Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான ஒரு சிறுதொழில் முயற்சியாளர்

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான ஒரு  சிறுதொழில் முயற்சியாளர்

யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்.20171004_144804தொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் சொல்வதைக் கேட்போம். நான் பிறந்த மண் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை. காங்கேசன்துறை இராணுவமுகாமுக்கு அருகில் எங்களது வசிப்பிடம் அமைந்திருந்த காரணத்தினால் 1990 இலேயே வீட்டை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1995 வரையும் வலிகாமம் மேற்கு பகுதிகளான சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தோம். பின்னர் 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வு. அதனைத் தொடர்ந்து 2009 வரையும் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வந்தோம். யுத்தகாலத்துக்கு முந்தைய என்னுடைய கடந்த காலத்தில் அரியாலையில் உள்ள பழவகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் உற்பத்தித்துறை சார்ந்த பொறுப்பில் வேலை செய்தேன். பின், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலும் கடமையாற்றினேன். அதன் பிற்பாடு இடப்பெயர்வுடன் வன்னியில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனமொன்றில் மாவட்ட முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இறுதியுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் திரும்பிய பிற்பாடு கடந்த கால அனுபவங்களையும் வைத்து நாங்கள் ஏன் சொந்தமாக தொழில் தொடங்கக்கூடாது என்கிற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு எனது மகளும் உதவிக்கரமாக இருந்தார்.20171004_144105

தனது மகளுடன் இணைந்து ஒரு குடும்ப வியாபாரம் போல் தான் சிறு உற்பத்தி முயற்சிகளை 2015 நவம்பரில் ஆரம்பித்தோம். பழங்கள், மரக்கறிகளை நீரகற்றி உலர்த்தி பதனிடும் முறையை நாங்கள் கையாள்கின்றோம். இப்பொழுது முருங்கை இலை மா, இராசவள்ளி மா, பாவற்காய் வற்றல், பாவற்காய் வடகம், வேப்பம்பூ வடகம் ஆகியவற்றை தயாரித்து வருகிறோம். இவற்றைப் பொதி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். 2016 இல் இடம்பெற்ற யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எமது உற்பத்திப் பொருட்களை பார்வைக்கு வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் தான் ஏற்றுமதிக்கான சில தொடர்புகளும் கிடைத்தன. நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடாவிட்டாலும் ஏனைய முகவர்கள் ஊடாக ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றார்.

முருங்கையினுடைய எல்லாப் பகுதிகளுமே அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்தவையாகும். எங்களின் எல்லோரின் வீடுகளிலும் முருங்கை மரம் இருக்கிறது. பெரும்பாலும் முருங்கை காயைத் தான் கறித் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் முருங்கை இலையின் மகத்துவத்தை பெரிதாக யாரும் உணரவில்லை. நாங்கள் முருங்கை இலைகளை Yarl herbs export என்கிற நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்து உலர்த்தி பதனிட்டு மாவாக்கி சுகாதாரமான முறையில் பொதியிட்டு சந்தைப்படுத்துகிறோம். வெளிநாடுகளில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. புட்டு, இடியப்பம் அவிக்கும் மாவுடன் முருங்கை இலை மாவையும் கலந்து விநியோகிக்கும் திட்டம் ஒன்றை நிறுவனமொன்று இங்கு ஆரம்பிக்க இருக்கிறது. ஆப்பிரிக்காவில் குழந்தைகளின் போசனைப் பெறுமானத்தை அதிகரிக்க கோதுமைமாவுடன், முருங்கை இலை மாவைக் கலந்து உபயோகப்படுத்துகிறார்கள். முருங்கை இலையில் புட்டு அவிக்கும் நடைமுறை இங்கே நிறைய காலமாக இருக்கிறது. அன்னியச் செலாவணியை பெருமளவில் ஈட்டக் கூடிய ஒரு தொழில் துறையாக வளரக் கூடிய சாத்தியத்தை இது கொண்டுள்ளது. இது தொடர்பில் எங்களது விவசாய திணைக்களங்களோ சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களோ அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இன்னும் இங்கு ஏராளமான உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றன. அதன் மூலம் எம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.20171004_144133

வேப்பம்பூ வடகம் போன்ற பாரம்பரிய உணவுவகைகளையும் தயாரித்து வருகிறேன். பாகற்காய் வடகத்தை இங்கே அறிமுகப்படுத்தி அது நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது. மோர்மிளகாய்க்கும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மிளகாயின் விலை மிகவும் உச்சமாக இருந்தபடியால் மோர்மிளகாய் உற்பத்தி செய்ய முடியவில்லை.
பொலிக்னைட் சீட்டினால் (வெப்பத்தை விரைவாக கடத்தி தக்க வைத்திருக்கும் ஒரு வகை மேற்கூரை) சுற்றி மூடப்பட்ட அறையில் வைத்து தான் முருங்கை இலைகள், பாவற்காய்கள், இராசவள்ளிக்கிழங்குகள் உலர்த்தப்படுகின்றன. சூரிய சக்தியின் மூலம் இவற்றை திறம்பட உலர்த்த முடியும்.
இப்பொழுது எங்கள் தொழிலில் உள்ள பிரதான சவால், உற்பத்தி மூலப் பொருட்களை தடையற்ற விதத்தில் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவது தான். வரட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு மரக்கறி உற்பத்திகள் குறிப்பாக பாவற்காய் உற்பத்தியை மேற்கொள்ளும் நோக்கில் பசுமைக் குடில்களை அமைத்துள்ளேன். கிளிநொச்சியில் 2 ஏக்கர் காணியை வாங்கி அங்கும் பயிரிடும் நோக்கில் உள்ளேன்.
இவை எமது விவசாயிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைக்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு தொழிநுட்பங்களும் இவ்வாறான முயற்சிகளும் பரவலடையுதோ அவ்வளவுகவ்வளவு எமது தேசத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.

சந்தை விலை ஏற்றத்தாழ்வு, பருவகாலம் சீரின்மை, நிலையான வழங்கல் இல்லாமை தான் எதிர்நோக்கும் பிரதான சிக்கல்களாக உள்ளன. இஸ்ரேல் நாட்டவர்கள் பாலைவனமே தங்களுக்கு ஒரு வளம் (desert is a resouree) என்கிறார்கள். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் ஒரே தண்டவாளத்தில் செல்லும் ரயில் மாதிரி கைகோர்த்து பயணிக்கும் போது தான் பொருளாதாரத்தில் மேன்மை நிலையை அடையலாம்.
ஆனால், இங்கு விவசாய ஆராய்ச்சிகள் ஒரு நிலையிலும் விவசாய வணிகமும், அபிவிருத்தியும் இன்னொரு நிலையிலும் உள்ளன. இங்குள்ள அரச நிறுவனங்கள் பெரிதாக விவசாய வணிகத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அண்மையில் தாய்லாந்துக்கு சென்று வந்தேன். அங்கு பனம்பொருள் உற்பத்தி மிகவும் விஞ்ஞானபூர்வமான தயாரிப்புடன் மேற்கு நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது. அதுவும் பனையில் இருந்து பலவகையான பொருட்கள். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தாய்லாந்தில் உள்@ர் மூலப்பொருட்களான மூங்கில்களை வைத்து பசுமைக்குடில்களை சிறப்பான முறையில் அமைத்து உள்ளார்கள். இந்தியாவில் பசுமைக்குடில்களை அமைப்பதற்கு சவுக்கு மரத்தை பாவிக்கின்றார்கள்.20171004_144145எமது பிரதேசத்தில் கூட்டு முயற்சிக்கான பரந்த தளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்கள் எம் பகுதிகளில் புதிதாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். சரியான விலையில் மூலப்பொருட்களை பெற்று தொடர்ச்சியாக உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைக்கு நாங்கள் வளர வேண்டும். அப்போது தான் சர்வதேச சந்தையிலும் ஒரு ஸ்திரமான நிலையை தக்கவைக்க முடியும்.(1520171004_144105)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *