பல்வேறு நிலைகளிலும் பின்தங்கிக் காணப்படும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் பெரும்பாலானோர் கடற்றொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றோம். ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்களைக் கொண்ட எமது பிரதேசத்தில் ஒருநாள் படகுகள், சிறிய படகுகள், தெப்பங்கள் என அறுநூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடிக் கலங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் எமது மீன்பிடிக் கலங்களைப் பாதுகாப்பான முறையில் நங்கூரமிட்டுத் தரித்து வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இதனால் காற்று கடுமையாக வீசும் நேரம் மற்றும் கடற்கொந்தளிப்பான நாள்களில் படகுகள் அறுபட்டு பாறைகளுடன் மோதுண்டு மிகுந்த சேதங்களுக்கு உள்ளாகின்றன. பெரும் இழப்புக்களை எமது மீனவர்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இழப்புக்களை எதிர்கொண்டவர்கள் இன்னமும் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனா். எமது மீனவர் பாதுகாப்பற்ற இந்தக் கடலோரம் தமது படகுகளைப் பாதுகாக்க முடியாமல் திண்டாடுவதும், அல்லலுறுவதும் கண்கூடாகும்.தினம்தினம் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்கின்றனர். இந்த நாள்கள் இவர்களுக்கு வருமானமற்ற நாள்களாகவே அமைகின்றன என்றனா்.
இது தொடா்பாக நெடுந்தீவு கடற்றொழில் சங்கத் தலைவா் அருள்ஜீவன் தெரிவித்ததாவது, இந்தவிடயம் தொடர்பாக நாம் பல வருடகாலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் அரசியல் தலைமைகள் வரை பல்வேறு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கான திட்டங்கள் முன்மொழி யப்பட்டுள்ளதாக பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகின்றதே தவிர முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
எமது பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை. இது எமது நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. மீனவக் குடும்பங்கள் அதிகமாக வாழும் நெடுந்தீவின் வடக்குக் கரையோரப்பகுதியில் தமது மீன்பிடிக்கலங்களை பாதுகாப்பான முறையில் நங்கூரமிட்டு வைப்பதற்கான நங்கூரம் இடும் தளமொன்றை அமைத்துத் தரும்படி எமது மீனவர்கள் கோரி நிற்கின்றார்கள். இது எமது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதன் மூலமாக நெடுந்தீவுப் பிரதேச மீனவர்களது முக்கியமானதொரு பிரச்சினையொன்று தீர்க்கப்படுவதுடன் நெடுந்தீவு பிரதேசத்தின் கடற்றொழில் மேம்பாடு அமைவதற்கும் மீனவக் குடும்பங்களது வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் இது வழிகோலும்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் எமது பிரச்சினை தொடர்பில் மேலான கவனமெடுத்து செயற்பட வேண்டுமென பாதிப்புறும் மீனவ சமூகத்தினரைப் பிரதிநிதித்து வப்படுத்தும் அமைப்பு என்கின்ற வகையில் நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினராகிய நாம் எமது மக்களுடன் இணைந்த வகையில் எம் கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றனா்.(15)