Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மண் பிரச்சினைக்கு அங்கும் தீர்வு இல்லை இங்கும் தீர்வு இல்லை

மண் பிரச்சினைக்கு அங்கும் தீர்வு இல்லை இங்கும் தீர்வு இல்லை
தமிழர்களின் தாயக மண் என்ற பிரச்சினைக்கு இன்னமும் ஆட்சியாளர்கள் தீர்வு காணவில்லை.
அவர்களைப் பொறுத்தவரை இலங்கை மண் சிங்கள பெளத்தத்துக்குரியது. தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதுதான்.
தமிழர் இராச்சியம் இலங்கையில் இருந்தது என்பதை ஏற்பதற்குக் கூட அவர்கள் தயாரில்லை.
இதனால் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணை இழந்து ஏதிலிகளாக அலைகின்றனர்.
பாதுகாப்பு என்ற பெயரில் சொந்த மண் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. என்ன செய்வது!  சொந்த மண்ணை மீட்டெடுக்கும் மண் மீட்புப் போரில் உயிரிழப்புக்கள் மட்டுமே மிச்சம் என்ற  நிலையில், தமிழ் மக்களின் அவலம் நீண்டு செல்கிறது.
இந்நிலையில் இருக்கின்ற நிலத்தில் சிறு வீடு கட்டி ஆறுதலாய் குடியிருக்கலாம் என்றால்  வீடு கட்டுவதற்கு மண் எடுப்பது முடியாத காரியம் என்றாயிற்று.
வீடு கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மண்ணைப் பெறுவதற்கு முடியாத சூழ்நிலையில், மாற்று வழிகளும் இல்லாத கட்டத்தில் சட்டவிரோத மண் என்ற விவகாரம் எழவே செய்கிறது.
சட்டவிரோத மண் என்ற விவகாரத்தால், உயிரிழப்புக்கள், வாகனப் பறிமுதல்கள் என்பன உட்பட மிகப்பெரும் சேதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதுதவிர, ஏழை மக்கள் அதிகூடிய விலை கொடுத்து மண்ணைக் கொள்வனவு செய்ய வேண்டிய பரிதாபத்துக்கு ஆளாகின்றனர்.
எனினும் இது தொடர்பில் எவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் கட்டுமானப் பணிகள் அதீதமாக நடைபெறவே செய்யும். தவிர, வீட்டுத்திட்டங்களும் நகர அபிவிருத்திப் பணிகளும் முழுமூச்சுடன் இடம் பெறும் இந்நிலையில்,
கட்டுமானத்தின் மூலப்பொருளாகிய மண்ணுக்குத் தட்டுப்பாடு நிலவும் போது அதனால் மக்கள் பெரும் நஷ்டங்களை அனுபவிப்பர்.
அத்துடன் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்ற பரிதாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
எனினும் இதுபற்றி யாரும் கதைப்பதாக இல்லை. யாழ்ப்பாண மாவட்ட அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இசையும் அசைவும், பாட்டும் பயனும், கதையும் பாட்டும் என்பதாக நிகழ்ச்சிக்கும்மாளம் அடிக்கின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோத மண் என்ற விவகாரம்; பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; இளைஞன் பலி என்ற ஒரு பரிதாபகரமான சூழ்நிலையைத் தோற்றுவிக்க,
அது வடமராட்சியில் பதற்றம்; விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிப்பு என்பதான நிலைமையை ஏற்படுத்திவிட்டது.
ஆக, கட்டுமானத்துக்குத் தேவையான மண்ணைப் பெறும் வழிமுறையை இனங்கண்டு அதனை நடைமுறைப்படுத்தாததால் ஏற்பட்ட இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை.
இதுபோன்ற உயிரிழப்புக்கள் இனிமேலும் ஏற்படாதவாறு தவிர்க்க உரியவர்கள் உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.
வலம்புரி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *