெற்றிருந்தது. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஸ்டி முறையிலான ஆட்சிமுறை, வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமால் ஆக்கப்பட்டோரை கண்டறிதல், மக்களது காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்தே தமிழ் மக்களின் ஆணையைக் கோரியது. அதற்கு மக்களிடம் இருந்து ஆணையும் கிடைத்தது. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய கூட்டமைப்பு, அதன் பலனாக எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் உள்ளிட்ட பதவிகளையும், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டது. எதிர்க்கட்சி என்ற பெயரில் மைத்திரி – ரணில் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து வருகின்றது. அரசாங்கத்துடன் தமக்குள்ள இந்த தொடர்பைப் பயன்படுத்தி தமிழ் மக்களது நாளாந்த பிரச்சனைகளைக் கூட தீர்க்க காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் கூட்டமைப்பு தலைமை எடுக்க தவறியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் பதவியேற்று 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த நன்மைகள் எவையும் கிடைக்கவில்லை. கடந்த ஒரு வருடமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என நீதி கோரியும், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வீதிகளில் இருந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அந்த மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள கூட்டமைப்பு தலைமை காத்திரமாக உழைக்கவில்லை. சர்வதேச சமூகத்திற்கோ அல்லது இலங்கை அரசாங்கத்திற்கோ கூட்டமைப்பு தலைமை இது தொடர்பில் போதிய அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவில்லை. இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், போராட்ட களத்தில் உள்ள மக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

ஜனாதிபத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல், தேர்தல் மறுசீரமைப்பு, தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல் ஆகிய மூன்று கோரிக்கைளை முன்வைத்திருந்தார். இதில் முதல் இரு விடயங்களும் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றாவது வாக்குறுதியான தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல் தொடர்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முற்சிகள் நடைபெற்று, அது தொடர்பான இடைக்கால அறிக்கையும் வெளிவந்திருந்தது. அந்த இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி முறையிலான ஆட்சி, வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது, பௌத்தத்திற்கு முதலிடம் என கூறப்பட்டிருந்தது. தமிழ் மக்களது நீண்டகால அபிலாசைகளுக்கு மாறான இந்த இடைக்கால வரைபை தமிழரசுக் கட்சி தலைமை ஏற்றுக் கொண்டு அது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தது. இதனை வடக்கு முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, தமிழ் சட்டத்தரணிகள் சங்கம், பொது அமைப்புக்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஈபிஆர்எல்எப் என்பன கடுமையாக எதிர்த்து வந்தன. ஆனாலும் அரசாங்கத்துடன் இணைந்து அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு ஆணையாக உள்ளூராட்சி தேர்தலை தமிழரசுக் கட்சி கையாள முனைந்தது. இது தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சிக்கான எதிர்ப்பு அலை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கமும் இணை அணுசரவை வழங்கி நிறைவேற்றிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல், மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உதவியிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்த ஒரு அரசியல் அமைப்பை தீர்வாக கொண்டு வரும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் துணைபோயிருந்ததாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தமிழ் மக்கள் தெளிவடைந்தவர்களாக, தமக்கான ஒரு மாற்றுத் தலைமை பற்றிய தேடல்களை ஆரம்பித்தனர். அதுவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனி சவால் மிக்க சக்தியாக எழுச்சி பெற வழிவகுத்தது.

தமிழரசுக் கட்சியின் ஏதேச்சதிகார போக்கினால் அக்கட்சிக்கு எதிராக பங்காளிக்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வெளியேற்றமும் தமிழரசுக் கட்சியை விமர்சனத்திற்குள்ளாக்கியது. தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களது செயற்பாடும், தேர்தல் வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்வியை மக்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற கோரும் ஒரு தரப்பின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பாதிக்கப்பட்ட அதே தரப்பைச் சேர்ந்த மக்களை, பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடையவர்கள் சல்லடை போட்டு சோதனை செய்யும் நிகழ்வும் தேர்தல் நேரத்தில் அரங்கேறியது. இது தமிழ் மக்களின் தன்மானத்தின் மீது கேள்வியை ஏற்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொள்கை சார் முரண்பாட்டின் காரணமாக வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி, தமிழ் தேசிய மக்கள் முன்னனியாக செயற்பட்டு வந்தது. 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி தோல்விகளால் சளிப்படையாத கட்சியாக தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோரிக்கைகளை முன்னகர்த்தி தொடர்ந்தும் உறுதியுடன் செயற்பட்டிருந்தது. அவர்களது செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் உந்து சக்தியைக் கொடுத்திருந்தது. வடக்கிலும், கிழக்கிலும் பெரும் மக்கள் எழுச்சியுடன் மக்களது உரிமை முழக்கமாக எழுக தமிழ் நடைபெற்ற போது அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பங்களிப்பும் அதிகமாக இருந்தது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடந்த 7 வருடமாக மேற்கொண்ட தொடர்ச்சியான செயற்பாட்டின் காரணமாகவும், உறுதியான கொள்கைசார் நிலைப்பாடு காரணமாகவும், புலம்பெயர் சமூகத்தின் ஆதரவினாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி தமிழ் தேசியப் பேரவையாக இந்த தேர்தலில் சாதித்து இருக்கிறது. இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியாளர்களை அந்தக் கட்சி தன்வசப்படுத்தி இன்று கூட்டமைப்புக்கு போட்டியான மாற்று சக்தியாக வடக்கு –
கிழக்கு பிரதேசத்தில் எழுந்து நிற்கின்றது. குறிப்பாக வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 282 ஆசனங்களைப் பெற்று முதன் நிலையில் உள்ள போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி 90 ஆசனங்களை பெற்று தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் இரண்டாவது தரப்பாக எழுச்சி பெற்றிருக்கின்றது. அதிலும் சாவகச்சேரி நகரசபை, பருத்தித்தித்துறை நகரசபை என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதுடன், வேறு சில சபைகளையும் ஆட்சி அமைக்கக் கூடிய ஆதரவைப் பெறக் கூடிய நிலைக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பில் இருந்து வெளியேறி ஈபிஆர்எல்எப் கூட்டு அமைத்த தமிழர் விடுதலைக் கூட்டனியும் வடக்கில் 40 ஆசனங்களை பெற்றுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சின்னம் என்ற மாயை தமிழ் மக்களிடம் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. வடக்கில் மஹிந்தாவின் தாமரை மொட்டும், சுயேட்சைக்குழுக்களும் கணிசமான ஆசனங்களை பெற்றிருக்கின்றன. இது தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடகவே உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தலைமைகள் தமது செயற்பாடுகள் குறித்து மீள்பரிசீலனை செய்து தமிழ் தேசிய அரசியலை உறுதியுடன் முன்னெடுக்க முன்வரவேண்டும். அதுவே தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் வடக்கு, கிழக்கில் வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை தடுக்க உதவும். தமிழ் தலைமைகள் தமிழ் தேசிய மக்களது அபிலாசைகள் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் குறித்து சிந்திக்க தவறின் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல் கூட தமிழ் தேசிய கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தற்போது தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் மாற்றும் தலைமையாக எழுச்சி பெற்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஒத்த கொள்கை அடிப்படையில் செயற்பாடுபவர்களை உள்வாங்கி கிடைத்த ஆசனங்களைக் கொண்டு சரியான பாதையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப ‘தூயகரம்- தூயநகரம்’ என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். வடக்கு முதலமைச்சரும் இந்த நேரத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, மக்கள் முன்வெளிப்படுத்தி அவர்களை அணிதிரட்ட வேண்டிய தேவையையும் காலம் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏக்கிய ராஜ்ஜிய என்ற இடைக்கால அறிக்கையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவம் என்ற நிலை மாறியிருக்கின்றது. தனது வாக்கு வங்கி சரிவுக்கான காரணம் குறித்து ஆராய வேண்டிய தேவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் மூலமே அடுத்து வரும் தேர்தல்களில் தனது சரிவை கட்டுப்படுத்த முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை சாதகமாக பயன்படுத்தி தென்னிலங்கை ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளாக வடக்கு, கிழக்கில் செயற்படுகின்றவர்கள் தாங்களும் தமிழ் தேசிய இனத்தின் மீது பற்றுள்ளவர்களாகவும், பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவே குரல் கொடுப்பவர்களாகவும் காட்டிக் கொள்வதன் மூலம் தென்னிலங்கை தேசிய கட்சிகளின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி வடக்கில் 92 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 73 ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன 27 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் தரப்புக்கள் ஒற்றுமையாக தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை இந்த தேர்தல் முடிவுகள் மீள வலியுறுத்தி இருக்கின்றது. கொள்கை சார் ஒற்றுமையுடன் எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்கான தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த தமிழ் தேசிய தலைமைகள் முன்வர வேண்டும் என்ற செய்தியை மக்கள் தமது வாக்கின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்வார்களா…?

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *