செய்திகள்

பாராளுமன்றக் கூத்துகளும் பழைய ஞாபகங்களும்

திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது கம்பஹா மாவட்டத்தில் ஒரு பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது அந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் அடிக்கடி இடம்பெற்ற அமளிதுமளிகள் குறித்து விரக்தியடைந்தவராக வெளியிட்ட கருத்து இன்று எனக்கு நினைவுக்கு வந்தது.

மதுபானத்துக்கும் போதைப்பொருளுக்கும் அடிமையாகிப்போனவர்கள் நாளடைவில் அவற்றின் வியாபாரிகளாகவே மாறி பெரும்பணம் சம்பாதித்து முதலாளிகளாகி இப்போது பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள்’ என்று திருமதி குமாரதுங்க அன்று சொன்னார்.

இன்னொரு சம்பவம் பாராளுமன்ற சபாநாயகராக கே.பி. இரத்நாயக்க பதவிவகித்தபோது இடம்பெற்றது. ஒரு எம்.பி.க்கு உரையாற்ற வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்த பின்னரும் அவர் பேசிக்கொண்டிருந்தார்.உங்கள் நேரம் முடிவடைந்து விட்டது, அமருங்கள் என்று இரத்நாயக்க பல தடவைகள் அறிவுறுத்தியும் அந்த எம்.பி. செவிமடுக்கவில்லை.ஆத்திர மிகுதியில் இரத்நாயக்க ‘ சொல்வதைக் கேட்கிறான் இல்லையே.இவங்களுக்கு வெடிவைக்க வேண்டும் ‘ என்று சந்தடியில்லாமல் சொன்னது பாராளுமன்ற செய்தியாளர் கலரியில் இருந்த எமக்கு தெளிவாகக் கேட்டது.அவர் தனது மைக்ரோபோனை நிறுத்தாமல் அவ்வாறு பேசிவிட்டார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தாலும் எம்.பி.க்களின் பண்பற்ற நடவடிக்கைகள் எந்தளவுக்கு சபாநாயகருக்கு ஆத்திரமூட்டியது என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சம்பவம் உதவியது.

இன்று ஒரு செய்தியை ஆங்கிலப் பத்திரிகையில் வாசித்தேன். நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்குள் இரு எதிரணி எம்.பி.க்கள் கூரிய கத்தியைக் காட்டி அட்டகாசம் செய்ததாக அரசாங்கத் தரப்பு எம்.பி. சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது ‘ தற்போதைய நிலைவரங்களைப் பார்க்கும்போது கத்தியல்ல வாளையே கொண்டுவந்திருக்கவேண்டும் ‘ என்று அவர் தனது வெறுப்பை வெளிக்காட்டியதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

பிரேமதாசவின் ஆட்சிக்காலம். சபாநாயகர் எம.எச்.முஹம்மது.பிரதி சபாநாயகர் பிரபல சினிமா நடிகர் காமினி பொன்சேகா.அவர் சபைக்குத் தலைமைதாங்கிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் எதிரணியினரான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் குழப்பம் விளைவித்தனர்.அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பொன்சேகா சபையில் இருந்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் சிலரை வெளியேற்றத் தீர்மானித்தார்.அவர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தபோதிலும் எவரும் வெளியே செல்லவில்லை.தொடர்ந்து குழப்பம் விழைவித்தவண்ணமே இருந்தனர்.

அதையடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பிரதி சபாநாயகர் முதலில் படைக்கலச் சேவிதரின் உதவியை நாடினார்.அவரால் எதுவும் செய்யமுடியாமல் போகவே பொலிசார் அழைக்கப்பட்டனர்.ஒரு பொலிஸ் உயரதிகாரி சபைக்குள் வந்ததும் அவர் மீது ஒரு எம்.பி.கடுமையான தாக்குதலைத் தொடுத்து சபை நீளத்துக்கு தள்ளிவிழுத்திக்கொண்டு போனதை பத்திரிகையார் கலரியில் இருந்து பார்த்தவர்களில் அடியேனும் ஒருவர். அந்தமாதிரி ‘ பொக்சிங் ‘ விட்ட எம்.பி.யார் தெரியுமா? அன்று 44 வயதானவராக இருந்த மகிந்த ராஜபக்ச.

இன்று சபைக்குள் தனது தரப்பு ‘ மக்கள் பிரதிநிதிகள் ‘ செய்த அட்டகாசங்களை நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையில் மாத்திரமல்ல, இப்போது பிரதமராக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ராஜபக்ச கட்டுப்படுத்தியிருக்கவேண்டும் என்று அலுவலகத்தில் இளம் பத்திரிகையாளர் ஒருவர் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு என்னிடம் கூறியபோது எனக்கு அந்த ‘ பொக்சிங்’ நினைவுக்கு வந்தது.இன்னும் பலது இருக்கிறது இங்கு இடம் போதாது.

மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கத்தின் முகநூல் பதிவிலிருந்து ..