Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னிப்பு கோருமாறு கேட்ட டெனிஸ்வரன் தரப்பு; மறுத்தார் விக்னேஸ்வரன் – சிறை செல்லும் ஆபத்து

மன்னிப்பு கோருமாறு கேட்ட டெனிஸ்வரன் தரப்பு; மறுத்தார் விக்னேஸ்வரன் – சிறை செல்லும் ஆபத்து

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னிடம் மன்னிப்பு கோருமாறும் வழக்குக்காக செலவுசெய்த பணத்தொகையை செலுத்துமாறும் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் தரப்பு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்பு மறுத்ததால் இன்று செய்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் முடிவு விக்னேஸ்வரனுக்கு சாதகமாக அமையாது என்று கருதப்படும் நிலையில் வழக்கின் விசாரணைகள் நாளை மறுதினம் நிறைவடையும். தீர்ப்பில்  விக்னேஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அதன்காரணமாக அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகும் என்றும் எதிர்பார்க்கப்டுவதால் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் புலமையாளர்கள் இந்த வழக்கை டெனிஸ்வரன் வாபஸ் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த நிலையில், விக்னேஸ்வரன் தமிழ் அரசியலுக்கு அவசியமானவர் என்றும் அவரை சிறையில் அடைக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்திருந்த டெனீஸ்வரன் வழக்கை தான் வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக அர்த்தப்படுத்தி முக நூல் பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் இட்டிருந்தார். இதனால் டெனிஸ்வரன் இந்த வழக்கை இன்று வாபஸ் பெறுவார் என்றும் இதனால் விக்னேஸ்வரன் சிறை செல்வது தடுக்கப்படும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால், எல்லா எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கும் வகையில் வழக்கை வாபஸ்பெறுவதற்கு 3 நிபந்தனைகளை டெனீஸ்வரனின் வழக்கறிகர் சுரேன் பெர்னாண்டோ முன்வைத்தார்:

1. அமைச்சரவையை பதவிநீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, விக்னேஸ்வரன் தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது.

2. டெனிஸ்வரனை பதவி நீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை விக்னேஸ்வரன் அமுல்ப்படுத்தவில்லை. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவை அமுல்ப்படுத்தாமைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவது.

3. இதுவரை பா.டெனிஸ்வரனிற்கு ஆன வழக்கு செலவை (சுமார் 40 இலட்சத்திற்கும் அதிகம்) செலுத்துதல்.

ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள விக்னேஸ்வரன் தரப்பு மறுத்தது.  இதனால், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது வட மாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளர் சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாளையும் நாளை மறுநாளும் தொடர்ந்து நடைபெறும்.

இந்த வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்வதற்கு விரும்புவதாக டெனிஸ்வரன் முகநூல் மற்றும் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் டெனீஸ்வரனுடன் கதைப்பதற்கு விக்னேஸ்வரனின் வழக்கறிஞர் கனக ஈஸ்வரன் டெனீஸ்வரனின் வழக்கறிஞர் சுரேன் பெர்னாண்டோவிடம் கேட்டபோதும் அதற்கு அவர் இணங்கவில்லை என்று அறியமுடிகின்றது.

இந்த வழக்கில் மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அது கொள்கை சார்ந்த விடயம் என்றும் அதனால் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருப்பதாக அறிய முடிகிறது.

சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்கினேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதியரசர் விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர்.

இவ்வழக்கில் நீதியரசர் விக்கினேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், “கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக கைவாங்க வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும்” எனவும் தமிழ் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் பலரும் டெனீஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதற்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்த டெனீஸ்வரன், “கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்த வழக்கை தான் வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த விக்னேஸ்வரன் பின்வருமாறு கூறியிருந்தார்:

“மேல் நீதி மன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு தவறு. அதில் ஒரு விடயத்தை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் எடுக்காது விட்டு விட்டனர். நான் அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் போது அவருக்கு ஒரு விடயத்தை கடிதத்தில் எழுதியிருந்தேன். உங்களுக்கான உத்தியோகபூர்வமான கடிதம் வெகு விரைவில் கிடைக்கும் என தெரிவித்திருந்தேன். ஆளுனருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆளுனர் அதனை அனுப்புவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுனர் அதனை அனுப்பவில்லை. ஆகவே இதில் பிழை ஆளுனருடையது.

நாங்கள் எழுதிய அந்தக் கடிதத்தை வைத்து அவர்களை அழைத்து அவர்களிடம் சத்தியபிரமாணம் செய்ய வைத்து அவர்களுக்கான அமைச்சுக்களை வழங்குகின்றார். அதன்போது நாங்கள் கோரியதைத் தான் அவர் செய்கின்றார். அது தான் சட்டம். அதுபோல் நான் நீக்குவதாக கூறியவருக்கும் வர்த்தகமானி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவே அமைச்சு பதிவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்த பின்னரே மற்றவருக்கு சத்தியபிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் டெனீஸ்வரன் அவர்களை நீக்காது அவருக்கு பதிலாக நியமித்தவர்களுக்கு ஆளுனர் சத்தியபிரமாணம் செய்ய வைத்து அவர்களை அமைச்சர்களாக அறிவித்துள்ளார்.

இது தான் பிழை. இந்த விடயத்தை நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இதனையே பிழை என்கின்றேன். எனவே இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளேன். எனவே அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *