Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும்

நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும்

நரேன்-

கிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் ஏப்பரல் மாதம் அளவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களைக் காட்டி ஆகஸ்ட் மாதம் அளவிலேயே அந்த தேர்தல் நடைபெற்றது. அதே ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத்தொடரில் விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அன்றைய தற்காலிக ரணில் தலைமையிலான அரசாங்கம் ஐ.நாவிடம் காலஅவகாசம் கோரியிருந்தது. அதற்கேற்ப ஒக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திலேயே ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் 30- 1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்கியிருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 மார்ச் வரையில் கால அவகாசத்தையும் பெற்றிருந்தது. தற்போது மூன்று வருடங்கள் கடந்தும் அவை நிறைவேற்றப்படாத நிலையில் அடுத்து வரும் ஒரு வருடத்திற்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிர்ப்பந்தத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்குள் ஸ்திரமற்ற தன்மை தோற்றிவிக்கப்படுகின்றதா என்ற கேள்வி அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்குவதற்கும், அதனை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்கும், மீண்டும் கால நீடிப்பை பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காத்திரமாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகுவதற்கோ அல்லது அது நீடித்து இருப்பதற்கோ தனது ஆதரவினை வழங்குவதற்காக கூட்டமைப்பு இதுவரை காலமும் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்பதும், இந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களும் மற்றும் சட்டமூலங்களும் எதுவித நிபந்தனையுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதவைப் பெற்றிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

இவை ஒருபுறமிருக்க, தற்போது தேசிய அரசாங்கத்தின் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நடாளுமன்ற வரலாற்றில் முன்வைக்கப்பட்ட 47 ஆவது நம்பிக்கையில்லா பிரேரணை இதுவாகும். பிரதமர் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 ஆவது அவநம்பிக்கை பிரேரணை இது. இதற்கு முன்னர் மறைந்த பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களுக்கு எதிராக 1957 ஆம் ஆண்டும், சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு எதிராக 1975 ஆம் ஆண்டும் அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்பட்டு அவை தோற்கடிக்கப்பட்டன. அந்தவரிசையில் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்பட்டு 46 மேலதிக வாக்குளால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கும், அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து ஆட்சி அமைப்பதற்கும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் தேசிய இனமும், ஏனைய சிறுபான்மை சமூகங்களும் ஆதரவை வழங்கியிருந்தன. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதிலும் அவைகளின் பங்களிப்பு காத்திரமாகவே இருந்துள்ளது. இதனை தோற்கடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்கள் இருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக நாம் செயற்பட முடியாது. ஆகவே பிரதமருக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம் என்று தெரிவித்து இருந்ததுடன், பிரதமர் பதவியில் தப்பிப் பிழைப்பாரா என்ற சந்தேகத்தில் இருந்த ரணிலிடம் 12 அம்ச கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளதன் காரணமாகவே ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லக் கூடிய இந்த கூட்டராசாங்கம் உருவாக்குவதற்கு காரணமாக இருந்த வேளையில் எந்த நிபந்தனையையும் வைக்காது அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை தோன்றியிருக்கக் கூடிய சூழலில் பிரதமரிடம் இருந்து மட்டும் அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட பிரதான விடயங்களை மையப்படுத்தி உத்தரவாதம் பெறப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவம் வசமுள்ள காணிகள் மற்றும் அபிவிருத்தி என்ற போர்வையில் கையகப்படுத்தக் கூடிய காணிகள் தொடர்பான விடயங்களில் ஜனாதிபதியும் தொடர்புபட்டிருக்கையில், பிரதமரிடம் இருந்து மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள உத்தரவாதம் நடைமுறை சாத்தியமானதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

2015 ஆம் ஆண்டில் இருந்து இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கூட்டமைப்பு தலைவர்களுடன் முரண்பட்டு நின்ற தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது எழுத்து மூலமான உத்தரவாத்தை பெற்றிருப்பது முரண்நகையாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய சூழலில், அதாவது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணிலை ஆதரிப்பதற்கு ஒரு உத்தரவாதத்தை பெற வைத்துள்ளது. இதிலும் கூட வடமாகாண முதலமைச்சர் எழுத்து மூலம் உறுதிமொழிகளைப் பெற்று, நிபந்தையுடனான ஆதரவை வழங்குமாறு கூட்டமைப்புத் தலைமையிடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டிய உத்தரவாதத்தை தற்போது குறைத்த பட்சம் பிரதமரிடம் இருந்தாவது பெற்றிருப்பது சற்று ஆறுதலான விடயம். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த அரசாங்கம் தங்குதடையின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த காலவரையறையும், எழுத்து மூல உத்தரவாதங்களும் எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

இவைகள் நிகழாமல் போனால் அதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும். ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவோம் எனக் கூறியுள்ள கூட்டமைப்பு, இன்று அந்த அரசாங்கத்தின் பிரதமரிடம் இருந்து சில விடங்களை தீர்க்குமாறு உத்தரவாதத்தையும் பெற்றுள்ளது. இந்த இரண்டையும் நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு கூட்டமைப்பு ஏனைய தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைத்து ஒரு பரந்துபட்ட கட்டமைப்பை ஏற்படுத்தி வினைத்திறனுடன் செயலாற்றுவதற்கு முன்வரவேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் போதிய அழுத்தத்தை வழங்கியிருக்கவில்லை. மேலும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் போரடிய போதும் அந்த போராட்டத்தை கைவிடுமாறும், அத்தகைய போராட்டங்கள் மஹிந்தவை எழுச்சி பெறச் செய்து விடும் என்றும் கூட்டமைப்பு தலைமை கூறியிருந்தது. இந்தநிலையில் தற்போது பெறப்பட்டுள்ள உத்தரவாதம் எத்தகைய பலனை தரப்போகிறது. கடந்த காலங்களைப் போன்று அடுத்த வருடப்பிறப்பு, தைப்பொங்கள், தீபாவளி என காலத்தை கடத்துவதற்கான செயற்பாடா என்றே எண்ணத்தோன்றுகின்றது.

ஒட்டுமொத்தத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இடம்பெற்ற மோசடிகளின் காரணமாக அதற்கு பொறுப்பாகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்த போதிலும், பல இரகசியங்களையும் உள்ளடக்கியிருப்பதாகவே கருதமுடிகிறது. அதாவது இலங்கையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக சர்வதேச சமூகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அகற்றி அந்த இடத்தில் மைத்திரி -ரணில் அரசாங்கத்தை அமரச் செய்தது. இதனை மைத்திரி – ரணில் ஆகியோர் சர்வதேச அழுத்தத்தில் இருந்து மஹிந்தவை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பதும் அரசியல் அவதானிகளின் பார்வையாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் ரணில் விக்கிரம சிங்க மஹிந்தவை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாத்து உலங்குவானூர்தி மூலம் அவரை அவரின் சொந்த கராமத்திற்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதும், அதன் பின்னர் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் எந்தவொரு படைவீரரையும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சட்டத்தின் மூன் நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்து இருந்தமையும் அவர்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. தற்போது சர்வதேச சமூகத்தின் அழுத்தம் பெருமளவில் வலுவிழந்து சென்றுள்ள நிலையில் அல்லது 2019 மார்ச் மாதத்திற்கு பின்னர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கப் போகின்றது என்ற நிலையில் தன்னை காப்பாற்றியவர்களை காப்பாற்றி நாட்டையும் சர்வதேச அழுத்தத்தில் இருந்து மீட்டு எடுப்பதற்காகவே கூட்டு எதிரணியினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனரோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்புகின்றனர். இந்த சந்தேகங்கள் சரியானதா, தவறானதா என்பதற்கும் அப்பால் தமிழ் தரப்பினர் அனைவரும் இப்படி நடந்தால் என்ன செய்வது என்பதை கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *