Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பரிமாணம் பரிணாமம் பகரும் பரிசம்

பரிமாணம் பரிணாமம் பகரும் பரிசம்

மருத்துவர் சி.யமுனாநந்தா

பரிசம் பரிணாமரீதியில் ஆதிகால விலங்குகளில் இருந்து தற்கால முலையூட்டிகள் வரை மிகவும் இன்றியமையாத உணர்வாக இருக்கின்றது. பரிசம் என்பது தொடுகை உணர்ச்சியாகும். தொடுகை உணர்வு வாழ்வின் ஒரு பகுதியாகும். ஆனால் இதனை விளங்குவது மிகவும் சிக்கலான விஞ்ஞான அறிவாகும்.

பரிசம் என்னும் தொடுகை உணர்வுக்குரிய அதிர்வு அலைகள் இரு பொருட்களுக்கு இடையே உருவாகின்றது. தொடுகை உணர்வு பொறியியல் அதிர்வுகளை உடலில் தொடுகைப் புலன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி மின்கணத் தாக்கங்களாக நரம்புக்கலங்கள் வழியே மூளையின் புலன் உணர்வுப்பகுதிக்குக் கடத்தப்பட்டு உணரப்படுகின்றது.

இரண்டு பொருட்கள் தொடுகையுறும்போது மீள்தன்மை அலைகள் (Rayleigh Waves) உருவாகின்றன. இவ்வலைகள் தொடுகையின்போது மேற்பரப்பில் மட்டும் நிற்பதில்லை. அவை உடலினுள் ஊடுருவி தோலிலும், என்பிலும் உள்ள தொடுகைப்புலன் கலங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனையே நரம்புக்கலங்கள் கணத்தாக்கங்களாக மூளையின் புலன் உணர்வுக்கு கடத்துகின்றன. அங்கு கிரகிக்கப்படுகின்றது. பரிசத்திற்குரிய புலன் உணர்வுகளை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தினை நோக்கி விஞ்ஞானம் முன்னேறுகின்றது.

மாயமெய்த்தோற்றத்தில் (Virtual Reality) பார்வைப்புலன், செவிப்புலன் என்பனவற்றுடன் தொடுகைப்புலனும் மிகவும் இன்றியமையாதது ஆகின்றது. மாயமெய்த்தோற்றம் பொழுது போக்கு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், கல்வி நடவடிக்கைகள், ஆய்வு நடவடிக்கைககள், மருத்துவ ஆய்வுகள், சத்திரசிகிச்சைகள் யாவற்றிலும் பிரயோகிக்கப்படுகின்றது. மேலும் மாதிரி மெய்யுணர்தல் (Simulation Model) பிரயோகம் பிரபஞ்சத்தின் வியாபகம் வரை விரிவடைந்து உள்ளது. அண்மையில் விருத்தியடைந்து வரும் மாயமெய்த்தொழில் நுட்பத்தில் தொடுகை உணர்வின் பிரயோகம் இன்றியமையாததாகப் பரிணமித்துள்ளது. மாயமெய்த்தொழில்நுட்ப நுகர்வானது தொடுகை அதிர்வுகள் மூலம் வெறுமை அற்றதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

புவிநடுக்கம், எரிமலை, கடல்கோள் என்பவற்றை பரிச உணர்வுகள் மூலம் சில விலங்குகள் உணர்கின்றன. மனிதனின் செல்லப்பிராணிகள் தம்மிடையேயும், தமது எஜமானர்களிடையேயும் பரிச உணர்வைக் காட்டுகின்றன. பரிச உணர்வின் தேவை கருதியே பல விளையாட்டுப் பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதன் தான் வாழும் சூழலில் அமரும் இருக்கைகள், நகரும் வாகனங்கள், பருகும் குவளைகள் என்பவற்றில் பரிச உணர்வில் திருப்தி காண்கின்றான். அவ்வாறே நவீன வீட்டுக் கட்டமைப்புக்களும், தரைகளும், தளபாடங்களும் பரிச உணர்வுக்கு முக்கியமளிக்கும் கரடுமுரடற்ற மேற்பரப்புக்களால் அமைக்கப்படுகின்றமை. பரிசத்தின் பாவனையை இயல்பு வாழ்வில் சாதாரணமாகக் காணலாம். பூமியில் வாழும் உயிர்கள் யாவும் பரிசம் பெற்றே வாழ்கின்றன. இயற்கையில் உயிரிகளின் பரிசத்தைக் காணலாம். ஆ தனது கன்றின் மீது காட்டும் பரிசம், தாய்ப்பூனை தனது குட்டிகள் மீது காட்டும் பரிசம், இவ்வாறே இயற்கை அன்னை மனிதர் மீது காட்டும் பரிசம் தென்றலாகவும், கடற்கரையில் கடல் அலைகளாகவும், ஆற்று நீரோட்டமாகவும் அமைகின்றது. மழைமுகில்கள் வான்மழையாக எம்மேல் பரிசத்தை ஏற்படுத்துகின்றன. முழுநிலா ஒளியின் பரிசம் மனதினை வருடிவிடும்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

இலக்கிய உலகில் நன்கு பரீட்சயமாகப் பரிசத்தைக் காணலாம். தாயின் பரிசம் தாலாட்டிலே, தாதியின் பரிசம் நோய்க்காப்பிலே, பாவையின் பரிசம் பார்வையிலே, பூவையின் பரிசம் காதலிலே இவ்வாறு பரிசத்தை இதயபூர்வமாகக் கவிதைகளில் காணலாம். மேலும், தமிழ்க் கலாச்சாரத்தில் பெண்களுக்கு அணிகலன்களாக அணியும் நகைகள் அவர்களின் இயற்கையான பரிச உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, கழுத்தில் ஒட்டியாணம், தங்கச்சங்கிலி, தாலி மற்றும் கைகளில் காப்பு, விரல்களில் மோதிரம், அரைநாண் கயிறு, காற்சங்கிலி என தங்கத்தால் பரிசம் எனபரிசத்திற்கு எம் நங்கைகளுக்கு அணிகலன்கள். இறை ஆசீர்வாதம் பெறுவதிலும், மனித பரிசம் முக்கியபங்கு வகிக்கின்றது.

சோலையில் தென்றல் தரும் பரிசம் இதமானது. நாம் தினமும் நீராடும் பரிசம் ஓர் இன்பமானது. இதனை இரசித்து உணர்பவர்கள் குறைவு. நாம் அணியும் ஆடைகள் தரும் பரிசம் சுகமானது. பரிசத்தின் உணர்வை உற்றுநோக்கின் மெய்மாயதொழில்நுட்பத்தில் பரிச உணர்வு ஊடுகடத்தல் பொறிமுறையினை விருத்தி செய்யலாம்.

ஓசையின் பரிசம் நாதமாக விளங்கும். ஆலயங்களில் வேத ஒலியின் பரிசம், மணியோசையின் பரிசம், தேவார பண்களின் பரிசம், இயல்புணர்வுக்கு இன்றியமையாதவை. ஆலயத்தில் வழிபடுவதற்கும், தொடுநிரையில் வழிபடுவதற்கும் உள்ள உணர்வு வேறுபாட்டிற்கு பரிச உணர்வும் ஓர் காரணம். பொதுவாகப் பரிச உணர்வின் வெளிப்பாடாக முத்தம் அமைகின்றது. பறக்கும் முத்தம் பரிசமற்ற வெளிப்பாடாகும். இவ்வாறே மாயமெய்த்தோற்றப்புலனில் பரிசத்தை உணர்வதற்கு மனிதன் இன்று பழக்கப்பட்டு வருகின்றான். தொடுநிரை தொடர்பிகள் ஊடு மின்னணுமனிதம் (Human) மெய்காண் மகாநாடுகள், மெய்காண் காட்சிகள் என்பவற்றில் பரிசஉணர்வு பொறிமுறை, ஊடுகடத்தல் தொழில்நுட்பம், நியநிலை உணர்வுக்கும், பரிசத்திற்கான புதிய பரிமாணமாகவும் பரிணமித்து உள்ளது. பரிசப் புலனுணர்திகள் மிகக்குறைந்த சக்தியில் அதிர்வுகளைக் கடத்தக்கூடியதாக, மீள்தன்மை மிக்கதாக அமைக்கப்படுகின்றன. எதிர்கால ஆடைத்தொழில் நுட்பமானது பரிசப்புலனுணர்த்திகளையும் உள்ளடக்கியதாக அமையும்.

ஈர்ப்பு அலைகள் போன்றே பரிச அலைகளும் சக்திமிக்கவை. அவை பிரபஞ்சத்தில் பரிணமிக்கின்றன. பிரபஞ்ச அதிர்வுகள் எம் பரிசத்தைத் தீண்டும். இவை இயற்கையின் சலன ஓட்டத்தில் இயையும். யோகநிலையில் ஐம்பூதங்களுடன் ஒன்றிக்கும் பரிசத்தினை மெய்ஞானிகள் பெறுவர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *