Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன்-ஜனாதிபதி

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன்-ஜனாதிபதி

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியிலும் போதைப்பொருள் வர்த்தகர்களே இருக்கிறார்கள் என்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு, நாட்டின் சுயாதீனத்தில் சர்வதேசத்தினர் தலையிட வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று உலகில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் தோன்றியுள்ளன. சர்வதேச தீவிரவாதம்போல, போதைப்பொருள் வர்த்தகமும் என்னைப் பொறுத்தவரை தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.அமெரிக்க ஜனாதிபதி கூட, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

நான் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தை 1989 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்துவிட்டேன். ஏன், நான் அரச சேவையின் மிகவும் சிறிய கடமையில் ஒருகாலத்தில் இருந்தபோது கூட கசிப்பு, கஞ்சா, கள்ளச்சாரய வர்த்தகர்களுக்கு எதிராகவே செயற்பட்டேன்.இதனால், எனக்கு அவர்களால் அச்சுறுத்தலும் ஏற்பட்ட காரணத்தினால்தான் நான் அந்த பதவியிலிருந்தே அன்று விலகினேன்.

எமது நாட்டில் 80 வீதமான சிறைக்கைதிகள், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களே இருக்கிறார்கள். வெலிக்கடை சிறைச்சாலையை எடுத்துக்கொண்டால் அதிகளவாக பெண்களும் சிறைக்கைதிகளாக இருக்கிறார்கள்.இலங்கையை பொறுத்தவரை பெண்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான் பாரிய சவாலான ஒரு விடயமாக இருக்கிறது.

ஒரு வருடத்துக்கு மட்டும் 50 ஆயிரம்பேருக்கும் அதிகமானோர் போதைப்பொருளினால் சிறைச்சாலைக்கு செல்கிறார்கள். இதில் பெரும்பாலும் பெண்களே இருக்கிறார்கள்.இதனை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்க்காலத்தில் எமது சமூகமே சீரழிந்துவிடும். இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

இன்று இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனால்தான் நானும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென கூறிவருகிறேன்.எனினும், இன்று இதற்கு எதிராக அரசாங்கத்தின் பிரதானி, எதிர்க்கட்சியின் பிரதானி, அமைச்சர்கள் என பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச்செயலாளர் என்னுடன் கலந்துரையாடினார். மரண தண்டனையை நிறைவேற்றப் போகின்றீர்களா? என்று என்னிடம் கேட்டார்.நான் எமது நிலைப்பாட்டையும், போதைப்பொருளினால் நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அவருக்கு விளக்கினேன்.

அத்தோடு, மரண தண்டனையை நிறைவேற்றினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்கப்போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.உண்மையில் இதனை நான் அச்சுறுத்தலாகவே கருதுகிறேன். சுயாதீனமான நாட்டுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது முறையான ஒன்றல்ல.

உதவி செய்வதென்றால் எவர் வேண்டுமானாலும் தாராளமாக செய்யலாம். அதைவிடுத்து எமது நாட்டின் சுயாதீனத்தில் எவரும் தலையிட வேண்டாம் என நான் இங்கு கூறிக்கொள்கிறேன்.மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அனைத்துத் தரப்பினரிடமும் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன்.

அதாவது, போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக நீங்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கள் என்ன? எந்த செயற்பாட்டை மேற்கொண்டீர்கள்?இன்று மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான போதைப்பொருட்களை நாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் எவரேனும் ஈடுபட்டாலோ பயன்படுத்தினாலோ, நீதிமன்ற விசாரணைகள் ஏதுமின்றி உடனடியாக சுட்டுக்கொல்லப்படுகிறார்.இதற்காக இராணுவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதியால் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை, இலங்கையில் மேற்கொள்ள முடியுமாக இருந்தால் நான் அதனை செய்யக்கூட பின்வாங்கப்போவதில்லை.இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டால் மட்டுமே போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக அழிக்க முடியும்.என்னைப் பொறுத்தவரை ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல்களின் பின்னணியில்கூட போதைப்பொருள் வர்த்தகர்கள் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *