Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை

நிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்;  மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை

நிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகளும், பொறுப்புப் பகிர்வுகளும் தமிழ் மக்களின் எதிர்கால வெற்றிக்கான அத்திவாரமாக அமையும் என்றும் தமிழ் தேசியத்தை உறுதியாக நேசிக்கும், தமிழ் மக்களின் நலன் சார்ந்து உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய தொலைநோக்கு, செயல்திறன், மக்களை அணிதிரட்டக் கூடிய ஆளுமை உள்ளவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்குமாறும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன.

தமிழ்தேசம் எதிர்நோக்கும் உடனடித் தேவைகளான நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தமிழர் வாழ்வை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய வல்லமை உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும்
பரிந்துரைப்பதாகவும் இந்த அமைப்புக்கள் இன்று செய்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் எல்லோரும் தவறாது பங்குபற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். அத்துடன் தமது வாக்குகளை வழங்கும்போது, தமிழ்தேசிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் திட சித்தத்தை உடையவர்களாயும், தமிழ்தேசம் எதிர்நோக்கும் உடனடித் தேவைகளான நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தமிழர் வாழ்வை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாயும் அடையாளம் காணப்படுபவர்களை தமது பாராளுமன்றப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்குமாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பில் நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்.

இலங்கைத் தீவின் பதினாறாவது பாராளுமன்ற தேர்தலானது ஆவணி மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் தேர்தலானது தமிழர் தரப்பை பொறுத்த மட்டில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இடம்பெறுகின்றது. ஏற்கனவே சிங்கள-பௌத்த வாதத்தின் கதாநாயகர்களாக விளங்கும் ராஜபக்ச சகோதரர்கள் ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம் என்ற சிங்கள பௌத்தவாதச் சிந்தனையை முன்னிறுத்தி இத்தீவில் உள்ள மற்ற இனக் குழுமங்கள், மதச் சிறுபான்மை குழுமங்கள் யாவரையும் இல்லாதொழித்து இத்தீவை சிங்கள பௌத்த நாடாக கட்டமைக்க முயற்சி செய்து கொண்டு வருகின்றார்கள் என்பது கண்கூடு. மேற்படி நிகழ்ச்சி நிரலை முழுமையாக அமல்படுத்த வேண்டி பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டி நிற்கின்றார்கள். இதன் மூலம் இத் தீவானது இராணுவ மயப்படுத்தப்பட்ட, சிங்கள-பௌத்த பெருந்தேசிய இனவாத சர்வாதிகார அரசாகப் பரிணமிக்கும் ஆபத்து மிகப் பூதாகரமாக எழுந்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் ஆபத்தானது தமிழ் மக்களின் இருப்பு, வாழ்வியல், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு மாத்திரமல்லாது இத் தீவில் உள்ள ஏனைய மக்களுக்கும், இப் பிராந்தியத்திற்கும், சர்வதேச ஒழுங்குக்கும் ஒரு பாரிய சவாலாகப் பரிணமிக்கும் என்பது எதிர்வு கூறக்கூடியதாக உள்ளது.

இலங்கை தீவானது, 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ அரசிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம், தமிழ் தேசிய இனமானது சிங்கள அரசினால் தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்டு, இதன் தொடர்ச்சியாக தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகின்றது. இன அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசிய இனமானது தமது இருப்பை தற்காத்துக் கொள்வதற்காக தாயகம், தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி ஆகிய கோரிக்கைகளை அடித்தளமாக வைத்து, பல பத்தாண்டுகளாக முதலில் சாத்வீக முறையிலும், அதன் தொடர்ச்சியாக ஆயுதமேந்தி தற்பாதுகாப்பு போரினை மேற்கொண்டும் எதிர்வினையாற்றி உள்ளது. இப்போராட்ட வரலாற்றில் பெற்றுக் கொண்ட படிப்பினைகளையும், வெற்றிகளையும் படிக்கட்டுகளாக் கொண்டு தமிழ்தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பது தமிழ் மக்களின் பாரிய கடமையாகும்.

இன்றைய இனவாத கட்டமைப்புக்குள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மட்டுமே எமது உரிமைகளை மீட்டெடுக்கும் என்று தமிழ் மக்கள் கருதவில்லை. ஆயினும் “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்” என்ற அங்கீகாரத்துடன் சர்வதேசத்தினை இலாவகமாகக் கையாளுவார்களாயின் மாறிக் கொண்டிருக்கும் உலக ஓட்டத்தின் ஒரு புள்ளியில் பலமான சக்திகளை எமக்குச் சாதகமாகத் திருப்பக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தற்போதைய உலக ஒழுங்கில் குறைந்தது பின்வரும் விடயங்களிலாவது அறிவுபூர்வமான செயலாக்கங்கள் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன:

● போர்க் குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு போன்றனவற்றிக்கான நீதிக்கான முன்னகர்வுகள்
● மேலுள்ள குற்றங்கள் மீள இடம் பெற முடியாத கட்டமைப்பு மாற்றங்கள், மற்றும் அரசியல் தீர்வு ஏற்பாடுகள்
● மக்களின் ஜீவாதாரமான நலன்களை பேணவும், போரினால் சிதைக்கப்பட்ட தாயகத்தையும் தமிழ் மக்களையும் கட்டியெழுப்பக் கூடிய சமூக பொருளாதார கொள்கை திட்டமிடல், மற்றும் அமுலாக்கல்.

போர்க்காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் தமிழ் மக்களின் குடிசனப் பரம்பலானது தொடர்ச்சியாக குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்குக் காரணங்களாக போர்க் காலச் சூழ்நிலையால் எம் தாயகத்திலிருந்து மக்கள் வெளியேறியமை, குறைவான பிறப்பு விகிதம், கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை போன்றன அமைகின்றன. இதன் விளைவாக தமிழர் பிரதேசங்களில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர் தொகை தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகின்றது. இத்தேர்தலில், அதிகரித்த எண்ணிக்கையிலான சுயேட்சைக் குழுக்கள் அரச ஆதரவுடன் களம் இறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போருக்குப் பின்னரான காலத்தில், தமிழ் மக்களின் மீது வலிந்து சுமத்தப்பட்டிருக்கும் வறுமை, வாழ்வாதாரக் குறைபாடுகள், மற்றும் பூர்த்தி செய்யப்படாத அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை முன் நிறுத்தி குறுகிய கால சலுகைகள் அடிப்படையிலான வாக்குறுதிகளை அள்ளி வீசி பெருந் தேசியவாத கட்சிகள் மற்றும் ஓட்டுக் குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இச் செயற்பாடுகள் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதையும், தமிழ்தேசிய சிதைவை வேகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தேர்தலில் பங்கேற்காததன் மூலமாகவோ, அல்லது சுயாதீனக் குழுக்களிற்கும் தென்னிலங்கை பெரும்பான்மையினக் கட்சிகளிற்கும் வாக்களிப்பதன் மூலமாகவோ தமிழர்களது வாக்குப்பலம் வீணாகித் தமிழ்ச் சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பலவீனப்படுத்தப்படும். இத்தேர்தலில் தனி மனிதர்கள் தோற்கலாம், அமைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் தமிழர் தேசம் மீளமுடியாத நிரந்தரமான சிதைவுக்குட்படுத்தப்படலாகாது.

எனவே, தற்போது எதிர்கொள்ளும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியத்தை உறுதியாக நேசிக்கும், தமிழ் மக்களின் நலன் சார்ந்து உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய தொலைநோக்கு, செயல்திறன், மக்களை அணிதிரட்டக் கூடிய ஆளுமை உள்ளவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். தமிழ்தேசம் எதிர்நோக்கும் உடனடித் தேவைகளான நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தமிழர் வாழ்வை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய வல்லமை உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் பரிந்துரைக்கிறோம்.

தேர்தல்கால முரண்பாடுகள், கசப்புகளுக்கு அப்பால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், மற்றும் தமிழ் தேசியத்தின் நலன் கருதி செயல்படும் அனைவரும் ஒரு வெளிப்படையான கலந்துரையாடலுடன் பொது உடன்பாட்டிற்கு வந்தே ஆக வேண்டும். தனி மரம் எக்காலத்திலும் தோப்பாகாது.

இடைக்கால, நீண்டகால பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் முன்னுரிமைகளும் ஆராயப்பட்டு, வேலைப் பகுப்புகளுடன் செயல்பட வேண்டும். தனி நபர்கள் எவ்வளவுதான் ஆற்றல் மிக்கவர்களாயினும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை தனித்து நின்று கையாள முடியாது. நிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகளும், பொறுப்புப் பகிர்வுகளும் தமிழ் மக்களின் எதிர்கால வெற்றிக்கான அத்திவாரமாக அமையும்.

தாயகமும், புலம்பெயர் தேச மக்களும் தமக்குரிய வெளிகளில் ஒரு பொதுப் புள்ளியை நோக்கி வெவ்வேறு தளங்களில் சமாந்திரமாகப் பயணிக்க வேண்டும். இவ்வாறான பயணம் உலக சட்ட திட்டங்கள், நெறிமுறைகளுக்கு அமைய இடம்பெறுமானால், எம்மை ஒடுக்க நினைக்கும் சக்திகள் தாயகத்திலுள்ள பிரதிநிதிகளையோ, செயல்பாட்டாளர்களையோ சட்டத்தின் பேரால் அச்சுறுத்த முடியாது.

அசுர பலத்தோடு எழுந்து வரும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள சமச்சீரில்லாத பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை, இன அழிப்பு மூலோபயத்தைக் கூர்மைப்படுத்தி அமுலாக்கும் நிறுவனக் கட்டமைப்புக்கள் என்பனவற்றை எதிர் கொண்டு முறியடிக்கக் கூடிய ஆற்றலுள்ள மக்கள் திரள் அணியாக தமிழ் மக்கள் இந்த தேர்தலை அணுக தவறி விட்டாலும், தேர்தலின் பின்னுள்ள யதார்த்தமும் எதிரியின் நடவடிக்கைகளும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், புலம்பெயர் மக்களை ஒருங்கு திரட்ட வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *