Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தவறை என் மீது சுமத்தி விட்டு சம்பவத்தை மூடி மறைக்க பொலிஸார் முயற்சித்து வருகின்றனர் – மஹிந்தாந்த அளுத்கமகே

தவறை என் மீது சுமத்தி விட்டு சம்பவத்தை மூடி மறைக்க பொலிஸார் முயற்சித்து வருகின்றனர் – மஹிந்தாந்த அளுத்கமகே

2011 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில், ஆட்டநிர்ணய சதி இருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று விசாரணைகள் கைவிடப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தில் பொலிசார் தவறிழைத்து விட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.2011 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகே கூறியிருந்த குற்றச்சாட்டு குறித்து, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு, விசாரணைகளை நடத்தி வந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனால் அந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று மாலை அறிவித்தார்.இதையடுத்து, தான் கூறிய குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் பொலிசார் முற்றிலும் தவறு செய்துள்ளனர் என்று, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.இந்த விசாரணைக்கு வாக்குமூலம் வழங்க தாம் கடமைப்பட்டிருக்கவில்லை என குமார் சங்கக்காரவின் சட்டத்தரணி கூறியுள்ளார். இந்த சட்டம் தவறானது என்பதே இதற்கு காரணம். ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தவறானது என்பதை பொலிஸாரும் உணர்ந்துக்கொண்டனர்.

தவறான விசாரணைகளை ஆரம்பித்தால் பொலிஸாருக்கு அதனை நிறுத்த முடியாமல் போகும். தெரிவுக்குழுவின் உறுப்பினர்களிடம் மாத்திரமே பொலிஸார் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.அப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் மற்றும் தலைவரிடம் வாக்குமூலம் பெற்றார்களா? நிறைவேற்று அதிகாரிகளிடம் பெற்றார்களா? போட்டியுடன் சம்பந்தப்பட்ட எவரிடமும் வாக்குமூலம் பெறவில்லை. யாரிடம் தகவல்களை பெற வேண்டும் என்பதை நான் தெளிவாக கூறியுள்ளேன்.

ஒருவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு விசாரணை கோப்புகளை மூட முடியுமா?. இதே விதமாகவே பொலிஸார் கடந்த காலத்திலும் செய்தனர். இவ்வாறு கோப்புகளை மூடுவது சரியாக இருக்காது. இது தொடர்பாக நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மிகவும் கீழ்த்தரமான வேலையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்துள்ளார்.இது தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தவறை என் மீது சுமத்தி விட்டு, சம்பவத்தை மூடி மறைக்க பொலிஸார் முயற்சித்து வருகின்றனர். எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *