Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புலம்பெயர் அமைப்புக்கள் புத்துயிர்ப்பு பெறுவதும் ஒன்றிணைந்து செயற்படுவதும் இன்று மிக அவசியம்

புலம்பெயர் அமைப்புக்கள் புத்துயிர்ப்பு பெறுவதும் ஒன்றிணைந்து செயற்படுவதும் இன்று மிக அவசியம்

லோ. விஜயநாதன்

இன்றைய உலக ஒழுங்கு முரண்பாடுகள் நிறைந்த மிக சிக்கலான சூழமைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. சர்வதேச நியமனங்கள், கொள்கைகள், உடன்படிக்கைகள், அமைப்புக்கள் என்பவை உதாசீனப்பப்டுத்தப்பட்டு துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதை காணமுடிகிறது. இந்த நிலைமைக்கு மூலகர்த்தாவாக இருப்பவர் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப். வர்த்தகத்தையே தனது தொழிலாக கொண்டவரான இவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து வர்த்தக நலனை மட்டுமே முக்கியமாக முன்னிறுத்தி செயற்படுவதன் விளைவாக மற்ற நாடுகளும் அதற்கு எதிர்வினை ஆற்றவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதனால் உலக ஒழுங்கில் ஒரு நிச்சயம் அற்ற குழப்பநிலை உருவாகி இருக்கிறது.

குறிப்பாக அமெரிக்க – சீன வர்த்தகப் போர் என்றுமில்லாதவகையில் உச்ச நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் திடீரென கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதன் தாக்கம் தனியே மனித அழிவுடன் நில்லாது பொருளாதாரம், உணவுக்கையிருப்பு, வளப்பங்கீடு என்பனவற்றிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இது மேலும் நாடுகளுக்கிடையேயான முரண்நிலைகளை கூர்மைப்படுத்தி வருகிறது. இந்த நிலைமையை சில நாடுகள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஏனைய நாடுகளில் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முனைகின்றன. அமெரிக்க-சீன வர்த்தகப்போரும் சீனாவிலிருந்து வந்த கொரோனா காரணமாக அமெரிக்கா சந்தித்து வரும் உயிரிழப்புகளும் பொருளாதார சரிவும் தென்னாசிய பிராந்தியத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு விளைவாகவே அண்மையில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலை குறிப்பிட முடியும். இந்நிலை மேலும் கூர்மை அடைந்தால் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் விரும்பியோ விரும்பாமலோ இந்திய-சீன பிரச்சினைக்குள் செல்ல நேரிடும். இதேபோல் 2009க்கு பின்னர் இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டும் காணாதது போல இருந்துவரும் இந்திய அரசும் விருப்பமின்றியேனும் எமது பிரச்சனையில் தலையிடவேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

இந்த சூழ்நிலை மாற்றங்களின் பின்னனியில் பூகோள அரசியலை தமிழ் மக்கள் தமது உரிமை போராட்டத்துக்கு சாதகமான முறையில் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல்கள் உபாயங்கள் இன்றி நாம் செயற்பட்டால் எமக்கு மிகவும் பாதகமான ஒரு நிலைமையை கூட இது ஏற்படுத்திவிடலாம். ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைமைகளை ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. அதனை பிறிதொரு சந்தர்ப்பதில் நாம் ஆராயலாம்.

Diaspora-Organisations-

ஆனால், இங்கு வலியுறுத்தப்படும் விடயம் என்னவென்றால், தமிழர் தரப்புக்கள் நிறுவன மயபப்டுத்தப்பட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த உபாயங்களை வகுத்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதுதான். ஆனால், எந்த ஒரு அமைப்பும் தாயகத்தில் மூலபாயங்களுடன் கூடிய நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக
தெரியவில்லை. இதற்கு அங்குள்ள அச்சுறுத்தலுடன் கூடிய இராணுவ புலனாய்வு செயற்பாடுகளும் வளப்பற்றாக்குறைகளும் காரணமாக அமையக்கூடும்.

ஆனால் புலத்தில் இந்த செயற்பாட்டை சிறப்பாக செய்யக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இருந்தும் எந்தவிதமான செயற்பாடுகளும் நடைபெறுவதாக தெரியவில்லை. இது எமது போராட்டத்தில் பெரும் பின்னடைவாகவே உள்ளது. இதை நிவர்த்தி செய்வதே புலம்பெயர் அமைப்புக்களின் முதன்மை செயற்பாடாக அமையவேண்டும். ஆகவே, புலம்பெயர் தமிழ் மக்கள் தமது நிறுவன ரீதியான செயற்பாடுகளை மறுசீரமைப்பு செய்து குறைந்த பட்சம் அரசியல் மூலோபாய நகர்வுகளையேனும் முன்னெடுப்பதற்கு சிந்திக்க வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசு என்பது மிகச் சிறந்த மூலோபாய எண்ணக்கருவாக உருவாக்கப்பட்டிருந்தாலும் செயற்பாட்டின் அடிப்படையில் எந்தவிதமான மூலோபாய அணுகுமுறைகளும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் ஒருங்கிணைந்த செயற்பாட்டை அதனால் ஏற்படுத்த ,முடியவில்லை.

ஆனால், கடந்த 10 வருட கால அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு புலம்பெயர் அமைப்புக்கள் புத்துயிர்ப்பு பெறவேண்டும். புலம்பெயர் அமைப்புக்கள் தமக்கிடையேயான வேற்றுமைகளையும் பழைய கசப்புணர்வுகளையும் களைந்து ஒருவரை ஒருவர் அங்கீகரித்து உடனடியாக ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மழுங்கடிக்க செய்யப்பட்டுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் பொறுப்புக்கூறல் தீர்மானத்தை உரிய முறையில் முன்னெடுத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கால தாமதம் இன்றி மேற்கொள்ளவேண்டும். இதற்கு, புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் கலந்துரையாடல்களும் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *