Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருகோணமலையில் எங்களுக்கானதொரு சிந்தனைக் கூடம் (Think Tank): புலம்பெயர் சமூகத்தால் கைகொடுக்க முடியாதா?

திருகோணமலையில் எங்களுக்கானதொரு சிந்தனைக் கூடம் (Think Tank): புலம்பெயர் சமூகத்தால் கைகொடுக்க முடியாதா?

பிரபாநேசன்
கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் (17.03.2018) மூலோபாய கற்கை நிலையம் – திருகோணமலை (Centre for Strategic Studies – Trincomalee) என்னும் பெயரில் இந்தச் சிந்தனைக் குழாம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. உலகெங்கும் சிதறி வாழும் ஈழ அரசியல் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடவியலாளர்களை ஒன்றிணைத்தல், தமிழர் அரசியலை சர்வதேச பின்புலத்தில் புரிந்துகொண்டு செயற்படுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் அத்துடன் அது தொடர்பான மகாநாடுகளை ஒழுங்குசெய்தல், தமிழர் தேசத்தில் இளம் ராஜதந்திரிகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இந்த சிந்தனைக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிந்தனைக் கூடத்தை அரசியல் ஆய்வாளர் யதீந்திராவும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் வழிநடத்திச் செல்கின்றனர். இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் அப்போது வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த நீதியரசர் விக்கினேஸ்வரனும் பங்குகொண்டிருந்தார். அதே போன்று தமிழ்த் தேசிய நிலையில் செயற்படும் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பங்குகொண்டிருந்தனர். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இது தொடர்பில் அப்பிராயம் தெரிவித்திருந்த மூத்த அரசறிவியல் சிந்தனையாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் பின்வருமாறு தெரிவித்திருந்தார். தமிழ் மண்ணில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நூற்றாண்டுக்கணக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் இது பற்றி சிந்தித்ததே கிடையாது என்னும் வகையில் இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு.

இவ்வாறு புகழப்பட்டாலும் கூட, இவ்வாறான சிந்தனைக் கூடங்களை நடத்திச் செல்வது என்பது எளிதான விடயமல்ல. தமிழ்ச் சூழலை பொறுத்தவரையில் நமது மனதின் மேற்பரப்பை தொடக் கூடிய விடயங்களிலேயே நாம் அதிக அக்கறை காண்பிப்பதுண்டு. ஒரு சமூகத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் இவ்வாறான விடயங்களுக்கு உதவ வேண்டுமென்று நம்மில் பலரும் எண்ணுவதில்லை. இதன் காரணமாகவே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவும் எவரும் துனிவதில்லை. ஆனாலும் சிலரது அர்ப்பணிப்பில் இவ்வாறானதொரு அமைப்பு உருவாகியிருப்பது, திருநாவுக்கரசு அவர்கள் கூறுவது போன்று உண்மையிலேயே ஒரு அதிசயம்தான். இவ்வாறானதொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கு நாம் உதவி செய்யாமல் இருப்பது சரியானதா? இவ்வாறான முயற்சிக்கு புலம்பெயர் சமூகம் கைகொடுக்காது விட்டால் நிச்சயம் இந்த முயற்சி ஒரு சில வருடங்களில் தோல்வியை தழுவும். ஏனெனில் இவ்வாறான முயற்சிக்கு தொடர்ச்சியான பொருளாதார ஆதரவு தேவை. அதனை புலம்பெயர் சமூகத்தை தவிர வேறு எவரால் செய்ய முடியும்?

இன்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு. தமிழ் சமூகம் இவ்வாறான அறிவுபூர்வமான முயற்சிகளுக்கு உதவி செய்யாது. அது உண்மைதானா? மாமனிதர் சிவராம் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். பூப்புனித நீராட்டு விழாக்களுக்கும் கேளிக்கை நிகழ்வுகளுக்கும் வாரி வழங்கும் தமிழ் சமூகமானது, ஆய்வு முயற்சிகளுக்கும் சிறந்த நூல்களை ஆக்குவதற்கும் செலவு செய்ய மறுக்கிறது. ஆனால் சிங்கள தேசத்தை எடுத்து நோக்கினால், அவர்களோ அறிவூர்வமான விடயங்களின் ஊடாக தங்களை சதா பலப்படுத்திக் கொள்கிறனர். தங்களை புடம்போட்டுக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே ஒரு செழிப்பான ராஜதந்திர பாரம்பரியத்தை அவர்களால் பேணிப்பாதுகாத்துக்கொள்ள முடிகின்றது. அதன் ஊடாகவே அவர்கள் உலகெங்கிலும் நம்மை எதிர்கொள்ளுகின்றனர். எனவே நமக்கென்று ஒரு ராஜதந்திர தலைமுறையையும் அதன் ஊடாக, ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தையும் ஏற்படுத்த வேண்டுமாயின், நாம் முதலில் நம்மத்தியில் சிந்தனைக் கூடங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு கைகொடுக்க வேண்டும். அவர்களை கைவிட்டுவிடக் கூடாது.

இன்று ஒரு சிங்கள படைவீரனுக்கு உதவி வேண்டுமென்று முகநூலில் பதிவிட்டவுடன், உலகெங்கும் வாழும் சிங்களவர்கள் உடனடியாகவே தங்களால் முடிந்தளவு நிதியுதவி செய்கின்றனர். அவர்களால் அவ்வாறு சிந்திக்க முடியுமென்றால் ஏன் எங்களால் முடியாது. இன்று கனடாவில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இன்னும் பல லட்சம் மக்கள் ஜரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வர்த்தகர்களும் பணபலத்துடன் இருக்கின்ற தனிநபர்களும் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் – அனைவருமல்ல சில குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் நினைத்தால் கூட, இவ்வாறானதொரு சிந்தனைக் கூடத்தை நடத்திச் செல்வது இலகுவான விடயமாகிவிடும்.

இந்த சிந்தனைக் கூடத்தை வழிநடத்தும் யதீந்திரா மற்றும் கலாநிதி கனேசலிங்கன் ஆகியோரோடு பேசுகின்ற போது, அவர்கள் ஒரு ஆலோசனையை வெளிப்படுத்தினர். அது ஒரு நல்ல ஆலோசனையாகவே தெரிந்தது. உதாரணமாக புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளில்; நூறு பேர் வருடம் ஒன்றுக்கு 200 டொலர்கள் அல்லது இருநூறு பேர் வருடமொன்றுக்கு 100 டொலர்கள் என்றவாறு இந்த அமைப்பிற்கு வழங்கினால், இதனை நடத்திச் செல்வதில் ஒரு தடங்கலும் இருக்காது. மிகவும் திறம்பட இதனை நாம் முன்கொண்டு செல்ல முடியும். ஒரு மாதத்திற்கு 16 டொலர்கள் மட்டுமே அவர்கள் தர வேண்டிவரும். இதற்கு மேல் ஒரு சில பணபலமுள்ளவர்கள் மனம்கொண்டால், இதற்கான நிதி என்பது ஒரு விடயமாகவே இருக்காது. இந்தச் சிந்தனைக் கூடத்தை, ஒரு வருடத்திலேயே தமிழர் உலகெங்கிலும் பேசப்படுமளவிற்கு தவிர்க்க முடியாதவொரு சிந்தனைக் கூடமாக தரமுயர்த்த முடியும். இது ஒரு அணுகுமுறை மட்டுமே. நம்மில் பணபலமுள்ளவர்கள் தங்களால் முடிந்ததை செய்யலாம். பணபலமுள்ள பத்து பேரே ஒரு வருடத்திற்கான செலவுகளை பொறுப்பெடுக்க முடியும். அவ்வாறு செய்கின்ற போது, தமிழ்ச் சூழலில், தாயகத்தில் ஆய்வுத் துறைகளில் ஈடுபட எண்ணுபவர்கள் உற்சாகமடைவர். தமிழர் தேசத்திற்கான அறிவூர்வமான ஆய்வுப்பரப்பு விரிவடையும். அரசியலில் இளம் அறிஞர்கள் உருவாகுவர். ஏனெனில் இவ்வாறான சிந்தனைக் கூடங்கள் (வுhiமெ வுயமௌ) இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் கூட சிந்தனைக் கூடங்கள் என்பவை அரசாங்க ஆதரவிலும் அல்லது பலமான அரசு சாரா நிறுவனங்களின் நிதியாதரவுடன்தான் இயங்கிவருகின்றன. ஆனால் தமிழ்த் தேசிய நிலையில் சிந்திப்போருக்கு கைகொடுக்க புலம்பெயர் சமூகத்தை விட்டால் வேறு எவரும் இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் புலம்பெயர் சமூகமாகிய நம்மை நாடி வருகின்றனர். நாம் அதனை கண்டுகொள்ளாமல் விட்டால், காலப்போக்கில் தாயகத்தில் இவ்வாறான முயற்சிகளில் எவருமே ஈடுபட மாட்டார்கள்.

புலம்பெயர் சமூகமாகிய நாம், எந்தளவிற்கு இதற்கான நிதிபலத்தை வழங்குகின்றோமோ, அந்தளவிற்கு தாயகத்திலுள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவர். இவ்வாறான சிந்தனைக் கூடங்களுக்கான முதலீடு என்பது ஒரு சேதத்திற்கான முதலீடு. பத்து லடச்சத்திற்கு மேலான புலம்பெயர் தமிழ் மக்கள் இருந்தும் திருகோணமலையில் நிறுவப்பட்ட, ஒரு சிந்தனைக் கூடத்தை நடத்த முடியாது போகுமானால், அது ஒட்டுமொத்த புலம்பெயர் சமூகத்திற்குமான இழுக்காகிவிடும். எனவே இவ்வாறான முயற்சிக்கு கைகொடுக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். நாம் நமது கடமையை செய்வோம். முடிந்தளவு உதவுவோம். நமது தேசிய உணர்வை காண்பிப்போம். இந்தச் சிந்தனைக் கூடத்தின் நோக்கம் அதன் செயற்பாடுகள் ஆகியவற்றை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையத் தளத்தின் ஊடாக பார்க்கலாம்.

இந்தச் சிந்தனைக் கூட்டத்திற்கென ஒரு பிரத்தியேக அலுவலகம் திருகோணமலையில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான வாடகை மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான நிதி தேவைப்படுகிறது. ஆகக் குறைந்தது ஜந்து வருடத்திற்கான நிதி கையிருப்பில் இருந்தால் அல்லது அதற்கான புலம்பெயர் உத்தரவாதம் கிடைக்குமாக இருந்தால் இதனை தங்களால் சோர்வின்றி நடத்திச் செல்ல முடியுமென்று இதன் இயக்குனர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும் மாதாந்த கலந்துரையாடல்கள் மற்றும் சிறு வெளியீடுகளை வெளிக்கொனர்வதற்கான செலவுகள் என ஆகக் குறைந்தது மாதமொன்றிற்கு இலங்கை ரூபாவில் ஒரு லட்சம் இதற்கு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு சிந்தனைக் கூடத்தை நடத்துவதற்கு இந்தத் தொகை போதாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்குறிப்பிடப்பட்டுள்ள இமெயிலில் ஊடாக தொடர்பு கொண்டு நேரடியாகவே அறிந்து கொள்ள முடியும். திருகோணமலையில் இதற்கனெ ஒரு நிரந்தர கட்டிடத்தை நாளடைவில் நிறுவ வேண்டுமென்னும் எண்ணமும் இவர்களிடமுண்டு.

கீழ்குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தில் ஊடாக இந்தச் சிந்தனைக் கூடத்தை பார்வையிடலாம்.

http://www.trincocss.org/

உதவி செய்ய விரும்புவோர். இந்த வங்கிக்கணக்கின் ஊடாக உங்களின் நிதியுதவியை வழங்குங்கள்.

Name of the account             : Centre for Strategic Studies – Trincomalee (GUARA

Name of the Bank                 : Hatton National Bank PLC

Branch                                     : Trincomalee

Account Number                   : 031010021891 

Bank Swift code                     : HBLILKLX

Bank code                              : 7083

Branch code                          : 031

இது தொடர்பில் தங்களின் கருத்துக்களை எழுத அல்லது மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இ.மெயில்கள் அல்லது கையடக்க இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.

director@trincocss.org

jjathi@gmail.com

+94 777 231 387

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *