திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றிக்காட்டுவேன்: ஒருமித்து தனக்கு வாக்களிக்குமாறு ரூபன் வேண்டுகோள்
திருகோணமலையில் நடைபெற்றுவரும் செயற்கையான இன விகிதாசார மாற்றம் மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகளை தன்னால் மேற்கொள்ளமுடியும் என்றும் திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றிக்காட்ட முடியும் என்றும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சாட்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திராவின் (ரூபன்) தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த ரூபன், தான் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிவடைந்து திருகோணமலையில் தமிழர் பிரதிநித்துவம் இழக்கப்படப்போகின்றது என்று சம்பந்தன் அச்சம் கிளப்பி வருவதாகவும், ஆனால் அது தவறானது என்றும் விளக்கம் அளித்த ரூபன், தமிழ் மக்கள் ஒருமித்து சரியான ஒரு தெரிவுக்கு வாக்களித்தால் இந்த நிலைமை ஏற்படாது என்றும் கூறினார்.
1994 ல் தங்கதுறை மற்றும் சம்மந்தன் ஆகியோர் போட்டியிட்ட போது சம்மந்தன் ஐயாவை மக்கள் நிராகரித்தார்கள். அதேபோன்று 1989 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ஈரோஸ் வேட்பாளர்களான ரட்ணராஜா மற்றும் மாதவராஜா ஆகியோருக்கு மக்கள் வாக்களித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றினர். அதேபோன்று, இம்முறையும் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யவேண்டும். என்று ரூபன் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, கிராமம் கிராமமாக சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் ரூபனின் கூட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொள்கின்றனர். அண்மையில், தேவா நகரில் மக்கள் சந்திப்புக்களில் அவர் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.





