Search
Thursday 2 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ?

மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ?

யதீந்திரா
தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால் மகிந்த தரப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. கிடைக்கும் தகவல்களின்படி அது இலகுவான ஒன்றல்ல ஆனால் மகிந்த தரப்பு தனது முழு ஆற்றலையும் வளங்களையும் பயன்படுத்தி, தங்களின் வெற்றியை எந்தளவிற்கு பெருப்பிக்க முடியுமோ அந்தளவிற்கு பெருப்பிக்கவே முயற்சிக்கும். பொதுவாக ஒன்றின் பலம் என்பது பிறிதொன்றின் பலவீனத்தில்தான் தங்கியிருக்கின்றது. அரசியலில் ஒவ்வொரு விடயத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். மகிந்தவின் வெற்றி பிரமாண்டமான ஒன்றாக இருக்குமாயின், எதிர்தரப்பு மிகவும் மோசமான வீழ்ச்சியில் இருக்கின்றது என்பதே அதன் அர்த்தம். இன்றைய நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சியானது, வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு பலவீனமடைந்திருக்கின்றது. பிரதான எதிர்க் கட்சியான, ஜக்கிய தேசியக் கட்சி முதல் முதலாக பெருமளவில் இரண்டாக உடைந்திருக்கின்றது. அரசியலில் நரி என்று வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் நரித்தனம் அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கின்றது. சஜித் பிரேமதாசவை தனிமைப்படுத்தி, தனது தலைமைத்துவத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் ரணிலால் வெற்றிபெற முடியவில்லை. சஜித் ஜணாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே அவர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரங்கட்டக் கூடிய ஒருவராக வந்துவிட்டார். அந்த வகையில் ரணில் அரசியலில் சூழ்ச்சித்திறன் மிக்கவர் என்னும் கதையும் ஒரு பலவீனமான கதையாகிவிட்டது.

ரணில் தரப்பு – சஜித் தரப்பு என்னும் இரண்டு அணி தேர்தலில் போட்டியிடுவது என்னும் நிலைமை உறுதியாகிவிட்ட நிலையில், மகிந்த தரப்பின் வெற்றியும் இலகுவாகிவிட்டது. மேலும் இது மகிந்த சகோதரர்களின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆசைக்கும் உத்வேகமளிப்பதாகவும் இருக்கின்றது. இலங்கையின் அரசியல் நிலைமையை பார்த்தால் இந்தியாவின் அரசியல் சூழலுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை அவதானிக்கலாம். இந்தியாவில் மோடி தலைமையிலான பி.ஜே.பி பெரும் பலம் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதனை அவர்கள் ஒரு மோடி அலையின் ஊடாக சாத்தியப்படுத்தியிருந்தனர். அண்மையில் ஒரு இந்திய ஆங்கில பத்திரிகையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். பி.ஜே.பிக்கு வாக்களிக்க விரும்பாத பலர் மோடிக்கு வாக்களித்தனர். மோடி அலைதான் பி.ஜே.பியின் பலம். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரது நடவடிக்கைகள், அவரது தனிப்பட்ட வாழ்வு, அவரது அரசியல் வாழ்வில் எந்தவொரு குடும்பத் தலையீடும் இல்லாமை என பல சாதகமான விடயங்கள், மோடி அலையில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. ஆனால் இவை எல்லாம்தான் அவரது வெற்றிக்கும் – அவர் மூலமாக பி.ஜே.பியின் வெற்றிக்கும் காரணம் என்று கூறப்பட்டாலும் கூட, உண்மையான காரணம் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மிகவும் பலவீனமாக இருக்கின்றது. அதன் தலைவராக முன்னிறுத்தப்பட்டவர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். அதுவும் ஒரு நடிகையிடம் தோற்றுப் போனார். இவ்வாறான பின்புலத்தில்தான் பி.ஜே.பி பெரும் பலத்துடன் காட்சியளிக்கின்றது. ஜனநாயக அரசியலில் எங்கெல்லாம் எதிர்க்கட்சி பலவீனமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் ஒரு பலமான ஆளும் கட்சி தெரியும். உண்மையில் ஜனநாயக அரசியலில் பலம் என்பது ஒரு வெறும் காட்சியே தவிர அது வேறு ஒன்றுமல்ல. இன்று வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் சூழலை எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பலமான ஒன்றாக தெரிகின்றது. கூட்டமைப்புக்கு பலமான ஒரு எதிர்த்தரப்பு இல்லாமைதான் கூட்டமைப்பின் பலத்தின் பின்னாலுள்ள ஒரேயொரு காரணம்.

தேசியளவில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஜக்கிய தேசியக் கட்சியின் உடைவு, மகிந்த தரப்பை பெரும் பலமுள்ள தரப்பாக மாறுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றது. இதனை மகிந்த தரப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை என்பது எட்டிப் பறித்துவிடக் கூடிய ஒன்றாகவும் மாறலாம். இதன் ஒரு அங்கமாகவே கோட்;டபாய ராஜபக்ச பல்வேறு வழிகளிலும் ஒரு கவர்ச்சிமிக்க ஜனாதிபதியாக தன்னை முன்னிறுத்தி வருகின்றார். உண்மையில் இது மோடியின் அணுகுமுறைகளுக்கு மிகவும் நெருக்கமானது. அதாவது, கட்சியில் நம்பிக்கை இல்லாதவர்களை, தனிநபர்களின் ஊடாக கவர்வதன் மூலம் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் ஒரு தேர்தல் உபாயமாகும். வெற்றி தேவையென்றால் பல உபாயங்களை கைக்கொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்பதே இன்றைய உலக நிலைமை. அதில் இனவாதமும் ஒன்றாக இருக்கின்றது. அதாவது எதை எந்த மக்கள் மீது விதைத்தால் அது வாக்குகளாக மாறும் என்பதை துல்லியமாக கணக்குப் போட்டு, வாக்குகளை பெறும் ஒரு முறைமையே இது. இந்த நிலைமை இலங்கையில் – இந்தியாவில் மட்டுமல்ல – அமெரிக்காவிலும் இதுதான் நிலைமை. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கின்ற டொனால் றம், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது எவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்பது பலருக்கும் நினைவிருக்கலாம். அவர் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பேசினார் – அயல் நாடான மெக்சிக்கோவிற்கு எதிராக பேசினார்- பெண் உரிமைவாதிகள் தொடர்பில் கடுமையாக பேசினார்.

sri-lanka-parliament-budget-860-720x480-720x480

இது தேர்தல் வெற்றியை பெறுவதற்கான ஒரு பிரச்சார உக்தியாகவே இருந்தது. அது அவருக்கு கணிசமான வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. இன்றைய சூழலில் ஒரு கட்சி உள்ளக அரசியலில், வெற்றிபெறுவதற்கு என்ன வகையான விடயங்களை பேசுகின்றது என்பது உலகளவில் ஒரு பிரச்சினையில்லை. அது ஒரு உள்ளக அரசியல் பிரச்சினை. இந்தியாவில் பி.ஜே.பி கடுமையான இந்துத்துவா கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றது. அது இஸ்லாமிய வெறுப்பை முதன்மைப்படுத்துகின்றது. ஆனால் இது உலகத்திற்கு ஒரு பிரச்சினையில்லை. எனவே இலங்கையின் தேர்தல்களில் தமிழ் வெறுப்பை, முஸ்லிம் வெறுப்பை, அமெரிக்க எதிர்ப்பை – இந்திய எதிர்ப்பை எதை வேண்டுமானாலும் வெற்றிக்காக பயன்படுத்தக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இந்த விடயங்களை மகிந்தவின் சகோதரர்கள் பேசப் போவதில்லை. சர்வதேச உறவுகளை கையாள வேண்டிய முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் அரசியல் வாதிகள் பேசப் போவதில்லை. இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதற்கு என்றே தெற்கில் ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்கள் இனவாதத்திற்கு நேந்து விடப்பட்டவர்கள் போன்றவர்கள். விமல்வீரவன்ச – உதயகம்பன்பில போன்றவர்களே இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுப்பர். மக்கள் மத்தியில் விரோத சிந்தனைகளை விதைப்பதன் மூலம் அவர்களை தங்களின் செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டுவர முயற்சிப்பர். இவ்வாறான பல விடயங்களை ஒருங்கிணைத்து மூன்றில் இரண்டுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடும்.

ஆனாலும் தேர்தல் நிலைமைகளை ஆராய்வோர் மூன்றில் இரண்டு கடினம் என்கின்றனர். மகிந்த தரப்பின் உள்ளக மட்டத்தில் கூட 120 ஆசனங்களை பெறுவது தொடர்பிலும் சந்தேகங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதாவது, ஜனாதிபதி தேர்தலில் பெற்ற மொத்த வாக்குகளில் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பிலிருந்தே அவ்வாறான முடிவுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனாலும் ஜக்கிய தேசியக் கட்சில் ஏற்பட்டிருக்கும் பிளவும், கடுமையான உள் மோதல்களும் மகிந்தவிற்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே வேளை பிளவுற்றிருக்கும் இரண்டு தரப்புக்களும் முக்கியமாக சஜித் பிரேமதாச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவையும் மகிந்தவின் மூன்றில் இரண்டை முன்வைத்தே தங்களின் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கப் போகின்றர். அதாவது, கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் பொதுஜன பெரமுன, மூன்றில் இரண்டை எடுக்குமானால் அதன் பின்னர் சிறபாண்மைகள் நிம்மதியாக இருக்க முடியாது. அது சிறுபாண்மைகளின் இருக்கின்ற உரிமைகளையும் இல்லாமல் ஆக்கிவிடும் என்னும் பிரச்சாரத்தையே பிரதானமாக முன்னெடுப்பர். கூட்டமைப்பை பொறுத்தவரையில் இவ்வாறானதொரு வியூகத்தை ஏற்கனவே அவர்கள் வகுத்துவிட்டனர். சுமந்திரன் அவ்வாறான பிரச்சாரத்தை எப்போதோ ஆரம்பித்தும்விட்டார். இந்தப் பிரச்சாரங்களினால் மக்கள் கவரப்பட்டால் அது ஏனைய தமிழ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவையும் கொடுக்கலாம். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை விவகாரம்தான் தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் ஒரே நேரத்தில் ஒலிக்கப் போகிறது. மகிந்த தரப்பை பொறுத்தவரையில் மூன்றில் இரண்டை கோருவதற்கு எதிர்த்தரப்பின் பலவீனங்களை பிரச்சாரப்படுத்துவர். ஒப்பீட்டிப்படையில் அவர்களுக்கு அது சாதகமாகவும் இருக்கின்றது. அதே வேளை தென்னிலங்கையின் எதிரணியினர், மூன்றில் இரண்டுக்கு அனுமதித்தால், நாடு ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும – சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் சென்றுவிடும் என்றவாறாக பிரச்சாரங்களை முன்னெடுப்பர். எதிரணியினர் மிகவும் பலவீனமாக இருக்கின்ற நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை என்பது சிக்கலான ஒன்றுதான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *