பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 25ஆம் திகதி புதுடில்லி செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மூலோபாயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வௌிவிவகார அமைச்ச் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வீதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் நித்தின் கட்காரி ஆகியோருடனும் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.
இலங்கை – இந்திய மீனப் பிரச்சினை, வர்த்தக நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படலாம் என இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் நிகழ்வுகள் இலங்கையில் நடாத்தப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடுகின்றார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் மூன்றாவது தடவையாக உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
அத்துடன், நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இரண்டாவது முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, பொருளாதார, தொழில்நுட்ப கூட்டு உடன்படிக்கை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலையகத்திற்கான விஜயத்திலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் – கிளங்கன் வைத்தியசாலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இந்த திறப்பு விழா எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10