தலைப்பு செய்திகள்

துவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்கேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம்

துவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்கேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம்

மு.திருநாவுக்கரசு
சிலம்பிற்கு மகிமை கண்ணகியால் கிடைத்தது. சிம்மாசனத்திற்கு மகிமை அதில் வீற்றிருக்கூடியவரின் தரத்தால் கிடைக்கும்.

கண்ணகியின் காற்சிலம்பு உடைந்தேனும் நீதியை உரைத்தால் அது வரலாற்றில் அழியாவரம் பெற்றது.
திரு.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் சளையாது ஒலித்தன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாவலனாய் வரலாற்றில் ஓர் இடத்தை தனக்கென பதித்துள்ளார்.

திரு.விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சராய் பதவியில் இருந்த இந்த ஐந்தாண்டு காலங்களிலும் அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு மதிப்பீடாகவே இக்கட்டுரை அமைகிறது.

அரசியல் நடவடிக்கைகளை அதன் விளைவால் மதிப்பீடு செய்ய வேண்டுமென்ற வரலாற்றுக் கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட ஓர் அரசியல் வரலாற்று மாணவன் நான். விருப்பு வெறுப்புக்களுக்கும், புகழுரைகளுக்கும் மதிப்பீட்டில் இடமில்லை. மதிப்பீடு என்பது அதனை உள்படி அடையாளங்காண்பதுதான்.
திரு.விக்னேஸ்வரனின் ஐந்தாண்டு பணியென்று ஒரு பட்டியலை நீட்டுவது மட்டும் மதிப்பீடாகிவிட முடியாது. பச்சைக்கண்ணால் பார்க்கும் பார்வையும் மதிப்பீடாகிவிடாது. அதாவது பூமியில் நின்று பார்க்கும் போது சந்திரன் வெறும் ஆறு அங்குல விட்டமுள்ள ஒரு தண்மையான பொருளாய் காட்சியளிக்கலாம். ஆனால் உண்மையில் அதனை காட்சிக்கு அப்பால் தீர ஆராயும் போது அதன் பாரிய அளவும், அதன் கற்பாறைத் தன்மையும் தெரியவரும். ஆதலால் ஒன்றை வெறும் பார்வைக்கு அப்பால் தீர ஆராய்வதைத்தான் மதிப்பீடு என்பர்.

திரு.விக்னேஸ்வரன் வானளாவ கட்டங்களை எழுப்பவில்லை, தொழிற்சாலைகளை அமைக்கவில்லை, பூங்காக்களை உருவாக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் வானளாவ உயர்ந்து காலங்களைக் கடந்து நிற்கின்றார். இதுதான் அவர் வகித்த ஐந்தாண்டுகால பாத்திரத்தின் முதற் பெருங்கனி.

நெற்றிக்கண்ணை சிவபெருமான் காட்டிய போது அவருடன் ஒத்துழைக்கத் தவறினால் தான் சாம்பலாக நேரும் எனத் தெரிந்து கொண்டும் “நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே” என்று சொல்ல நக்கீரன் தவறவில்லை என புராணம் கூறுகிறது.

ஆயுதந்தாங்கிய பெரும் படையினரின் மத்தியில், மனிதர்களை எப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் மெல்ல கொல்லவல்ல தொழில்நுட்பங்களை அரசுகள் கொண்டிருக்கக்கூடிய சூழலில், அதிகார சுகமும், பதவி மோகமும் தங்கத் தாம்பாளத்தில் ஆட்சியாளர்களால் நீட்டப்பட்டிருக்கக்கூடிய சூழலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியின் பேரால் அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் நிமிர்ந்து நின்றது. அவரது இத்தகைய நிலைப்பாட்டின்கு எதிராக நிற்கும் கூட்டமைப்பினர்கூட இந்த உண்மையை மறுக்க முடியாமல் வெளிப்படையாய் பேசிவருகின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படக் கூடியது.
தமிழ் மக்கள் சளையாத மனம் படைத்தோர் என்பதை அவர்களது கடந்த கால வரலாறு நிரூபித்துள்ளது. ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தடம்புரளலால் தமிழ் மக்களின் நீதிக்கான சளையா வரலாறு பதங்கெட்டுப் போய்விட்டதோ என்ற அச்சம் எழுந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தடம்புரண்ட அரசியல் தலைமைத்துவத்திற்கு மாற்றாக திரு.விக்னேஸ்வரன் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

வரலாற்றில் நெருக்கடிகள் ஏற்படும் போதும், இருக்கும் தலைமைகள் தடம்புரளும் போதும் மாற்றுத் தலைமைகள் எழுவது இயல்பு. அந்த வகையில் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற ஒரு புதிய அரசியல் கட்சிக்கான அங்குராற்பணக் கூட்டம் 24ஆம் தேதி நல்லூரில் நிகழ்ந்த போது அதில் உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கு.குருபரன் கூறிய கருத்து இங்கு கவனத்திற்குரியது.
அதாவது தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மாற்றுத் தலைமைகள் எழுந்த கட்டங்களை அவர் அடையாளங்காட்டி பேசுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு எதிரான ஒரு மாற்றுத் தலைமைத்துவத்தை நெருக்கடி நிறைந்த இக்காலத்தில் திரு.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார் என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லஷ்மன் பேசுகையில் தமிழ்த் தேசிய இயக்கம் உருவாக வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
மாற்றுத் தலைமை என்பதும் ஒரு தேசிய இயக்கத்தை இயக்குவது என்பதும் ஒரு நாளில் முளைத்தெழக்கூடிய விடயமல்ல. அது ஒரு வரலாற்றுப் போக்கைக் கொண்டது. அதேவேளை மிகக்கடினமான பாதையையும் கொண்டது. இது கடந்த ஐந்தாண்டுகால வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடு. எனவேதான் இதனை வளர்ச்சி விதிக்கு ஊடாக மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் அறிவியல் ரீதியாக எழுகிறது.
காகத்தின் கூட்டில் குயில் முட்டை குஞ்சானாலும் அது காகமாய் கரையாது குயிலாய் கூவுவது போல தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாசறையில் கருத்தரித்த திரு விக்னேஸ்வரன் சேர்ந்ததன் வண்ணமாகாமல் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் ஒலிக்கத்தொடங்கினார் அரசாங்கத்தில் நீதித்துறை அதிகாரியாய் வாழ்ந்த அவரை தமிழ்மக்களின் வரலாற்றுப் பட்டடை தமிழ்மக்களின் உரிமைக்கான தலைவராய் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடைந்தெடுத்துள்ளது.

திரு.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருப்பையுள் உதித்தவர். ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு செயற்படத் தொடங்கியவர். கூடவே இனப்படுகொலையின் பேரால் குற்றம் சுமத்தப்பட்ட அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நல்லெண்ண வெளிப்பாட்டின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டாவர். அப்போது ஆயுதப் போராட்ட தரப்பின் மீதும் தனக்கு இருந்திருக்கக்கூடிய உடன்பாடு இன்மைகளையும் வெளிப்படுத்தியவர். இதனால் தமிழ்த் தரப்பிலும் அவர் ஆரம்பத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார். இதுதான் அவரது பதவிக்கால தொடக்க அரசியலாய் அமைந்தது.

ஆனால் நடைமுறை அவருக்கு வழிகாட்டத் தொடங்கியது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ‘அரசியல் திடசித்தம்’ (political will) சிங்களத் தலைவர்களிடம் இல்லை என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஒரு கைப் பொம்மையாகப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய சுயலாபங்களை அடைய முற்படுகிறது என்பதையும் கண்டுகொண்டார்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதையும் சிங்கள ஆட்சியாளர்கள் கட்மைக்கப்பட்ட இனப்படுகொலை, பண்பாட்டு அழிப்பு என்பவற்றை கொள்கையாகவும் நடைமுறையாகவும் கொண்டுள்ளனர் என்பதையும் கண்டுணர்ந்து உலகிற்கு உரிய முறையில் அறிவித்தார் மக்களால் பேரதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றவகையில் இவரின் மேற்படி நிலைப்பாட்டிற்கு சர்வதேச அந்தஸ்துண்டு.

இலங்கையில் தமிழ் மக்கள் தமக்கான உரிமையுடன் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான முன்முயற்சிகளில் தமிழ்த் தலைவர்கள் ஈடுபட்டதையும் ஆனால் ஒரு நூற்றாண்டுகாலமாக இதற்கு எதிரான நிலைப்பாட்டையே சிங்களத் தலைவர்கள் மேற்கொண்டனர் என்பதையும் மேற்படி தனது அங்குராற்பண உரையில் குறிப்பட்ட விக்னேஸ்வரன் அவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளை மதித்து சிங்களத் தலைவர்கள் செயற்பட்டிருக்குமிடத்து இலங்கை சிங்கப்பூரைவிடவும் அபிவிருத்தி அடைந்த நாடாக வளர்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டு தனது போர்க்குரலை உயர்த்தினார்.

சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் இணைந்து வளமான ஓர் இலங்கையை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அந்நிய நாடுகளிடம் கையேந்திய நிலையில் இலங்கையை இரத்த சகதியாக மாற்றியது மட்டுமின்றி இலங்கையை அந்நிய அரசுகளின் வேட்டைக் காடாகவும் மாற்றிவிட்டனர் என்பதை இதனுடன் இணைத்து நோக்கவேண்டும்.

தனது ஐந்தாண்டுகால அரசியல் அனுபவத்தின் மூலம் சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்களத் தலைவர்களையும், சிங்கள அறிஞர்களையும், பௌத்த மஹா சங்கத்தினரையும் புரிந்து கொண்டது மட்டுமின்றி ‘மடியில் கனமுள்ள’ தமிழ்த் தலைவர்களின் தமிழின விரோத அரசியலையும் அவர் புரிந்து கொண்டார். ‘மடியில் கனமுள்ள’ என்பது மேற்படி அங்குராற்பண உரையின் போது விக்னேஸ்வரனால் பயன்படுத்தப்பட்ட பதப்பிரயோகமாகும்.

விக்னேஸ்வரன் வகித்த முதலமைச்சர் பதவிக்கு இருந்திருக்கக்கூடிய சிறிய அதிகாரத்தைவிடவும் அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த பேராதரவு மிகப் பெரும் சக்தியாக உருத்திரண்டது. ஆதாலற்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் முதலில் முயன்ற போதிலும் பின்பு அதிலிருந்து பின்வாங்க நேர்ந்தது. இங்கு அவர் மாற்றுத் தலைமைக்கான முஷ்டியை உயர்த்தத் தொடங்கியதற்கான பெறுமானத்தை மக்கள் பலத்தின் வாயிலாக உணர்ந்து கொண்டார். இத்தகைய மக்கள் பலத்தை அவர் தேடிக் கொள்ளக்கூடியவாறு அவர் கொள்கை நிலைப்பாட்டை எடுத்தமைதான் அவரின் மிகப் பெரும் சாதனை என்று கூறலாம். எனவே விக்னேஸ்வரனின் ஐந்தாண்டு சாதனைப் பட்டியலில் விலைபோக முடியாத கொள்கைக்கான மேன்மையும், தமிழ் மக்களின் நெஞ்சுரமும் சேர்ந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். இது அபிவிருத்தி என்று சொல்லப்படுகின்ற தெருக்கள், பாலங்கள், கட்டடங்கள் என்பனவற்றையும்விட மேலானது.

முழு இலங்கையின் அரசியல் தலைவர்களுள் அதிகம் கவனத்திற்குரிய தலைவராய் திரு.விக்னேஸ்வரன் ஆனார். அதாவது ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் என்போர்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தினாலான பலங்களையும் கடந்து கொள்கையின் பேரால் அதிகம் மதிப்பிற்குரியவரானார். இது தமிழ் மக்களின் இலட்சியத்திற்கும், கொள்கைக்கும், நீதிக்கும் கிடைத்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகும்.

விக்னேஸ்வரன் தன் பதவிக்காலத்தில் அபிவிருத்தி செய்யவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அரச தரப்பினரும் அவர்களுக்கு அனுசரணையான விமர்சகர்களும் கூறுகின்றனர். முதலமைச்சருடன் ஜனாதிபதியும், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒத்துழைத்து இருந்திருந்தால் அதனை அவர் செய்திருக்கக்கூடும். ஆனால் மாறாக இவர்கள் அனைவரும்,அரச இயந்திரமும் அவருக்கு முற்றிலும் முட்டுக்கட்டையாகவும், எதிராகவும் செயற்பட்ட நிலையில் அவரால் அபிவிருத்தியை மேற்கொண்டிருக்க முடியாது. மேலும் அரசியல் அதிகாமற்ற அபிவிருத்தி சிங்கள மயமாக்களுக்கே வழிவகுக்கும் என்ற அவரின் நிலைப்பாடு கவனத்திற்குரியது.

அவர் அரசாங்கத்தின் பௌத்த சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக போராடியது மட்டுமன்றி அதைவிடவும் அதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராகவும் போராட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தது. இந்த ஐந்தாண்டு காலமும் அந்த வகையில் அவர் முட்டைக்குள் போர்க்குணத்துடன் கருத்தரித்த காலமாய் அமைந்து தற்போது அவர் முட்டைக் கோதை உடைத்துக் கொண்டு வெளியே வந்த குஞ்சாய் காட்சியளிக்கிறார். இந்த முட்டைக்குள் அவர் மாற்றுத் தலைவனாய் கருத்தரித்த காலந்தான் கடந்த ஐந்தாண்டுகால வரலாற்று வளர்ச்சி விதியாகும். அந்த விதியை ஏற்று கருத்தரித்த காலமாகவும் தமிழ் மக்களின் விடிவிற்கான ஒரு புதிய காலத்தின் தொடக்கமாகவும் இப்போது அதன்வழி காட்சியளிக்கிறார்.

அவர் மேற்கொள்ள வேண்டிய பயணம் மிகவும் கடினமானது. அவர் பதவியில் இருந்த போது இருந்த பலத்தைவிடவும் பதவியில் இல்லாத தற்போதைய விக்னேஸ்வரின் பலம் பெரியது என்பதை அவர் தன் நடைமுறைக்கு ஊடாக கண்டுகொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை அவர் எவ்வளவிற்கு எவ்வளவு அடித்தட்டு மக்களை நாடிச் செல்கிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு அவரின் பலம் அதிகரிக்கும்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளும் போது அவர் ‘உப்பை’ போராட்டத்திற்கான கருவியாக தெரிவு செய்ததற்கான முழுமுதற் காரணம் உப்புச் சிரட்டை இல்லாத வீடில்லை என்ற அடிப்படையிற்தான். அதாவது உப்பின் பெறுமானம் அரைச்சதமாக இருந்தாலும் அதுதான் அனைத்து அடித்தட்டு மக்களுடனும் தொடர்புள்ள பொருள் என்ற முடிவிற்கு வந்தார். அடித்தள மக்களை தழுவி நிற்பவர்கள் வரலாற்றில் காலத்தால் அழியாத இடத்தை பிடிப்பார்கள்.

விக்கேஸ்வரன் வெறுமனே ஒரு தனியாள் அல்ல என்பதை அவர் தனது ஐந்தாண்டுகால போர்க்குணத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இப்போது அவர் முதலமைச்சர் என்ற நாற்காலியைவிடவும் பலம்வாய்ந்தவராக உள்ளார். அவ்வாறான ஒருவர் செயல்முறை அரசியலில் ஈடுபடும் பொழுது மக்கள் அவரை தாங்கி நிற்பார்கள். மாகாணசபை தேர்தல் நடக்குமா இல்லையா என்பதெல்லாம் முக்கியமல்ல. அவர் இந்த ஐந்தாண்டில் சம்பாதித்த நன்னம்பிக்கையானது எதிர்கால தலைமைத்துவத்திற்கான ஒரு பெரும் முதுசம் ஆகும்.

இப்போது அவர் செயல்முறை அரசியலில் ஈடுபடமிடத்து மக்கள் அவர் பின்னால் செல்வார்கள். தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் அவர்கள் பின்னால் திரளும் வரலாற்றை தமிழ் மக்கள் எப்போதும் கொண்டுள்ளார்கள். தற்போது இலங்கை அரசின் கபட நாடகங்களையும், அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்தோடும் அரசியலையும் விக்னேஸ்வரன் தன் முதுகெலும்பை நிமிர்த்தியதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். இவர் தமிழ் மக்களுக்கான நீதியின் குரலாயும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கான கௌரவத்தின் சின்னமாயும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களினது பண்பாட்டின் குறியீடாயும் அதற்கான போராட்டத்தின் முரசொலியாயும் காணப்படும் நிலையில் அவர் நேரடிப் போராட்டத்தில் ஈடுபடும் போது அதற்கென ஒரு தனிச்சிறப்புமிக்க பரிமாணம் உண்டு.

அதாவது வாளின்றி துப்பாக்கியின்றி, படையின்றி பட்டாளமின்றி தலைமைதாங்க முற்பட்ட காந்தியின் ஊன்றுகோலின் பிடிக்குள் 40 கோடி மக்கள் திரளமுடிந்ததை வரலாறு நிரூபித்திருக்கிறது. தற்போது தமிழ் மக்களுக்கான அரசியல் களம் சர்வதேச அர்த்தத்திலும், உள்நாட்டு அர்த்தத்திலும் முன்னெப்பொழுதும் இல்லாததைவிட பலமாக உள்ளது. ஒரு வகையில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருந்த ஐந்தாண்டுகளில் விக்னேஸ்வரன் வகித்த பாத்திரம் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையும், அங்கீகாரத்தையும் அதிகம் பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன் தோளில் இருக்கும் துண்டை உதறியவாறு விக்னேஸ்வரன் வீதியில் அமர முற்பட்டால் அம்மக்கள் கால்பட்டு வீதியில் தீப்பொறிகிளம்பும். இத்தகைய வரலாற்று சூழலை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விக்னேஸ்வரனுக்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்பு தமிழ் மக்கள் அசந்து ஓய்ந்து போய்விடுவார்கள் என்று எண்ணியோரின் எண்ணங்களுக்கு மாறாக விக்னேஸ்வரனின் நிலைப்பாடு உறைந்துகிடந்த மக்களின் உள்ளங்களை தட்டியெழுப்பியுள்ளது. எதிரிகளுக்கு சவாலையும் அது ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் துவண்டு போகாதவர்கள், சளையா மனம் படைத்தவர்கள். ஆங்கிலத்தில் இதனை “persevering people” என அழைப்பர். சில மக்கள் கூட்டங்களை வரலாற்றுச் சூழல்கள் இத்தகைய நிலைக்கு உயர்த்தியுள்ளன.
அத்தகைய மக்களுக்கு தலைமைதாங்கக்கூடிய ஒருவர் தான் என்பதை விக்னேஸ்வரன் மேலும் நிரூபிப்பதற்கு வரலாறு அவருக்கு இந்த முதுமைக்காலத்திலும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

மருத்துவர் லஷ்மன் கூறியது போல “ஒரு தமிழ்த் தேசிய பேர்இயக்கத்தை” முன்னெடுக்க வேண்டுமென்றால் அது அடிமட்ட மக்களை தழுவியதாய் அமையவேண்டும்.லஷ்மனின் வார்த்தையில் சாதி, பிரதேச, பால் வேறுபாடுகளைக் கடந்த தேசிய இயக்கமாக கலை-இலக்கியம், பண்பாடு ஆகிய அனைத்தையும் தழுவியதாய் அமைவதுடன் இயற்கை மற்றும் காடு, தாவரங்கள், பிராணிகள் என்பனவற்றையும் தழுவிய ஒரு தேசிய சிந்தனைக்கு தலைமை தாங்க வேண்டியதாய் இக்கால கட்டம் கானப்படுகிறது. அனைத்துவகை மேலாதிக்கத்திற்கு எதிராகவும், சர்வதேச நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும், தமிழ்த் தேசிய பண்பாட்டு வளர்ச்சிக்காக உழைக்க வேண்டியதற்கான ஒரு பெரிய பொறுப்பை வரலாறு முன்வைத்துள்ளது. உலக பொதுமையான அர்த்தத்தில் ஜனநாயகமும் குறித்த இனம் சார்ந்த அர்த்தத்தில் பண்பாடும் தேசியவாத்த்திற்கு ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை விக்கினேஸ்வரனின் தலைமைத்துவம் பெரிதும் பிரதிபலிக்கிறது.

இவை அனைத்திற்குமான கட்டியமாய் விக்னேஸ்வரின் கடந்த ஐந்தாண்டு காலம் அமைந்தது என்று எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் கூறக்கூடிய அளவிற்கு இனிவருங்காலத்திற்கான அவரின் முன்னெடுப்புக்கள் அமையும் என நம்புவோமாக.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *