Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவு ஸ்தூபி அமைக்க வட மாகாணசபை இணக்கம்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவு ஸ்தூபி அமைக்க வட மாகாணசபை இணக்கம்

முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ம் ஆண்டு போரின் இறுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அந்தப் பகுதியிலேயே நினைவு ஸ்தூபி ஒன்றை அமைப்பதற்கு வட மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் 25வது அமர்வு திங்கள்கிழமை மாகாணசபையின் சபா மண்டபத் தில் நடைபெற்றபோது முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முதலமைச்சரிடம் மேற்படி நினைவிடம் அமைப்பது தொடர்பில் வாய்மொழி மூல வினாவை எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, வடமாகாணசபை தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என முதலமைச்சர் கூறினார்.

கடந்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதி மாகாணசபையில் இந்த நினைவி டம் அமைப்பது தொர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன்போது குறித்த விடயம் தொடர்பில் பொருத்தமான காலம் வரும்போது அது குறித்து பேசலாம் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதற்குப் பொருத்தமான காலம் வந்துள்ளதாக கருதப்படும் நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என சபையில் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் “குறித்த நினைவிடத்தை அமைப்பதற்கு மாகாணசபையிடம் விசேடமான நிதி ஒழுங்குகள் எவையுமில்லை. எனவே பொதுமக்கள் இணைந்து குறித்த நினைவிடத்தை அமைக்க விரும்பினால் அதற்காக மக்கள் ஒரு நிதியத்தை ஒழுங்கமைத்து , அதன் ஊடாக மேற்கொள்ளலாம். அதற்கு வடமாகாண சபை தனது முழுமையான ஒ த்துழைப்புக்களை வழங்கும். மேலும் நினைவிடம் அமைப்பதற்கான அனுமதி சிக்கல்கள் எவையும் இருப்பின் அது தொடர்பிலும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

முன்னைய அரசாங்கம் இதற்கு அனுமதி மறுத்துவந்தது. ஆனால் தற்போதைய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கலாம். எனவே நாங்கள் குறித்த நினைவிடத்தை அமைக்கும் திட்டத்தை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், “சட்டத்தின்படி வீதிகளுக்குப் பெயரிடுதல் மற்றும் நினைவிடம் அமைத்தல் போன்றனவற்றுக்கு அனுமதி பெறப்படவேண்டும். எனவே உள்ளுராட்சி அமைச்சர் என்றவகையில் முதலமைச்சருக்கு நினைவிடத்தை அமைக்கவிருக்கும் மக்கள், அது குறித்து கோரிக்கை ஒன்றினை அனுப்பினால் அது தொடர்பில் முதலமைச்சர் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்தார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *