தலைப்பு செய்திகள்

மகிந்த ராஜபக்‌ஷவை நாம் ஆதரிப்பதாக பரப்பப்படும் செய்தி தவறானது: கஜேந்திரகுமார்

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திட்டவட்டமாக மறுத்திருக்கின்றது. இந்தத் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாடு திட்டவட்டமானது எனவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“இணையத்தளமொன்றில் எமது கட்சி ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட போகின்றது என்றும் அதற்காக இராஜபக்சவிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றிருப்பதாகவும் அவதூறான செய்தி ஒன்றினை திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றது.

இச்செய்தியினை எமது கட்சி வன்மையாக மறுப்பதுடன் இது போன்ற மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுகின்றமைக்கு நாம் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாம் இத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம்.

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வென்றும் தமிழ் மக்களிற்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள் போர்க் குற்றங்கள் என்பவற்றிற் கெதிராக விசாரணை எதுவும் நடாத்தப் போவதில்லை என்றும் கூறி பௌத்த சிங்களப் பேரினவாதத் தளத்தின் உச்சாணியில் இருந்து இத் தேர்தலை எதிர் கொள்ளும் இரு வேட்பாளர்களையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற எமது உறுதியான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

மகிந்த அரசின் அட்டூழியங்கள் மற்றும் இன அழிப்புச் செயற்பாடுகளுகளிற்கெதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் உறுதியுடன் போராடும் ஒரே அரசியற் கட்சி நாம் மட்டுமே. எமது கட்சி இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைகளிற்கு தாயகத்திலுள்ள மக்கள் சாட்சியங்கள் வழங்குவதற்கு ஊக்குவித்து சாட்சியங்களை நேரடியாக திரட்டி அனுப்பியதுடன் நாம் நேரடிச் சாட்சியங்களையும்; வழங்கியிருந்தோம் என்பது மக்கள் அனைவரும் அறிந்ததே.

எமது இலட்சிய உறுதிமிக்க மக்கள் நலன் சார்ந்த இத்தகைய செயற்பாடுகளை குழப்பும் தீய நோக்கம் கொண்ட  ஊடகமே இத்தகைய பொய்யான செய்திகளை பரப்பிவருகின்றது. இந்த இணையத்தளம் கடந்த காலங்களிலும் எமக்கெதிரான அவதூறுகளைப் பரப்பியிருந்தது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எமது நியாயமான கருத்துக்களை கருத்துக்ளால் வெல்ல முடியாதவர்களால் இத்தகைய மக்களைக் குழப்பிவிடும் பொய்யான பரப்புரைகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் என்பதால் இத்தகைய போலிச் செயதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என நாம் தாழ்மையாகத் கோருகின்றோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *