Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்குடாநாட்டில் கஞ்சாப் பிரக்ஞையும் ஹெரோயின் பாவனையும்

யாழ்குடாநாட்டில் கஞ்சாப் பிரக்ஞையும் ஹெரோயின் பாவனையும்

மருத்துவர் சி. யமுனாநந்தா, பிரதிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

வடபகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவையினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடி அதற்குரிய காப்புப் பொறிமுறையினை உருவாக்குவதற்கான கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடபிராந்திய கடற்படை அதிகாரிகளது கருத்துப்படி அண்மைக் காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்படும் கஞ்ஞாப் பொதிகளின் அளவு அபரிதமாக அதிகரித்து உள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாகப் போதைப் பொருட்களைக் கடத்துபவர்களை தனிமைப்படுத்துவதற்கு பிரத்தியேகமான இடவசதி தேவை எனக் குறிப்பிட்டார்.

யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் அவர்களின் கருத்துப்படி யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஹெரோயின் பாவித்து கைதுசெய்யப்பட்ட பலர் சிறைச்சாலையில் உள்ளனர். இவர்களில் சிலர் போதைவஸ்து வியாபாரிகளின் அடிமைகளாக உள்ளனர். சிறைச்சாலையில் போதைவஸ்து பாவித்த கைதிகள் ஏனைய கைதிகளுடன் தொடர்பில் இல்லாது தனியாகவே வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட மதுவரித்-திணைக்கள அதிகாரிகளின் கருத்துப்படி யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் பாவனையும், கஞ்சாப்பாவனையும் அதிகரித்துள்ளது.

மேற்கூறிய தகவல்கள் எமது பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் கொறோனாத் தொற்றுக்குப் பின்பான உலகில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும். இது இலங்கையையும் பாதிக்கும். தென்னிந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை, பொருளாதார மந்தநிலை போதைப்பொருள் வர்த்தகத்-தினை அதிகரிக்கும். இதனால் இலங்கையின் வடபகுதி தீவிரமாகப் பாதிக்கப்படும். இந்திய மத்திய அரசு கொறோனா பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள ஐக்கிய அமெரிக்காவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தி உள்ளதை இந்தியப் பிரதமரின் 23.07.2020 அன்றையதின உரை எமக்கு உணர்த்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ எவ்வாறு போதைப்பொருள் வர்த்தக எல்லையாக உள்ளதோ அவ்வாறே இந்தியாவிற்கு இலங்கை ஓர் போதைப்பொருள் வர்த்தக எல்லையாக மாறி வருகின்றது.

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த சமூகமட்டத்தில் விழிப்புச் செயற்பாடுகள் அதிகரிக்கப்படல் வேண்டும். பொதுவாக போதைப் பொருளிற்கு அடிமையானவர்கள் 16 வயது தொடக்கம் 35 வயது வரையிலானவர்கள்.

பாடசாலைக்கல்வி சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் தற்போதைய ஸ்தம்பிதநிலை பாடசாலை இடைவிலகலை அதிகரிக்கும். அடுத்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மிகவும் கண்காணிப்பாக இருத்தல் அவசியம். பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பணம் நல்லவழியில் செலவு செய்யப்படுகின்றதா என்பதனை உற்றுப்பார்த்தல் வேண்டும். இன்றைய சூழலில் எமது பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகம் சாதாரணமாக நிகழ்கின்றது. எனவே அதற்கு எமது இளம் சந்ததியினர் இரையாகாது இருக்க விழிப்புடன் இருத்தல் வேண்டும். மதத்தலைவர்களும் போதைப்பொருள் பாவனையின் தீமையினைத் தமது அன்றாட சமய நிகழ்வுகளில் நினைவூட்டல் வேண்டும். போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கு மருத்துவ வசதிகளை வைத்தியசாலைகள் மேம்படுத்தல் அவசியம். பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்த்தல் அவசியம். பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றைச்சூழ ஏற்படும் நட்புச் சூழலையும், விளையாட்டு மைதானச் சூழலையும் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளுதல் அவசியம். பொதுநிறுவனங்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புச் செய்தல் அவசியம்.

இளைஞர்களுக்கு போதிய தொழில் முயற்சிகள், தொழில்நுட்பக் கல்வி என்பவற்றை அதிகரிக்க வேண்டும். வேலையற்ற இளைஞர்களிடம் சேரும் மிகையான பணம், அவர்களைப் போதைப்பொருளுக்கு நாட்டமடைய வைக்கும். எனவே பெற்றோரும், உறவினர்களும் தமது இளைஞர்களுக்குச் சுயமாகத் தொழில் செய்வதற்கு வழிப்படுத்தல் அவசியம். அடுத்து கிராமங்களில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் போதைப் பொருள் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் பாவனை வெறும் சட்டப்பிரச்சினை அன்று. அது சமூகப் பிரச்சினை ஆகும். இதனை வெறுமனே குறித்த தரப்பினரது வேலை என்று எமது கடமையிலிருந்து சுகாதார சேவையினர் ஒதுங்க முடியாது. மேலும் இதனைப் பிரதேச மட்டத்தில் கட்டுப்படுத்தாவிடின் எமது சமூகம் மீள முடியாத பாதாள அநீதிக்குச் சென்றுவிடும்.

“போதைப் பேதமையினை ஏதமில்லாது எதிர்த்திடுவோம்”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *