Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நகர மத்தியில் இனம் தெரியாதவர்களால் கட்டப்பட்ட பௌத்த கொடியால் பரபரப்பு

யாழ் நகர மத்தியில்  இனம் தெரியாதவர்களால் கட்டப்பட்ட பௌத்த கொடியால் பரபரப்பு

யாழ்ப்பாண நகர மத்தியில் இன்று காலை பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டிருந்ததால், பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இன்று மாலை இளைஞர்கள் சிலர் அதனை அகற்றியுள்ளனர்.யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டிருந்தது.இது தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில், அந்த இடத்தில் கற்கள் கம்பிகள் எவையும் காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது, நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இந்த பௌத்தக் கொடி இன்று மாலை அகற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இளைஞர்கள் சிலரினாலேயே குறித்த சர்ச்சைக்குரிய பௌத்த கொடி அகற்றப்பட்டுள்ளது.மேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன், “சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ் தேசத்து நிலங்களினை இவ்வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தி பறித்தெடுகின்ற முயற்சியாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்து கூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *