Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன ‘சந்திரயான் – 2’ : நடந்தது என்ன?

நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன ‘சந்திரயான் – 2’ : நடந்தது என்ன?

இந்தியா – பெங்களூரு:  ‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திரயான்-2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவை சுற்றிவரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன.
சந்திரயான் விண்கலத் தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து ‘விக்ரம்’ என்ற லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
48 நாட்கள் பயணத் துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி இன்று அதிகாலை தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இறுதிகட்ட பணிகள் மிகவும் சவலானதாக இருந்தது. வேகத்தை குறைத்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்வது என்பது மிகவும் கடினமான பணியாக விஞ்ஞானிகள் கருதினர். லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதுதான் இத்திட்டத்தின் சவாலான பணியாகும். அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் விண்கலம் தரையிறங்குவது எளிதாகிவிடும்.நிலவுக்கு அருகே லேண்டர் வந்ததும் எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும்.
தரையில் இருந்து 10 மீட்டர் உயரத் துக்கு லேண்டர் வந்ததும், அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 2 மீட்டர் என்ற அளவில் இருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நாளை அதிகாலை 1.40 மணிக்கு அதை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தொடங்கும்.
முதலில் எங்கு தரையிறங்குவது என்பதை லேண்டரில் உள்ள சென் சார்கள் ஆராய்ந்து, சமதள பரப்பு உடைய இடத்தை தேர்வு செய்யும். பிறகு, அதி காலை 1.55 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘மான்சினஸ்-சி’ – ‘சிம்பீலியஸ்-என்’ என்ற இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மிக மெதுவாக தரையிறங்கும்.
இந்தநிலையில், ‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் வெளியானது. சந்திரயான் 2 விண்கலத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக அவர் கூறினார். இது குறித்த காரணங்களை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் மேலும் கூறினார். இதன்போது விஞ்ஞானிகளும் அங்கிருந்தவர்களும் அழுதுவிட்டனர்.
சந்திரயான் – 2 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, ‘இஸ்ரோ’ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்திருந்தார்.
அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ – மாணவியரும் பெங்களூரு வந்தனர். இதையடுத்து, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *