Search
Friday 24 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மலையக ஆசிரியர் உதவியாளர்களினால் ஜனாதிபதி , பிரதமர் கல்வி அமைச்சருக்கு 3000 கடிதங்கள் அனுப்பி வைப்பு

மலையக ஆசிரியர் உதவியாளர்களினால் ஜனாதிபதி , பிரதமர் கல்வி அமைச்சருக்கு 3000 கடிதங்கள் அனுப்பி வைப்பு

மலையகத்தில் தோட்டப்புற பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர் உதவியாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி , பிரதமர் , கல்வி அமைச்சர் மற்றும் இராஜங்க கல்வி அமைச்சர் ஆகியோருக்கு 3000 கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்ற அனைவரும் இந்த கடிதத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.
அந்த கடிதம் வருமாறு.
பெருந்தோட்டங்களை அன்மித்த பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர் உதவியாளர்களின் மனக்குமுறலும் அவலநிலையும்.
மதிப்புக்குரிய ஐயா!
எமக்கு 08.08.2014 ஆம் திகதி 13/1638/530/059 இலக்கமிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 19.05.2015 ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. இந்நியமனமானது பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக முன்னால் அதிமேதகு ஜனாதிபதி கௌரவ திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்ட்டது. இந்நியமனத்தில் 6000/= ரூபா கொடுப்பனவுடன் 10 வருடங்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுதல், ஐந்து வருடங்களுக்கிடையில் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் ஒன்றினை பெறுதல் அல்லது அரசினர் ஆசிரிய கலாசாலைகளில் பயிற்சினை நிறைவு செய்தல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது. எனவே இந்நியமனத்திற்கேற்ப பல்வேறு இடங்களில் (ஸ்தாபனங்களில்) பல்வேறு பதவிகளில் சிறப்பான ஊதியத்துடன் பல்வேறு சலுகைகளையும் அனுபவித்து வந்த பெருந்தோட்ட இளைஞர் யுவதிகள் வெறும் 6000/= கொடுப்பனவிற்கு மலையக பெருந்தோட்ட பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அரசியல் தலைவர்களையும், கல்வி அமைச்சின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியஸ்தர்களையும் நம்பி இந்நியமனத்தை பொறுப்பேற்று குறித்த பாடசாலையில் 19-05-2015 அன்று பாடசாலைக்குள் உள்வாங்கப்பட்டோம்.

சில பாடசாலைகளின் சிரேஷ்ட ஆசிரியர்களின் கீழான நடத்தையை சந்திக்க வேண்டிய நிலையில் ஆசிரிய உதவியாளர்கள் காணப்பட்டனர். மேலும் மிகக்குறைவான 21 நாட்கள் விடுமுறையில் விலங்குகளைப் போல் சுதந்திரமற்று கடின மனவுளைச்சலுடனும் எங்களது சேவைகளை மேற்கொணடு வருகின்றோம். பாடசாலையிலும், சமூகத்திலும் 6000 என்ற நாமத்துடன் ஆசிரியர் என்ற பொய் வேசத்துடன் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

இக்காலப் பகுதியில் வெறும் 6000/= கொடுப்பனவை பெற்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தவாறு தமது கடமைகளை மேற்கொண்டோம். தமது சுயதேவைகளை மட்டுமே திருப்திகரமாக செய்யமுடியாத கொடுப்பனவில் எங்கள் குடும்பத்தையும் கவனிப்பது என்பது எந்தவொரு மனிதனுக்கும் ஏற்படக்கூடாதவொரு கஷ்டமாகும். மேலும் இந்நியமனத்தின் பிரகாரம் 18 – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் உள்வாங்கபட்டனர். எங்களில் திருமணமாகாத, திருமணமான, மற்றும் பிள்ளைகளுள்ளோர் என பலதரப்பட்டோரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றோம். ஆகவே திருமணமாகி பிள்ளைகளுள்ள ஆசிரிய உதவியாளர்களின் நிலையானது மிகமிக மோசமானதாக காணப்படுகின்றது.

தொடர்ந்து சில அரசியல் தலைவர்கள் இக்காலப்பகுதியில் சில விடயங்களை ஊடகங்கள் மூலமாக வெளியிட்டனர். பலர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவற்றுள் மிக முக்கியமாக நியமனம் வழங்கியபோது ஒரு சேலையின் விலை 5000/= என கூறிய கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திரு .இராதாகிருஸ்ணன் மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ திரு. அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் ஏனைய கல்வி அமைச்சின் முக்கியஸ்தர்கள் எவரும் இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லையென்பது வேதனைக்குரிய உண்மையாகும்.

இத்தருணத்தில் ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ திரு. வடிவேல் சுரேஸ அவர்கள் நாங்கள் எதிர்நோக்கிய இன்னல்களையும், எங்களது குடும்பம், எதிர்காலம் என்பவற்றை கருத்தில்கொண்டு தனது மாகாணசபையின் கீழ் மேலதிகமாக 10000/= சேர்த்து 16000/= ரூபாவாக வழங்க தீர்மானித்து தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கு 16000/= வழங்கப்பட்டது. எனினும் மத்திய, தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஊவா மாகாணத்திற்கு அதிகமான அழுத்தத்தை கொடுத்து 5 மாதகாலம் வழங்கிய 16000/= ரூபா கொடுப்பனவை நிறுத்தி வழங்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் 6000/= ரூபா கொடுப்பனவிலிருந்து கழிக்குமாறு பணித்தனர். இம்மாகாண தலைவர்கள் நினைத்திருந்தால் அதே 16000/= ரூபாவை வழங்கியிருக்கலாம். ஆனாலும் வழங்கப்படவில்லை. இவ்வாறானதொரு நிகழ்வு பெரும்பான்மை இனத்தில் நடந்திருக்குமா? என்பதை தங்கள் கவனகணிப்பிற்கு விடுக்கின்றோம்.

அடுத்தகட்டமாக எங்கோ ஓர் விடிவெள்ளியாக அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது. இதற்கமைய கலாசாலைகளுக்கு கிராம சேவகர் பிரிவு, வலய கல்வி பணிமனை, பிரதேச சபை, மாகாண சபை என அழைக்கழிக்கப்பட்டு குறித்த ஒரு தொகுதியினர் கலாசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளோம் என அறிவிக்கப்பட்டது. இதில் சில பாடசாலை அதிபர்களின் தான்தோன்றித்தனமான செயல்கள் காரணமாக குறித்த ஒரு தொகுதி ஆசிரிய உதவியாளர்கள் பாடசாலையிலேயே சேவையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனையோரின் எகத்தாளமான பேச்சுக்கள் பாடசாலையின் தாழ்வான நடத்தைகள், மிகக் குறைந்த கொடுப்பனவுடன் எங்களின் சேவைக்காலம் நகர்ந்தது. அத்தோடு கலாசாலைக்கு உள்வாங்கப்பட்டோரது நிலை சொல்ல முடியாத வகையில் மிகமிக மோசமானதாகக் காணப்பட்டது. புதிய சூழல், தங்குமிட வசதியின்மை, கலாசாலையின் பயிற்சிக்காக மேலதிக பணசெலவு என பல்வேறு தேவைகள் எதிரே இருக்க எங்களின் கைகளில் கொடுக்கப்பட்டது வெறும் 6000.00ரூபா மட்டுமே. சொந்த பிரதேசங்களில் இருந்து மிக கூடிய தூரத்தில் அமைந்துள்ள கலாசாலை போக்குவரத்து செலவு மட்டும் 3000.00 ரூபா. அத்தோடு தங்குமிட வசதியை கலாசாலையில் எவ்வித மனித ஆரோக்கியத்துக்கும் ஒவ்வாத வகையில் தங்குமிட விடுதி காணப்படுகிறது. ஒரு சில கலாசாலைக்கு தங்குமிட வசதியே கிடையாது. அனைத்து பயிலுனர்களும் வெளியிடங்களில் தங்கி தமது பயிற்சினை மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக 8000/=ரூபா வாடகையாக அறவிடப்படுகிறது. மேலதிகமாக உணவு, உடை, கலாசாலை பயிற்சிக்கான செலவுகளென 15000/=- ரூபாவிற்கு மேற்பட்ட தொகை செலவாகிறது.

இந்நிலையில் எந்த அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கத்தினரும் எங்களை பற்றி உண்மையான அக்கறையுடன் கவனம் செலுத்தவில்லை. பல கஸ்டங்களுக்கு மத்தியில் நாங்கள் பயிற்சினை தொடரவேண்டியுள்ளது. பெண் பயிலுனர் உட்பட சிலர் தங்குமிட வசதியின்றி ஆரம்பகாலங்களில் பாதையில் நின்றிருந்த நிலையும் கவனத்தில் கொள்ளவேண்டியதே.

மேலும் 05-10-2016 அன்று இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொது செயலாளர் திரு.ஜோசப் ஸ்டாலின் அவர்களால் தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரிய சேவையின் உள்ளீர்ப்பு போராட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரின் சார்பில் பிரிவெனா ஆசிரிய உதவியாளர்களும் மலையக பெருந்தோட்ட புறத்தை சேர்ந்த ஆசிரிய உதவியாளர்களான நாமும் கலந்துகொண்டோம். அப்போராட்டத்தின் பின்னர் பிரிவெனாவை சேர்ந்தோர் மாத்திரம் ஆசிரிய சேவையின் 3(2) க்கு உள்வாங்கப்பட்டனர். மலையக ஆசிரிய உதவியாளர்களாகிய எங்களுக்கு மேலதிகமாக 4000/= ரூபாவை சேர்த்து 10000/= ரூபா மாத்திரம் வழங்கப்பட்டது. இது பற்றி பரவலாக பேசியும் நமக்கான தீர்வு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 2017 பெப்ரவரி மாதத்திலிருந்து 10000/= ரூபா வழங்கப்பட்டது. ஆன போதிலும் இன்றுவரை தெனியாய, அக்குரஸ்ஸ ஆகிய கல்வி வலயங்களில் வெறும் 6000/= கொடுப்பனவே வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கல்வி அமைச்சிக்கு அறிவித்தபோதும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இத்துடன் சில வலயங்களுக்கு அம்மாதத்திற்கான சம்பளத்தினை அடுத்த மாத இடையிலேயே பெற்றுக்கொள்ளவேண்டிய துர்பாக்கிய நிலையே காணப்படுகிறது. மேலும் தற்போது அவ் இடர்பாடு மென் மேலும் அதிகரித்து காணப்படுகின்றது. எங்களில் அனேகமானவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகவே உள்ளோம் , நாங்கள் அனைவரும் தற்போது வரையும் அவர்களிலேயே தங்கியுள்ளோம். கடந்த தீபாவளிக்கு கூட வீடு செல்ல முடியாமலும் ஒரு புதிய ஆடையை கூட வாங்க முடியாத நிலையிலும் பல ஆசிரிய உதவியாளர்கள் பாரிய கஷ்டத்துக்கு முகங்கொடுத்திருந்தனர். இருப்பினும் எமக்கு இச் சிறப்பான கலாசாலைகளில் பயிற்சி பெற கிடைத்தமையை எண்ணி சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவிக்கின்றோம். எனவே 2017

வரவு – செலவு அறிக்கையில் எமது (அதாவது கல்வி தொடர்பான அறிக்கை சமர்பிக்க முன்னர்) வாழ்க்கை செலவு அதிகரித்து வழங்கப்படும் என்ற நம்பிக்கையிலும் நாங்கள் அனைவரும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவோம் என்ற நம்பிக்கையிலும் காத்திருக்கின்றோம்.

இத்தனை நாட்கள் கடந்தும் பாரிய அழுத்தத்தையும் இப்பகுதி அரசியல் தலைவர்கள் மீதான அவநம்பிக்கையையும் மேலிட்டுள்ளமை மட்டுமின்றி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக பேசும் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றில் இணைந்து பல்வேறு செயற்பாட்டில் ஈடுபட்டு கல்வி அமைச்சுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

மேலும் கடந்த 2007ம் ஆண்டு இவ்வாறான ஓர் நியமனம் க.பொ.த. உயர்தரத்தை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டது. இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் ஒரே தடவையில் ஆசிரிய சேவை தரம் 3(2) க்கு உள்வாங்கப்பட்டு இந் நியமனம் வழங்கப்பட்டது. அவ்வாறாயின் இவ்வரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட எமது நிலை இரண்டு வருடம் கழிந்தும் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எமது அதே நியமனத்தின் கீழ் நியமனம் பெற்ற அதே 6000/= சம்பளத்தை பெற்ற பிரிவெனா ஆசிரிய உதவியாளர்கள் மட்டும் எவ்வாறு ஆசிரியர் சேவையின் தரம் 3(2) உள்வாங்கப்பட்டார்கள். இது எவ்வாறு நடந்தது. சிறுபான்மை இனத்தவராகிய தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடிவு காலம்தான் எப்போது. நான்கு ஆசிரிய கலாசாலையிலும் சுமார் 2000க்கு மேற்பட்டோர் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகவும், கேள்விக்குறியாகவும் காணப்படுகின்றது. நாம் இப்போது இவர்களை ஒன்றிணைத்து ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளோம். இச்சங்கத்தின் முயற்சியே இது. 2000 ஆசிரிய உதவியாளரும் 2000 குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்பப்பின்னணி எவ்வாறானது என்பதை குறிப்பிடத் தேவையில்லை. அது தாங்கள் அறிந்த விடயமே. தற்போதைக்கு செய்வது ஆசிரிய தொழில், அதுவும் கிடைத்து இரண்டே வருடம் தான் ஆனால் கடன்காரர்களாக பாரிய பள்ளத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எதிர்பார்ப்பது இலங்கை சோசலிச குடியரச நாட்டின் கௌரவ கல்வி இாஜாங்க அமைச்சருக்கு மாத்திரமே எமக்கான இக்கருத்துக்களை பரிசீலனை செய்து பரந்த வானமாக முடிவை தருவார் என்ற பூரண நம்பிக்கையோடு இருக்கிறோம். இவ்வாறான நிலைக்கு மத்தியில் காணப்படும் ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வாக ஆசிரிய சேவைக்குள் இந்த வருட இறுதிக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கான எல்லாவித செயற்பாடுகளையும் கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக கல்வி அமைச்சராகிய கௌரவ திரு.அகிலவிராஜ்காரியவசம் இது தொடர்பாக பகிரங்கமான தகவல் ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக எமக்கு தர வேண்டுமெனவும் ஜனாதிபதி தலையிட்டு இதற்கான நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வினை பெற்றுத்தரும் வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, வருட இறுதிக்குள் எமக்கான தீர்வை மனிதாபிமான முறையில் வழங்க வேண்டும் எனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
உண்மையுள்ள
ஆசிரியர் உதவியாளர்கள்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *