Search
Wednesday 18 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் மண் மாபியாக்களின் செயற்பாடுகள் -பாராமுகமாக அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினரும்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் மண் மாபியாக்களின் செயற்பாடுகள் -பாராமுகமாக அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினரும்

(உதயஜீவிதா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மண் வளம் சுரண்டப்படுவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் போராட்;டங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளபோதிலும் அவற்றிற்கான தீர்வு இதுவரையில் எட்டாக்கனியாகவே இருந்துவருகின்றது.

கடந்த காலத்தில் இருந்து ஆட்சியாளர்களின் கைக்குழந்தைகள் சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் வளத்தினைக்கொண்டு தமது பொக்கட்டுகளை நிரப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையில் இன்று அது மிகப்பெரும் மண்கடத்தில் தொழிலாக மாபியாவாக உருவெடுத்துவருகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தமது செல்வாக்கினைக்கொண்டு இவ்வாறான மாபியாக்களாக செயற்பட்டுவந்தவர்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தமது ஆதரவு தளத்தினை மாற்றிக்கொண்டு இந்த மண் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி,கிரான் பிரதெச செயலாளர் பகுதிகளில் இவ்வாறான மண் கடத்தில் மாபியாக்கல் இயங்கிவருவது தொடர்பில் ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோதும் அதற்கு எதிராக எந்;த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது அதற்கு பின்புலமாக இருக்கும் பின்னணிகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் வளத்தினை மட்டக்களப்பு மக்கள் பயன்படுத்த பெருமளவான பணத்தினை செலவுசெய்யவேண்டிய நிலையில் அந்த வளங்கள் வெளியிடங்களுக்கு கடத்தப்படுவது தொடர்பில் பொதுமக்கள் தமது கவலையினை அபிவிருத்தி கூட்டங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகுந்தன்குமாரவெளி, பாலாமடு, புத்தம்புரி, சின்னப்பொத்தானை மற்றும் கித்துள் போன்ற ஆற்றுப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்படுவதாகவும் இவ்வாறாக தமது வளம் சுரண்டப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தக்கோரி அண்மைக்காலங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை அப்பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களும் , கிராமிய சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை முன்னேடித்திருந்தும் எதுவித நன்மையையும் கிட்டவில்லை என்பதுடன் அதன் பின்னரான காலப்பகுதிகளில் மணலகழ்வு அதிகரித்தே காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் அளவுக்கு அதிகமாக இரவு , பகலாக மணல் அகழப்படுவதால், ஆற்றின் ஆழம் அதிகரித்து கொண்டு போவதாகவும் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் நிலம் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிகின்றனர்.

இவ்வாறாக சட்ட்டவிரோதமாக அகழப்படும் மண்ணை, கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்வதால் வீதிகளும் சேதமடைவதுடன், வீதிகளால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பிரயாணத்தினை மேற்கொள்ள முடியாவண்ணம் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படும் நிலையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிகின்றனர்.

நாங்கள் வறுமையில் வாடும் போது, வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள், எங்களது வளத்தை வைத்துக் கோடிஷ்வரர்களாக வாழ்கின்றனர். எமது பகுதியில் நாம் தொழில் இன்றி வறுமையால் வாழும்போது எமது பகுதி மக்களுக்கு அல்லது எமது பகுதி கிராமிய சங்கங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி பத்திரங்களை வழங்காமல் வெளி ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் வெளி மாவட்டங்களைச் செர்ந்தவர்களுக்குமே மணல் அகழ்வதற்காக அதிகளவிலான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை ‘’பணம் படைத்தவனை மேலும் மேலும் பணம் படைத்தவர்களாக மாற்றுவதற்கான’’ வழி வகையினையே ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

எமது மாவட்டம் வறுமையில் மிகவும் உச்ச நிலையில் இருக்கும் போது இவ்வாறான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவது சரிதானா என வினாவெழுப்பும் இப்பகுதி மக்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் அதிகமாக வளங்கப்பட்டுள்ளமையினால் ஏற்றப்படும் மணலின் விலைகளை வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே தீர்மானிப்பதால் இப் பகுதி வாழ் மக்கள் தமது மலசல கூடம் கட்டுவதற்கு கூட அதிக விலையினை கொடுத்தே தாம் மணலை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்படுவதாக கூறுகின்றனர்.

அதே வேளை அண்மைக்காலங்களில் இவ்வாறான மணல் அகழ்வு சம்பவங்களினை தடுக்கும் வகையில் விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இரண்டு கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பை பொருத்தமட்டில் மணல் ஒரு மாபியாவாக மாறி மக்களை பாரிய சிரமத்துக்குள்லாக்கும் ஒரு கருப்பொருளாக மாறிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.vahaneri (1)

இதேபோன்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் பாரிய மண் கொள்ளைகள் இடம்பெற்றுவருவது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறும்போது அது தொடர்பி;ல் தமக்கு தெரியாது என பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரிகளும் தெரிவிப்பதானது வேடிக்கையானதும் அந்த கொள்ளைகளில் அவர்களுக்கான தொடர்பு குறித்தான சந்தேகத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது.

இயற்கை அழகும் வனப்பும்மிக்க வாகனேரிப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வு காரணமாக அப்பகுதியில் வெள்ள காலங்களில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பான தகவல்களை ஆதாரத்துடன் பொலிஸாருக்கு வழங்கியபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கன்டயினர்கள் கொண்டுவந்து மண் ஏற்றப்படுகின்றது.இது மண் ஏற்றுவதற்கான சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடாகும்.இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.அவர்களை அழைத்து வாழைச்சேனை பொலிஸார் சமரசம் செய்துவைத்துள்ளனரே தவிர அங்கு நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனா.44

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத மண் அகழ்வுகள் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் பல்வேறு தடவைகள் அறைகூவல்கள் விடுக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் எந்தவிதமான உறுப்படியான நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல்வேறு தடவைகளில் இந்த சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதிலம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் மண் மாபியாக்களின் செயற்பாட்டிற்கு பின்புறமாக பணம் படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் சில பொலிஸ் அதிகாரிகளும் இருப்பதன் காரணமாகவே இந்த சட்ட விரோத மண் கொள்ளையினை தடுக்கமுடியாமல் இருப்பதற்கான காரணங்களாக நோக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.இவ்வாறான மண் மாபியாக்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படும்போதே இந்த மாவட்டத்தின் வளங்களை இந்த மாவட்டத்தின் மக்கள் குறைவின்றி பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்பதுடன் இந்த மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு இயற்கை அனர்த்தங்களும் தவிர்க்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *