Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல்

‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல்
– கலாநிதி ஜெகான் பெரேரா
அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன்.
கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மனிதகுல வரலாற்றில் மிகவும் ஆபத்தான கட்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் ‘ என்று உலகின் மிகவும் புகழ்பெற்ற — செல்வாக்குமிக்க அறிவுஜீவி நோம் சோம்ஸ்கி  அண்மைய நேர்காணலொன்றில் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்னொரு நேர்காணலில் சோம்ஸ்கி அமெரிக்காவில் தற்போது மூண்டிருக்கும் ஆர்ப்பாட்ட அலைகளைப்பற்றி கூறுகையில், ‘ இன்றைய ஆர்ப்பாட்டங்களில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற – முன்னென்றும் இல்லாத வகையிலான அவற்றின் வீச்சும் பரந்தளவில் மக்களின் பங்கேற்பும் ஆதரவுமே கவனத்தை தூண்டும் முதல் அம்சங்களாக இருக்கின்றன.அபிப்பிராய வாக்கெடுப்புகளை நோக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.கறுப்பர்களின் உயிர்கள் முக்கியமானவை (Black Lives Matter)  என்ற இயக்கத்துக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் கிடைத்துவருகின்ற மக்கள் ஆதரவு ‘ எனக்கு ஒரு கனவு இருக்கிறது ‘ ( I have a dream ) என்ற உரையை மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய காலகட்டத்தில் அவருக்கு இருந்த மிகவும் உயர்ந்த செல்வாக்கையும் விட மிகவும் உச்சமானதாக இருக்கிறது ‘ என்று குறிப்பிட்டிருக்கிறார் ( ஜாகோபின் சஞ்சிகை 2020 ஜூன் ).
‘கறுப்பர்களின் உயிர்கள் முக்கியமானவை ‘ என்ற இயக்கமே மையமாக விளங்குகின்ற போதிலும், பலம்பொருந்திய இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்களில் 61 சதவீதமானவர்கள் வெள்ளையினத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஆர்ப்பாட்ட இயக்கத்தின் வரலாற்று வேர்களை விளங்கிக்கொள்ளுமுகமாக பழைய கறுப்பு பந்தர் கட்சியின் (Black Panther Party) தலைவர்களின் வரலாற்றை அமெரிக்க ஊடகங்கள் திரும்பிப்பார்ப்பதில் இப்போது நாட்டம் காட்டுகின்றன. கறுப்பு பந்தர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பில்லி எக்ஸ்.ஜென்னிங்ஸை ‘ கவுன்ரர் பஞ்ச் ‘   (Counterpunch)  சஞ்சிகை அண்மையில் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நேர்காணல் செய்தது.
கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், ‘ கறுப்பு பந்தர் கட்சியில் நான் முதலில்FB_IMG_1557060845276  இணைந்தபோது தலைவர் மாவோ சே துங்கின் மேற்கோள்கள் என்ற நூலை (Quotations from Chairman Mao Tse  -tung) வாசித்தேன். ஒரு சிறு பொறியினால் காட்டுத்தீயை மூளவைக்க முடியும் (A single spark can start a prairie fire)  என்று மாவோ கூறினார். பிளாய்டின் கொலைக்குப் பிறகு அமெரிக்க வீதிகளில் அந்த  பொறியை நாம் காண்கின்றோம் ‘ என்று சொன்னார்.
மாவோ சேதுங் 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் ஒரு மாபெரும் தலைவர் ; நவீன காலத்தின் ஒரு தலைசிறந்த வரலாற்றுப் படைப்பாளி பல தலைமுறைகளின் மீது தத்துவார்த்த – சிந்தனைச்  செல்வாக்கை செலுத்திய மாமனிதர். இன்றும் கூட தலைசிறந்த பிரெஞ்சு தத்துவஞானி அலெய்ன் பாடியோ தன்னை ஒரு மாவோவாதி என்றே கருதுகிறார்.
  1968 ஆர்ப்பாட்டங்களின்போது சேகுவேரா, ஹோசிமின், மாவோ சேதுங் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிச்செல்லப்பட்டதைப் போன்று இன்று அமெரிக்காவிலும் உலகிலும் கிளம்பியிருக்கும் ஆர்ப்பாட்ட அலையில் காணக் கூடியதாக இருக்கவில்லை என்ற போதிலும், அதில் பங்கேற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் கிளர்ச்சி உணர்வில் மாவோவின் சிந்தனையின்  பொருத்தப்பாட்டை  காணக்கூடியதாக இருக்கிறது.ஏனென்றால், ‘ கிளர்ச்சி செய்வது சரியானதே ‘ (It is Right to Rebel) என்பது மாவோவின் சிறந்த  சுலோகங்களில் ஒன்றாகும்.இந்த சுலோகத்தில் மார்க்சியத்தின் சாராம்சம் பொதிந்திருக்கிறது என்று அவர் நம்பினார்.
செங்காவலர் அணிவகுப்பில் மாவோவுக்கு அருகில் சண்
மாவோவை நன்கு தெரிந்த தோழர் சண் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சண் மாவோவை சந்தித்து கலந்துரையாடிய ஒரே இலங்கையர் மாத்திரமல்ல, தெற்காசியாவைச் சேர்ந்த சிலரில் ஒருவருமாவார்.நக்சலைட்டுகள் என்று நன்கு  அறியப்பட்ட இந்தியாவின் மாவோவாத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் — லெனினிஸ்ட் ) யின் தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்தித்ததில்லை.ஆனால், கலாசாரப்புரட்சியின் உச்சக்கட்டத்தின்போது பெய்ஜிங் தியனென்மென் சதுக்கத்தில் 15 இலட்சம் செங்காவலர்களின் அணிவகுப்பை மாவோ பார்வையிட்டபோது அவருக்கு அருகில்  சண் நின்றார். செங்காவலர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கும் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சண்ணின் மாவோவாத கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் கருத்தூன்றிய அக்கறைகொண்ட புரட்சிவாதிகளுக்கான இரு பாதைகளில் ஒன்றாக விளங்கியது. மற்றையது டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவுடன் அடையாளப்படுத்திக்கொண்ட மாஸ்கோ சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ தென்திசைப்போக்கு ‘ அணியாகும். உண்மையில் இவற்றை இரு பாதைகள் என்பதை விடவும் ஒரே பாதையென்று கூறுவதே பொருத்தமாகும். ஏனென்றால், இலங்கையின் மாவோவாதிகளில் பலர்  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தென்னிலங்கையரான எஸ்.ஏ. விக்கிரமசிங்கவின் அணியில் இருந்து வந்தவர்களே.
மார்க்சிய — லெனினிய கற்கைக்கான ‘ பல்கலைக்கழகத்தின்  தாபகராகவும் உபவேந்தராகவும்’ சண்ணை நோக்கலாம். தென்பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன, வடபகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன மானசீகமான செயல் ஈடுபாடுகொண்ட இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியும் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்களே. ஆனால், அவர்கள் அங்கே ஒருபோதும்  நிலைத்திருக்கவில்லை. ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) ஒரு மாவோவாத இயக்கம் அல்ல என்றபோதிலும், அது மாவோவாத இயக்கத்தின் மடியில் இருந்து தோன்றியது என்பதும் அதன் முக்கியமான உறுப்பினர்கள் பெரும்பாலும் முன்னாள் மாவோவாதிகளே என்பதும் இலங்கையின் மாவோவாதத்தின் விளைவளத்திற்கு சான்றாகும்.
IMG_20200704_184019சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாவோவாதிகள் 1964 ஆம் ஆண்டில் பிரிந்துசென்றபோது புதிய இயக்கம் மாஸ்கோ சார்பு கட்சியின் பிரதான தொழிற்சங்கங்களை ( இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் ) அதன் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்லக்கூடியதாக இருந்தது என்பது அதன் தனித்துவத்தை வெளிக்காட்டியது.உலகின் பெரும்பாலான பாகங்களில் அவ்வாறு நடந்தது மிகவும் அரிதேயாகும்.இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்துக்கு  சண்முகதாசனே  தலைமை தாங்கினார்.அகில இலங்கை விவசாயிகள் காங்கிரஸின் முன்னணி உறுப்பினர்களும் சண்முகதாசனுடனேயே கூடச்  சென்றார்கள்.
இலங்கையின் மாவோவாத இயக்கத்தின் தலைவர்  சர்வதேசரீதியில் ஆற்றிய தத்துவார்த்த பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.உலகில் மாஸ்கோ சார்பு  கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் ஆரம்பித்தவர்களில் சண்ணும் ஒருவர்.அவரின் ஆங்கிலப் புலமையும் மார்க்சிஸ்ட் — லெனினிஸ்ட் கோட்பாட்டு அறிவும் மாஸ்கோ சார்பு கட்சிகளுடனான உலகளாவிய விவாதங்களில் அவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நிறைவான ஒரு பிரதிநிதியாக மிளிர வைத்தன.
அந்த காலகட்டத்தின் அரசியல் நூல்களினதும் பிரசுரங்கள் மற்றும் தொகுப்புக்களின் வரலாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்று அறியப்பட்ட மாவோவாதிகள் தங்களது ஆற்றல்களுக்கு அப்பால் — அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் செல்வாக்குமிக்க பங்களிப்பைச் செய்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது. சண் ஆங்கிலத்தில் எழுதியவை உலகம் பூராவும் கம்யூனிஸ்ட் கற்கைகள் மாணவர்களினால் மாவோவாதம் தொடர்பான பிரதான வளமூலமாகவும் ஆதாரமாகவும் கருதப்பட்டன.
இருந்தாலும், இலங்கைக்குள் சண் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இருக்கவில்லை.தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவரான அவர் வயதில் முதிர்ந்தவராகவும் இருந்தார் ; நெடுங்காலமாக முதுகில் ஒரு நோயினாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் ; வாழ்க்கைமுறையும்  மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குரியதாகவே இருந்தது.அதனால் ஒரு மொழியை மாத்திரம் பயன்படுத்துகின்ற சிங்கள சமூகத்தளத்துடன் இயல்பாக ஒன்றிணைய முடியாதவராகவும் தான் போதித்ததை நடைமுறைப்படுத்த முடியாதவராகவும் அவர் இருந்தார்.
ஆனால், சண்ணின் மறைமுக செல்வாக்கு மிகவும் கணிசமானதாக இருந்தது.மாவோவின் படைப்புக்கள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.அவற்றின் தத்துவார்த்த செல்வாக்கு சண்ணின் கட்சி உறுப்பினர்களுக்கு அப்பாலும் விரிவடைந்தது.( உதாரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என்னை விடவும் சிரேஷ்ட மாணவனாக இருந்தபோது தீவிரமான ஒரு மாவோவாதி –அதேவேளை அவரோ என்னை ஸ்ராலினிஸ்ட் என்று அழைக்கிறார் )
ஜே.வி.பி.யும் சண்ணும்
ஜனதா விமுக்தி பெரமுனவை ( ஜே.வி.பி.)தத்துவார்த்த அடிப்படையில் கடுமையாக விமர்சித்த சணணும் கூட  1971 ஏப்ரில் கிளர்ச்சி வெடித்தபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க புரட்சிவாதிகள் எல்லோரையும் ஒரே மாதிரியாகவே நோக்கினார்.சிறையில் இருந்த நாட்களில் சண் அவரது சிறந்த படைப்புக்களை எழுதினார்.விடுதலையான பிறகு அவை நூல்களாக வெளியிடப்பட்டன.
சிறையில் இருந்து அவர் வெளியே வந்தபோது அவரது கட்சி பிளவுண்டது. ஒரு பிரிவினர் சீனாவின் புதிய வெளியுறவுக்கொள்கையை ஆதரித்தனர். அந்த கொள்கையை  இலங்கையிலும் சூடானிலும் சீனா கடைப்பிடித்த அணுகுமுறையின் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.கம்யூனிஸ்டுகளுக்கும்  சோவியத் யூனியனின் செல்வாக்கிற்கு உள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடதுசாரிகளுக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கங்களை சீனா ஆதரித்தது.சீனாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட அந்த வலது நோக்கிய நகர்வு றிச்சர்ட் நிக்சனின் கீழ் இருந்த அமெரிக்காவுடனான பெய்ஜிங்கின் புதிய  நல்லிணக்கப்போக்கின் விளைவானதே.
சீனாவின் போக்கு மாறினாலும் கூட, சண்முகதாசன் முற்றுமுழுதாக கைவிடப்படவில்லை.சீனாவில் டெங் சியாவோபிங்  முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதாக குற்றஞ்சாட்டி அவரை எதிர்த்த சண்முகதாசன் அல்பேனியாவை ஆதரித்தார். பிறகு அல்பேனியாவையும் நிராகரித்த அவர் பெருமளவுக்கு குறுகிப்போய்விட்ட தனது கட்சி புரட்சிகர சர்வதேசிய இயக்கத்துடன் (Revolutionary International Movment – RIM) இணைந்து செயற்பட வழிகாட்டினார். இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், நேபாளத்தின் மாவோயிஸ்டுகள் உட்பட ஆசியாவில் தீவிர மாவோவாத கிளர்ச்சிகளை நடத்திய கட்சிகளை அந்த இயக்கம் இணைத்துச் செயற்பட்டது.
 இந்தியாவின் மாவோவாத இயக்கத்தின் மிகவும் மூத்த தலைவரும் நக்சலைட் இயக்கத்தின் தலைமறைவு அமைப்பான மக்கள் போர்க் குழுவின் (Peoples war Group) பிரதி தலைவருமான கோதண்டராமனை நான் 1983 டிசம்பரில் சந்தித்து பேசிய போது அவர் கூறிய விடயங்களில் இருந்து உபகண்ட மாவோவாத இயக்கத்தின் மீது சண் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவருக்கு இருந்த மதிப்பையும் என்னால் அறியக்கூடியதாக இருந்தது.
1960 களின் பிற்பகுதியில் சண்ணின் மாவோவாத கட்சியின் யாழ்ப்பாணக் கிளை முழுவீச்சாக செயற்பட்டவேளையில் முன்னெடுத்த வெகுஜன வன்முறைப்போராட்டம் இந்தியாவில் பிரதானமாக தமிழ்நாட்டில் சாதி அடக்குமுறைக்கு எதிரான நக்சலைட்டுக்களின் இன்றைய போராட்டங்களுக்கு முன்மாதிரியானவையாக இருந்தன எனலாம்.
 அந்த போராட்டம் பிறகு வளர்ந்து வந்த தமிழ்ப் பிரிவினவாத இயக்கத்தினால் பதிலீடு செய்யப்பட்ட போதிலும் அந்த இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவுகள் மாவோ வாதிகளினால் நடத்தப்பட்ட போராட்டங்களின் செல்வாக்குக்குட்பட்டவைகளாகவும் , அந்த போராட்டங்கள் மீது கனிசமான மதிப்பு கொண்டவையாகவும் இருந்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தாபக தலைவரான கே.பத்மநாபா தனக்கு ஆயுதப்பயிற்சி அளித்த பாலஸ்தீன இடதுசாரி இயக்கமான பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் (பி.எப்.எல்.பி) மாபெரும் தலைவரான டாக்டர். ஜோர்ஜ் ஹபாஷி குன்றி வரும் உடல் நிலை குறித்து சிந்திக்க வில்லை. ஆனால் ‘தோழர் சண் எப்படி இருக்கிறார்?’ என்று அக்கறையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
தேசிய விடுதலை போராட்ட சுலோகத்தை கையில் எடுத்த போதிலும், இலங்கை மாவோ வாத இயக்கத்தின் தாபகத் தந்தை ஒரு தமிழராக இருந்த போதிலும் , குறுகிய காலமே நீடித்த ஒரு சிறிய குழுவான தமிழீழ தேசிய விடுதலை முன்னணியைத் (என்.எல்.எப்.டி) தவிர தமிழீழ ஆயுத போராட்ட இயக்கங்களில் வேறு எதுவும் மாவோவாத்தை பின்பற்றவில்லை. பிறகு அந்த முன்னணியிலிருந்தும் ஒரு பிரிவினர் பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி;(பி.எல்.எப்.டி) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர்.
தமிழ் தீவிரவாதிகளுக்கு ஆலோசனை
1980 களின் நடுப்பகுதியில் சண்முகதாசனினால் எழுதப்பட்ட கட்டுரைகள் ( லங்கா கார்டியனில் பிரசுரிக்கப்பட்டவை) மக்கள் போராட்டத்தின் போது போராளிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு நினைவுப்படுத்தின. தீவிரவாத இளம் போராளிகள் அப்பட்டமான பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடாது. குடிமக்களை கொல்லக் கூடாது என்று அந்த கட்டுரைகள் மூலம் சண்முகதாசன் தமிழ் இயக்கங்களை எச்சரிக்கை செய்து வெகுஜன இயக்க அரசியலை அடிப்படையாக கொண்ட நீடித்த மக்கள் போர்க் கோட்பாட்டை போதித்தார். சகல அரசியல் அதிகாரமும் துப்பாக்கி குழலிலிருந்தே பிறக்கின்றன. ஆனால் துப்பாக்கியை கட்சி வழிநடத்த வேண்டுமே தவிர, துப்பாக்கி கட்சியை வழிநடத்த கூடாது என்ற மாவோவின் மேற்கோளையும் அவர் தமிழ் இளைஞர்களுக்கு சுட்டிக்காட்டினார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘வரலாற்றில்’ மிகப் பெரிய கொரில்லாப்போரை வழிநடத்திய மகத்தான தத்துவவாதியான மாவோவுடன் அருகாக இருந்து கலந்துரையாடி கற்றுக் கொண்ட இந்த மூத்த தமிழ் தலைவரின் ஆலோசனைக்கு செவிமடுத்திருந்தால், அவரும் அவரது போராளிகளும் நந்திகடலோரத்தில் அழிக்கப்படாமல் இருந்திருக்கலாம்.
எனது தந்தையார் மேர்வின் டி சில்வாவும் (அவரின் 21 ஆவது நினைவுதினம் கடந்தவாரம் வந்தது) சண்ணும் நெருங்கிய நண்பர்கள். மேர்வின் அவரை மிகவும் அன்பாக ‘மாவோ சே –.சண்’ என்று அழைப்பார். கொழும்பு வார்ட் பிளேஸினில் நாங்கள் வசித்த தொடர்மாடி வாடகை வீட்டுக்கு சண் அடிக்கடி வருவது வழக்கம். அவரது கொள்ளுப்பிட்டி ஸ்கொபீல்ட் பிளேஸ் வீட்டுக்கு சென்று மேர்வின் விருந்துண்பார். எனது தந்தையாரும் அவரும் சீன வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு அரசியல் மற்றும் உட்கட்சி செயற்பாட்டுமுறை குறித்து ஆழமாக கலந்துரையாடி விவாதிப்பார்கள். மேர்வின் சிலோன் டெய்லி நியூஸ், சன்டே ஒப்சேர்வர் மற்றும் லங்கா கார்டியன் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்த போது சண்ணின் கட்டுரைகளை மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தனது நண்பர் பீட்டர் கெனமனின் மனத்தாபங்களுக்கு மத்தியிலும் பிரசுரிக்க ஒருபோதும் தவறியதில்லை.
நான் எனது பதின் அகவை வயதுக்குள் பிரவேசிக்கும் போது மாவோவை வாசிக்க தொடங்கினேன். அதற்கு தோழர்  சண் தான் காரணம்.அவர் சீனாவுக்கு சென்று திரும்பி வரும் போது பாடசாலை மாணவனாக இருந்த எனக்கு பொன்வண்ணத்திலான மாவோ பட்டிகளையும் ஆடைகளையும் ‘மாவோவின் சிந்தனைகள்’ என்ற சிறிய கையடக்க நூலினதும் , மாவோவின் கவிதைகளினதும் பல்வேறுபதிப்புகளையும் கொண்டுவருவார்.
1980 களில் நான் ஒரு இளைஞனாக இருந்த போது ‘கிளர்ச்சி செய்வது சரியானதே’ என்ற மாவோவின் தத்துவார்த்த ஆணையினால் தூண்டப்பட்டு சில போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறகு அடுத்த தசாப்தத்தில் என்னை பாதுகாத்துக் கொள்ள மறைந்திருக்க வேண்டியிருந்தது. அப்போது சில வாரங்கள் தோழர் சண் எனக்கு புகலிடம் தந்தார். அவ்வாறு செய்ததன் மூலம் அரசினாலும்  தொழிற்சங்க தலைவர் எல்.டப்ள்யூ. பண்டித போன்ற மூத்த இடதுசாரி தலைவர்களை ஏற்கனவே கொலை செய்த ஜே.வி.பி.னாலும் அவருக்கு ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலை இருந்தது.
சண்ணுடன் தங்கியிருந்த அந்த நாட்களில் பின்னிரவு வரை மேல் மாடியில் இருவரும் பல அரசியல் விவகாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்போம். ஒரு இரவு சம்பாஷனையின் போது அவர் ‘கோட்பாட்டு விடயங்களில் நான் தூய்மையானவன் ‘ (In matters of ideology , I am a Brahmin)என்று கூறியது அவரின் பிறந்ததின நூற்றாண்டில் என் மனதில் அழியாத நினைவாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *