செய்திகள்

மட்டக்களப்பில் கரையொதுங்கியவை பாம்புகள் இல்லையாம்

மட்டக்களப்பு கரையோர பகுதியில் சமீபத்தில் கரையொதுங்கிய மற்றும் பிடிக்கப்பட்டவை ஒருவகை மீன் இனமே. இவை பாம்புகள் அல்ல என்று மட்டகளப்பு அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.சி.எஸ்.மொஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடற்கரையோரபகுதிகளில் கரையொதுங்கிய மற்றும் மீனவர்களால் பிடிக்கப்பட்டவை பாம்புகள் என தெரிவிக்கப்பட்டமை குறித்து இடர்முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கருத்து வெளியிட்டார்.
அத்துடன் இவ்வாறான பாம்புகள் கரையொதுங்குவதினால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் அவர் எமது செய்திப்பிரிவிற்கு விளக்கமளித்தார்.
சுனாமி அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முன்னர் கடலில் உள்ள பெரும்பாலான மீன்கள் கரைக்குவரும். அவ்வாறு வரும் பட்சத்திலேயே சுனாமி அனர்த்தம் குறித்து சிந்திக்க முடியும் .
சமீபத்தில் கரையொதுங்கிய பாம்பு என்று கருத்தப்பட்ட ஒரு வகை மீன் இனம் வெப்பகாலத்தில் சுத்தமான கடல் நீரில் தனது இனம்பெருக்க நடவடிக்கைளை மேற்கொள்ளும் இதனாலேயே இது கரையோர பகுதிகளில் காணப்பட்டன. 2010ஆம் ஆண்டு இந்த மீன் இனம் தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விலேயே இது பாம்பு அல்ல ஒரு வகை மீன் என்று கண்டறிப்பட்டது.
அத்துடன் இந்த மீன் வகையானது இக்காலப்பகுதிகளிலேயே இனம் பெருக்கும் மேற்கொள்ளும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். -(3)