Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன்

தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன்

தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சென்ற ஐந்து வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புதிய அரசியல் யாப்பை இந்தா தருகின்றோம் என்று கூறித் தாமதப்படுத்தி ஏமாற்றியதே அன்றி எதுவும் நடக்கவில்லை. இவர்களுக்கு வேண்டியது சிங்கள ஏகாதிபத்தியமே அன்றி தமிழர்கள் நல்வாழ்வு அன்று.சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் எமது வாக்குகள் வேண்டும். அதன் பின் அவர்கள் சார்பில் யாராவது தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளைக் கொடுத்து சரிப்படுத்தி விடுவார்கள்.

தேர்தலுக்காக இவர்கள் செலவழித்த பணம் அவ்வளவையும் கிடைக்க வைத்து மேலதிகமாகவும் வருமானங்கள் வரச்செய்து எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வாய்மூடச் செய்து விடுவார்கள். ஆகவே பெரும்பான்மை இன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள்.அவர்கள் தரும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணமே எம்மிடம் திரும்ப வருகின்றது. அதற்கு நன்றியறிதல் தேவையில்லை.

எமது தமிழ் வேட்பாளர்களுக்கு தமது சிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்கு மாறாக இக் கட்சிகளுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது. பொருளாதார நன்மைகளைப் பெற்றுத் தருவார்களே என்று நீங்கள் கூறலாம். அது தான் இல்லை.தாம் நினைக்கும் திட்டங்களை, தமக்கு நன்மை தரும் திட்டங்களை மட்டுந்தான் அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முன்வருவார்கள். அதாவது சிங்களப் பெரும்பான்மையினம் நன்மை பெறவல்ல திட்டங்களையே வகுப்பார்கள். செயல்படுத்துவார்கள்.

வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர் அகற்றி சுத்தப்படுத்தி அணைகட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு பணம் இல்லை என்றார்கள். அதை இந்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு செய்ய முற்படுகையில் அதற்கு அனுமதி அளிக்காமல் விட்டார்கள்.மேலும் நாம் மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றை இங்கு பயிரிட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கேட்ட போது சகல அறிக்கைகளும் எமக்கு சார்பாக இருந்த போது மத்திய அரசின் காணி செயலாளர் நாயகம் மட்டும் அந்த செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்காமல் விட்டுவிட்டார்.

காரணம் அவர்களைத் தமக்குச் சார்பாக பக்கத்தில் வைத்திருக்க பெரும்பான்மையினத் தேசியக் கட்சிகள் பார்க்கின்றனவே தவிர தமிழ் மக்கள் வளர்வதை, மேம்படுவதை, முன்நகர்வதை அக்கட்சிகளை அடக்கி ஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள்.அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்த வித வித்தியாசமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையுடு வானத்தைப் பார்க்கலாம் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள்.

முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்த கட்சிகள் பல அதனுள் இருந்து வெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்த பங்குக் கட்சிகள் சில தமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.இன்று ஒட்டு மொத்த வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் வரும் தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதி கேட்டு சில வேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள்.வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது கட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதெனக் கூறுவார்கள். அது போன்றதொரு காரியம் தான் இது.

பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடம் கொடுக்குமா? என்று சிலர் கேட்பார்கள். ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகால நல்லாட்சி பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கோட்டாபயவும், மகிந்தவும், ரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள் என்பதை மறந்துவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *