Search
Tuesday 17 September 2019
  • :
  • :

புதிய அரசியலமைப்பும் குழப்பங்களும்

புதிய அரசியலமைப்பும் குழப்பங்களும்

வசந்தன்-

இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் தேசிய இனத்தின் ஒப்புதல் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் கைகளுக்கு அதாவது ஒரு மனிதரின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறின. பாராளுமன்றமே ஜனாதிபதியின் தயவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த முறைமை காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளினாலும் தமது நலன்களை முன்னுறுத்தியும், கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், மாற்றுக் கட்சிகளை அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுப்பதற்காகவும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கேற்ப சட்டங்களிலும் மாற்றங்களும், திருத்தங்களும் செய்யப்பட்டன. கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் சர்வதேச நாடுகளின் பின்னனியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன்போது நீலம், பச்சை என்ற வேறுபாடு இன்றி இரு பிரதான கட்சிகளும், பொது அமைப்புக்களும் ஓரணியில் இணைந்திருந்தன. இந்த நாட்டில் ஓரு சகாப்த காலத்திற்கு மேலாக நீடித்து இருக்கின்ற தேசிய இனப்பிரச்சைக்கு தீர்வு காணல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்குதல் என்பவற்றை தேர்தல் மேடைகளில் வலியுறுத்தி அதற்காக இந்த நாட்டின் அனைத்து மக்களிடமும் இன, மத, மொழி பேதமின்றி மக்கள் ஆணையைக் கோரியிருந்தனர்.

தென்னிலங்கையுடன் காலத்திற்கு காலம் எதிர்ப்பு அரசியல் செய்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமை ஆட்சி மாற்றத்திற்காக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. சர்வதேசத்தின் பின்புலமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிரதான தேசியக் கட்சிகளுடன் இகைகோர்ப்பதற்கு நிர்ப்பந்தித்திருந்தது. மஹிந்தவினால் ஏமாற்றப்பட்டதன் காரணமாக ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதவையும், தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்ட சர்வதேச சமூகம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமது அணுகுமுறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திர உறவில் வெற்றியும் பெற்றுள்ளது. அதாவது இலங்கைத்தீவுக்கு சர்வதேச மட்டத்தில் எந்தவொரு நாடும் எதிரி அல்ல என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை மையமாக வைத்து தமது நலன்களை முன்னுறுத்தி காய்களை நகர்த்தும் சர்வதேச சமூகம் ஆட்சி மாற்றத்தின் பின் தமது நலன்களை பெற்றுள்ளதுடன், அதனை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. இதனால் புதிய அரசாங்கத்திற்கான சர்வதேச நெருக்குதல்கள் படிப்படியாக குறைந்து இல்லாமல் போகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அவ்வப்பொழுது தாங்கள் நடுநிலையுடன் செயற்படுகின்றோம் என்பதைக் காண்பிப்பதற்காக அரசாங்கத்தின் மீது சிறிய அளவில் அழுத்தத்தை பிரயோகிக்கிறது. மறுபுறத்தில் அரசாங்கம் தன்மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த அரசாங்கம் நீடித்து இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச சமூகத்திற்கும், தமிழ் தலைமைக்கும் காட்ட முற்படுகிறது.

கியூபாவின் உடைய ஜனாதிபதி பிடல் கஸ்ரோ, ‘அனைவரும் ஒரே கப்பலில் வேறு வேறு நோக்கங்களுக்காக பயணிக்கிறோம்’ என்று ஐ.நா சபை குறித்து தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இதன் மூலம் ஐ.நாவில் அங்கம் வகிப்போர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது என்பதும், அந்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அதில் அங்கம் வகிக்கிறார்கள் என்பதும் நிரூபணமாகிறது.

நல்லாட்சி எனக் கூறப்படும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முழுபாராளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அதனை வழிநடத்துவதற்காக ஒரு வழிகாட்டல் குழுவும் அந்த குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக 6 உப குழுக்களும் அமைக்கப்பட்டன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள அனைத்து கட்சிகளும் உள்வாங்கப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாகிய இந்த அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கமாக இருந்தமையால் தமது கட்சி நலன்களை முன்னுறுத்தாமல் நாட்டு நலனை முன்னுறுத்தி தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் இருந்தது.

ஆனால், காலத்திற்கு காலம் ஆட்சிப் பீடம் ஏறிய அரசாங்கங்கள் செய்ததனைப் போன்று இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற விருப்பமின்றி இருக்கின்றது. குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தலுக்கு எதிரான சட்ட மூலத்தை நிறைவேற்றாமல் அரசாங்கம் அதனை காலம் கடத்தி வருகின்றது. குறித்த சட்டமூலமானது பயங்கரவாதத்தில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றிய படைவீரர்களை காட்டிக் கொடுப்பதாக அமையும் என்று மஹிந்த தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் என ஜனாதிபதியும் இந்த நாட்டின் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பௌத்த மகாநாயக்கர்கள் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தனர். வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு வரக் கூடிய நிலையில் பௌத்த குருமார்களின் இந்த தீர்மானம் தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் மத்தியில் அதிருப்தியையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த மகாநாயக்கர்களை சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசியிருந்தார். தற்போது பௌத்தமகாநாயக்கர்கள் புதிய அரசியலமைப்பில் ‘ பௌத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தீர்வு, மாகாணங்களுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட கூடாது’ என பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். இந்த நிபந்தனைகள் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

இந்தவிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ‘பௌத்த துறவிகள் தமது தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளதுடன், நான்கு பேர் சேர்ந்து எடுக்கும் தீர்மானம் தான் சரி எனில் பாராளுமன்றம் எதற்கு என கேள்வியும் எழுப்பியுள்ளார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மகாநாயக்கர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரியவருகிறது. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவில்லாத தன்மையே உள்ளது. இதற்கு தீர்வு தொடர்பான விடயங்களை கூட்டமைப்பு சார்பில் ஓரிருவர் கையாண்டு வருவதே காரணம். இந்த நிலையில் மகாநாயக்கர்களுடன் கூட்டமைப்பு எதனைப் பேசப் போகிறது.

மறுபுறம், தெகியத்தகண்டிய மகாவலி சாலிக்கா மண்டபத்தில் நடைபெற்ற வண.மக்குருப்பே பஞ்ஞாசேகர தேரருக்கான நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றும் போது ‘புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தேச வரைபு கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை. அவ்வாறு தயாரிக்கப்படுமானால் அதனை நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் முன்வைத்து அனைத்து முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களையும் கருத்தில் எடுத்து திருத்தங்களுடன் அந்த உத்தேச வரைபை தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும், நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள விடயங்களில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், அரசியலமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் இருக்கும் பந்தியிலும் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு இருக்கும் அக்கறை தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாரி தேர்தல் தொடர்பான கோரிக்கை ஆகும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேர்தல் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளித்து தேர்தலை நடத்துவதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகிறது.

இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து ஒற்றுமையாகவும், சமத்துவத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழவே விரும்புகிறார்கள். அதற்கேற்ற வகையில் இனங்களுக்குள்ளும், மதங்களுக்குள்ளும் பிரிவினைகள் ஏற்படாத வகையில் அனைவரது நலன்களையும், தனித்துவத்தையும், போற்றி பாதுகாக்கின்ற வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். வெறும் தேர்தல் முறை மாற்றத்திற்காகவும், ஜனாதிபதி அதிகார வரையறை மாற்றத்திற்காகவும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாக இருந்தால் அது இந்த நாட்டில் நீண்டகால நல்லிணக்கத்திற்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. இவை கடந்தகால படிப்பினைகள். பாதிக்கப்படாத சமூகமாகவுள்ள தென்னிலங்கை மக்களின் மனநிலையில் பெருமளவானோர் குறித்த மாற்றங்களுடன் திருப்தியடையலாம். ஆனால் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக உரிமைக்காக போராடி, பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வாழும் தமிழ் தேசிய இனம் தமக்கான ஒரு நிரந்த தீர்வையே எதிர்பார்த்து நிற்கிறது. அதுவே இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்தர தீர்வாக அனைத்து இனங்களையும் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும், ஒருவர் தோளில் ஒருவர் கைப்போட்டு வாழக் கூடிய வகையிலும் வாழ வழியை ஏற்படுத்தும். மாறிவரும் சூழலை கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழ் தலைமை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தத்தை கொடுத்து இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயலவேண்டும். இதுவே தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கக் கூடியதாக இருக்கும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *