தலைப்பு செய்திகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களை மீண்டும் துன்பப்படுத்த வேண்டாம் -மனோ கணேசன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களை  மீண்டும்  துன்பப்படுத்த வேண்டாம் -மனோ கணேசன்

இந்து சமய அலுவல்கள் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்ற அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த பிக்குவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கே இருக்கின்ற பௌத்த ஆலயம் மற்றும் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.மேலும் பௌத்த பிக்குவிடமும் பொலிஸாரிடமும் வேண்டுகோள் விடுத்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தத்தால் பல துயரங்களை சந்தித்த மக்கள் இந்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அந்த மக்கள் தாமும் இலங்கை மக்கள் என ஏற்றுக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுமாறும் அதற்கேற்ற வகையில் பொலிஸாரை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீண்டும் மீண்டும் இந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் விதமாக செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.20190610030956_IMG_7142

நீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற அந்த தீர்ப்பை இரண்டு தரப்பும் மதித்து செயற்படுமாறும் அங்கே நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக வேலை செய்பவர்களை பொலிஸார் இடையூறு செய்யக்கூடாது எனவும், அதே போன்று நீதிமன்ற தீர்ப்பை மதிக்காது அனுமதிகள் எதுவும் பெற்றுக்கொள்ளாது அபிருத்தி வேலை செய்கின்ற பிக்கு தரப்பினரோ அல்லது பிள்ளையார் ஆலய தரப்பினரோ இருந்தால் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் பொலிஸார் பக்கச்சார்பாக இந்த விடயத்திலே செயற்படாது நீதியை நிலை நாட்ட வேண்டும் என அமைச்சரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதைவிட மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸார் மற்றும் பிரதேச சபை பிரதேச செயலகம் இணைந்து தற்போது வரை அந்த குறித்த சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதியில் நடைபெற்று வருகின்ற வேலைகள் தொடர்பாகவும் தற்போது வரை எவ்வாறான கட்டடங்கள் எவ்வாறான நிர்மாணங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தொடர்பாக காணொளி பதிவு ஒன்றை பதிந்து ஆவணமாக வைத்துக்கொள்ளுமாறும் அறிக்கை ஒன்றை தயார் படுத்தி வைத்துக் கொள்ளுமாறும் பணிக்கப்பட்டது .10

மேலும் தற்போது இந்த ஆலய விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பட்டால் அங்கே இந்த பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக தமது அமைச்சால் பிள்ளையார் ஆலயம் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டு அதில் உள்ள உண்மை நிலைமைகளின் படி பிள்ளையார் ஆலயம் சார்பாக தமது அமைச்சு நீதிமன்றத்தில் தமது நியாயத்தையும் தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.மேலும் பிள்ளையார் ஆலய தரப்பினர் உரிய திணைக்களங்களின் அனுமதி களோடு இந்த பிள்ளையார் ஆலய பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது தமது அமைச்சும் அதற்கான நிதி உதவிகளை வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *