செய்திகள்

மாகாண சபை தேர்தலே முதலில்: மகிந்த அமரவீர

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள தேர்தல் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த அனைவரும் கூறினர்.

சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறினர். ஆனால் யாரும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அந்தவகையில் எமக்கு தெரியும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒருபோதும் இல்லாமல் செய்யமாட்டார்கள்.

மேலும் நான் நினைக்கின்றேன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலே நடத்தப்படும்.

தேர்தல் ஆணையகம் ஜனாதிபதிக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளதென கூறியுள்ளது.

ஆகையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து, ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம்.

இதனால் மிக விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது” என  மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.