Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமுறையின் தெய்வீகச் சிறப்பு

திருமுறையின் தெய்வீகச் சிறப்பு

‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரோ’ என்ற பாடலில் குறிப்பிட்டவாறு உலக நாடுகள் அத்தனையும் ஓர் அணுவளவு கொரோனா வைரஸ் என்ற கொடூரநோய் சுழற்சிக்குள் சிக்குண்டு ஒரு குடைக்கீழ் ஆட்டுகின்றன. விஞ்ஞானம் உலகை ஆட்டிப்படைக்கிறது. விஞ்ஞானத்தில் விஞ்சி மெய்ஞானத்தை மறந்து திமிர்கொண்டு வல்லாண்மை பேசும் உலக நாடுகள் எல்லாம் கொரோனாவால் ஆட்டிப்படைக்கப்-படுகின்றனவே! சந்திரமண்டலம், செவ்வாய் மண்டலம் அடைந்ததாக மார்புதட்டும் விஞ்ஞான மேலாதிக்க உலகத்தால் என்ன செய்ய முடிகின்றது? கொரோனா உலகத்தை ஒரு குடைக்கீழ் ஆடுகின்றதே! யானை முதலாய் எறும்பு ஈறாய் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் இறைவன் படைப்புளூ அதனுள் மனிதனும் அடக்கம். ‘பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்று கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது’ இது கண்ணதாசனின சினிமாப்பாடல். இப்போ விடத்தைக் கக்கும் பாம்பு கேட்கின்றது. முதலில் சீனா சௌக்கியமா என்பதாகும். இது உண்மைக்குப் புறம்பானதொன்றல்ல. ஆரம்பமான இடத்தைக் குறித்துச் சொல்லுவதாகும். புற்றிடம் கொண்ட பெருமான் என்று சிவனைக் குறித்து நாகத்தை வழிபடுவது இந்துக்கள் மரபு. பாம்புகளை வெட்டித் துண்டு துண்டாக்கிப் பொரித்தும், கறிசமைத்தும் சாப்பிடும் சமூகத்தை நினைத்து மனம் வெதும்புகின்றது. இப்படியான ஒரு வாழ்க்கை முறை வேண்டுமா? ‘இலம் என்று அசைய இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாழ் நகும்’ இது வள்ளுவர் வாக்கு. ‘தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிது ஊன்பான் எங்ஙனம் ஆளும் அருள்’ இதுவும் வள்ளுவரின் உபதேசம். இந்தப் பரந்த பூமியில் வாழும் மக்கள் தொழில் இல்லையே என்று வருந்தினால் அதனைப் பூமாதேவி பார்த்துச் சிரிப்பாளாம். இறையருள் பெறுவது மனிதப் பிறவியின் பயனாகும். அப்படியிருக்க வாழ்க்கை முறையைப் புனிதமாக, சீராக நல்ல நெறியிலே அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. மாறாகப் போன பக்கம் போகவிடேன்ளூ பாதையை அவன் பொறுத்திருந்து புரிந்து கொண்டான். வேலையை என்று பின் வருந்துவானேன். கோமாளிக்கூத்துக்களுக்கு இரையாகலாமா? எங்களுக்கென்று அடிப்படைத் தத்துவம் வகுக்கப்பட்டுள்ளது. அதனைச் சகைகளுக்காக விற்கலாமா?

‘கங்காணி இல்லையென்று களவு பல செய்வார்கள். கங்காணி இல்லாத இடமில்லை. காணுங்கால் கங்காணி எங்கும் கலந்திருந்தானென்று கங்காணி கண்டார் களவு ஒழிந்தாரே’ இது திருமூலர் திருமந்திரம். இவர் தத்துவம் நிறைந்த 3000 பாடல்களைப் படித்துள்ளார். அவற்றை திருமுறை படிக்கும்போது வருடாவருடம் படிக்கின்றோம். ஒரு வருடம் மாதம் ஒரு திருமுறையாக 18290 தேவார, திருவாசக மற்றும் திருக்கோவையார், திருமந்திரம் ஆகியன ஓதப்படுகின்றன. அதனைப் பல ஆலயங்களில் சைவசமய அமைப்புக்களிலும், அகில இலங்கை திருமுறை மன்றம் ஒழுங்கு செய்துள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வல்ல. இதற்கு திருவருளே துணை உண்டு.

பாற்கடலைக் கடைந்தபோது உருவான விடத்தை சிவபெருமான் தன் கண்டத்தில் ஏற்ற கதை கற்றிருப்போம். அவ்வாறு ஆலகால விடத்தைக் கண்டத்தில் அடக்கிய சிவனின் நிர்வாக ஒழுங்கில் பிரமன் படைத்தல் தொழிலும், திருமால் காத்தல் தொழிலும் செய்வதாக புராண இதிகாசங்களினூடாக அறியக் கிடக்கின்றது. அவன், அவள், அதுவென மூவினைமையில் தோன்றிய திதியே ஒடுக்கி மலத்துளதாம். அந்தம், ஆதி என்பனார் புலவர். சிவஞானபோதம் 1ம் சூத்திரம் அவையே தானேயாகி இருவினையில் போக்குவரவு புரிய ஈணையின் நீக்கமற நிற்குமன்றே என்பது 2ம் சூத்திரம் நல்வினை தீவினையின் பயனாகப் பெறும் மேற்கூறப்பட்ட எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதங்களுக்கும் இதுவே விதி, பிரம்மாவுக்கு விதியென்று ஒரு பெயருண்டு. இக்கட்டமைப்பைத் தோற்றுவித்து அணுவுக்கு அணுவாக அப்பாலுக்கப்பாலாய் சிவநடனம்; அண்டவெளியில் ஆடுகின்றான் சிவப் பரம்பொருள்.

‘வேதங்களாட மிகு ஆகமமாட
கீதங்களாட கிளர் அண்டமேளாட
புதங்களாட புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே’
– திருமந்திரம் –
இலங்கை ஒரு சிவபூமி
மேரு நடுநாடி மிக்க இடை பிங்கலை
கூடும் இவ்வானம் இலங்கை குறியுறும்
சாரும் தில்லைவனம் தண் மாலையத்து ஊரு
ஏறும் சுழுனை இவை சிவபூமியே.
– திருமந்திரம் 2709ம் பாடல்) –

சிவபூமியாகிய இலங்கையில் நடக்கும் திருவிளையாடல்களெல்லாம் அவனறியாததொன்றா? காலம் பதில் சொல்லும் குண்டலினி சக்தியின் வெளிப்பாடாகத் துயிலும். இல்லங்கள் தொழிற்படும் காலம் பதில் சொல்லும். ‘பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும், என்னாகும் மண்ணின் குடமுடைந்தக்கால்’ குண்டலினி சக்தி பற்றி நாம் படித்திருக்கின்றோம். இது எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கும் உரித்தானதல்லவா. தானுண்ட நீரைத் தரலையாலே தான் தரும் தென்னைக்கும், செடி முழுதும் முள்ளாக இருந்தும் வருணிக்கமுடியாத பிரமாதமான வாசனையைத் தரும் றோசா போன்ற செடிகளுக்கும் இன்னோரன்ன யானை முதலாய எறும்பு ஈறாய ஜீவராசிகளுக்கும் பொருந்துவதாகும். கீழிருந்து சக்தி மேலே பிரவாகித்து அதன்தன் பெறுபேறாக வழிகின்ற ‘ஓங்கார நாதமே ஓதவொன்னா பிரமாதமேளூ தாம் தாம் தோம் என்றிடும் ஓசை அற்புத விற்பன நிற்குணநேயம்’ இது யோகசுவாமிகளின் நற்சிந்தனைப்பாடல். ஓங்காரம் தான் உலகம் என்பதனை மறுக்க முடியுமா?

இது மர்மத்தில் மர்மம். மனிதனுக்கு மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் (காற்று) எழுப்பும் கருத்தறிவித்து என்று ஒளவைப்பிராட்டி அழகுறக் கூறியுள்ளார். தன்னை அறிந்தாற் தவம் வேறில்லை என யோகசுவாமிகள் தவத்திற்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார். நான் யார் என ரமண ரிஷி சிறப்பாக கூறியுள்ளார். தன்னை அறிந்துள்ள தத்துவஞானிகள் ‘முன்னை வினையின் முடிச்சவிழ்ப்பார்கள், பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள் சென்னியில் வைத்த சிவனருளாலே என்கின்றது. திருமந்திரம். இது குண்டலினியின் வெளிப்பாடே.

இச்சிவபூமியில் பிறந்து வளர்ந்தோம் என்;றால் நாம் செய்த முற்பிறப்பு புண்ணியமேயாகும். மேற்படி தத்துவங்களை அறிவதே கிடைக்கப்பெற்ற பேறாகும். இப்படியிருக்க சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் சண்டமாருதம் சுழித்தடித்து ஆர்த்து உலகாயுதம் என்னும் ஒண்திறன் பாம்பின் கலாபேதித்த கடுவிடசெய்தி ஒன்றை ஒன்று விழுங்கும் அஞ்ஞானத்திற்கு விடிவு வருமா என ஏங்கி நிற்கும் காலம் இது உண்மை நெறி எது என்பதனை உணரமுடியாது காலத்தை வீணடித்து பிறப்பதற்கே இறக்கின்றனர்.

ஐம்பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவற்றுள் ஒன்று தானும் இல்லாத உலகத்தில் எப்பகுதியாயினும் வாழமுடியுமா இவை எல்லாமாய் அவன் இருக்கிறான் என்றால் கங்காணி இல்லாத இடமிருக்குமா? ஓங்காரத்தான் உலகம் என்பதற்கு அடிப்படையை குறிக்கின்றதல்லவா முத்திநெறியறியாத மூர்க்கராக நாம் இருக்கலாமா? மொட்டை அடித்து வேடம் போட்டு உலகை ஆட்டிப்படைக்க எண்ணலாமா? யாழில் சமயப்போர்வைச் செயற்பாடு கொரோனாவைப் படிப்பி எம்மை ஆட்டிப்படைக்கின்றது. இதுவும் திருவளமோ!

‘ஞானமில்லாதவன் சிகை முடி நூல் நண்ணி
ஞான முள்ளால் போல் நடிப்பவன் தன்னை
ஞான முள்ளோர் நரபதி சோதித்து
ஞான முண்டாக்குதல் நாட்டுக்கு நன்மையே’
திருமந்திரம்

கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் உலகெல்லாம் பரவி பயமுறுத்தும் இந்த வேளையில் அதாவது 2020ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் இதுவரை தப்பாமே தாம் பிடித்தது சரியாத் தழலது கண்ட மெழுகது போல் உளம் உருகி அழுது உடல் கம்பித்து கொடிறும் (உடும்பு) பேதையும் கொண்டது விடாதெனும்படியே யாகி பன்னிரு திருமுறைகள் அதாவது ஒரு வருடத்தில் படிக்கும் திருமுறை ஒழுங்குமுறை – மாதம் ஒரு திருமுறை ஆகும்.

1ம், 2ம், 3ம் திருமுறை -4159 பாடல்கள்
4ம், 5ம், 6ம் திருமுறை -3645 பாடல்கள்
7ம் திருமுறை -1026 பாடல்கள்
5ம் திருமுறை திருவாசகம் -1026 பாடல்கள்
திருக்கோவையார் -656 பாடல்கள்
9ம் திருமுறை -316 பாடல்கள்
10ம் திருமுறை திருமந்திரம்- 3050 பாடல்கள்
11ம் திருமுறை -1385 பாடல்கள்
12ம் திருமுறை -4253 பாடல்கள்
முழுத்தொகை -18290 பாடல்கள்

இதனை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இவை அத்தனையும் சிவனை நோக்கிய மந்திரங்கள் தமிழில் இவை சிவபூமியின் காவல் அரண்கள் என்பதனாலாகும்.

‘அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய் பறக்கும் பாவம்
பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி’ – நற்சிந்தனை

‘குறையுடையோர் குற்றம் ஓரார் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையோர் இடர்களையாயா நெடுங்களம் மேயவனே’ தேவாரம்
ஓயாது உறங்காது திருமுறை ஓதலில் பங்கெடுத்த ஒரு இறைதொண்டனின் உள்ளத்திலிருந்து உதிர்ந்தவை.

திரு.க.இராசரத்தினம்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு
புன்னாலைக்கட்டுவன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *