Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரணிலிடம் மண்டியிட்ட  மைத்திரி, மகிந்த 

ரணிலிடம் மண்டியிட்ட   மைத்திரி, மகிந்த 

பா. கிருபாகரன்

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து அவரை பலப்படுத்திவிட்டு தமக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன மகிந்த  மைத்திரி அணிகள்.

பாராளுமன்றத்தில் கடந்த 4 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் காலை  9.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர்  கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன் பின்னர் இடம்பெற்ற தினப் பணிகளை தொடர்ந்து காலை  9.55 மணிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மகிந்த ஆதரவு பொது எதிரணித் தலைவரான தினேஷ் குணவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தப் பிரேரணையை ஆதரித்து அதே அணியைச் சேர்ந்த டலஸ் அழக பெரும வழிமொழிந்து உரையாற்றினார்.

இதேபோன்று, அரசு தரப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பி. தரப்பில் பிமல் ரத்நாயக்க எம்.பி. , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உரைகளை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

சபைக்குள்ளும் வெளியிலும் ஓயாத அலைகள் 

இதேவேளை, விவாதம் 9.55 மணிக்கு ஆரம்பித்த நிலையில், 9.57 மணி முதல் இரவு 9.30 மணி வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்குள் பல தடவை வருவதும் போவதுமாக இருந்தார். ஒவ்வொரு தடவையும் உள்ளே வரும்போதும் தனது தரப்பு எம்.பி.க்களை சிறிய சிறிய குழுக்களாக சந்தித்து வியூகங்களை அமைத்துக்கொண்டார். அதேபோன்றே சபைக்குள்ளும் வெளியிலும் தனது கட்சி அமைச்சர்கள் சகிதம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டதுடன், பலருடன் அது தொடர்பில் பேச்சுகளையும் நடத்தினார்.  அத்துடன், ரணில் விக்கிரமசிங்க அன்றைய தினம் வழக்கத்தை விடவும் மிகவும் உற்சாகத்துடனும் சிரித்தவாறும் காணப்பட்டார்.

கடும் சர்ச்சையை ஏற்படுத்திய உரைகள் 

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசியோரில் மகிந்த ஆதரவு எம்.பி. விமல் வீரவன்ச,  சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , ஐ.தே.க. அமைச்சர் சரத் பொன்சேகா, மகிந்த அணி எம்.பி. மகிந்தானந்த அழுத்கமகே, ஐ.தே.க. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் உரைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இவர்கள் உரையாற்றும் போது சபை அல்லோலகல்லோப்பட்டது. கூச்சல் குழப்பங்களாலும் சேறுபூசல், வசைமாரிகளாலும் சபை அதிர்ந்தது. இதனை தனது உரையில் சுட்டிக்காட்டிய முன்னாள் சபாநாயகரும் மகிந்த ஆதரவு எம்.பி.யுமான சமல் ராஜபக்ஷ, நல்லவேளை பொது மக்கள் கலரியில் மாணவர்கள் இல்லை. இருந்திருந்தால் ஓடியிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கத்திற்கு மாறாக குவிந்திருந்த பார்வையாளர்கள் 

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பார்வையாளர் கலரியிலும் சபாநாயகர் கலரியிலும்  பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். காலை 9.30 மணி முதல் இரவு  10 மணி வரை இரு கலரிகளும் இருப்பதற்கு இடமற்ற நிலையில், பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. பலர் நின்றுகொண்டும் சபை நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டிருந்தனர்.  சபைக்குள் நடந்த கூச்சல் குழப்பங்களை இவர்களில் பலர் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நீண்ட அமர்வும் நீண்ட உரையும் 

இந்த விவாதத்தின் போது என்றுமில்லாதவாறு சபாநாயகர் நீண்ட நேரமாக சுமார் 9மணித்தியாங்களுக்கு மேலாக சபா பீடத்தில் அமர்ந்திருந்து சாதனை படைத்தார்.  காலை 9.30 மணிக்கு சபா பீடத்தில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை ஆரம்பித்த சபா நாயகர் மதியம் 1.57 மணி வரை தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.  பின் 1.57 மணி முதல்  2.56 மணி வரை பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சபா பீடத்தில் அமர்ந்திருந்தார். பின்னர் 2.56 மணிக்கு மீண்டும் சபா பீடத்திற்கு வந்த சபா நாயகர் இரவு 7.40 மணி வரை அமர்ந்திருந்தார்.  அவரைத் தொடர்ந்து 7.40 மணிக்கு சபா பீடத்தில்  மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் அமர்ந்தபோதும்  8 மணிக்கு மீண்டும் சபா பீடம் வந்த சபாநாயகர் சபை நடவடிக்கை முடிந்த இரவு  10 மணிவரை சபா பீடத்தில் அமர்ந்திருந்தார்.

அதேவேளை, இந்த விவாதத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேற்பட்ட நீண்ட உரையை ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநு

ரகுமார திசாநாயக்க நிகழ்த்திய அதேநேரம் மிகக் குறுகிய நேரமான 2 நிமிட உரையை ஐ.தே.க. அமைச்சர் ஜோன் அமரதுங்க நிகழ்த்தினார்.

இரு செயலாளர்களும் வரவில்லை 

விவாதத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த அதேவேளை, இன்னொரு தரப்பு சபைக்கு வராததுடன், வாக்களிப்பிலும் பங்கெடுக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான  அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரான மகிந்த அமரவீர ஆகியோர் அன்றைய தினம் சபைக்கு வரவேயில்லை.

சபையில் மோதிய ஐ.தே.க. ஸ்ரீ ல.சு.க. 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ ல.சு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவாக உரையாற்றியதால் ஐ.தே.க.வினருக்கும் அவர்களுக்குமிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. சு.க. அமைச்சர்கள் உரையாற்ற முடியாமல் தடுமாறினர். அவர்களுக்கு ஆதவரளிக்க எவருமில்லாததால் மகிந்த ஆதரவு பொது எதிரணியினரே அவர்களை ஆதரித்து பதிலுக்கு  கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

இதில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே ஐ.தே.க.வினரின் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொண்டார். இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஐ.தே.க. வினரை மிக மோசமாக விமர்சித்தார். பல சவால்களை விடுத்தார்.

மங்கள  திலங்க மோதல் 

இதேபோன்றே பிரதி சபாநாயகரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான திலங்க சுமதிபால நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றிய போது ஐ.தே.க. அமைச்சர் மங்கள சமரவீர அவருடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஸ்ரீ ல.சு.க. நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதாக முடிவெடுத்திருப்பதாக திலங்க சுமதிபால தெரிவித்த போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்த மங்கள திலங்க சுமதி பாலவை மிக நெருக்கமாகச் சென்று உங்கள்  தலைவரிடம் கேட்டுவிட்டா இங்கு உரையாற்ற வந்தீரென மிக ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனால்,  திலங்கவும் அவரது கட்சியைச் சேர்ந்த சுசந்த புஞ்சி நிலமேயும்  அமைச்சர் மங்களவுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

காணாமல்போன கையெழுத்துகள் 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்ட ஸ்ரீல.சு.க. கட்சியின் பிரதம அமைச்சரான நிசாந்த முத்துஹெட்டிகமவும் காதர் மஸ்தான் எம்.பி.யும் அன்று முழுநாளும் சபைக்கு வரவேயில்லை. அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கோரி அவரிடம் கடிதத்தை கையளித்த ஸ்ரீ ல.சு. கட்சியின் அமைச்சரான  நிமல் சிறிபால டி சில்வாவும் சபைக்கு வரவில்லை.

அம்பலமான அசிங்கங்கள் 

இந்த விவாதத்தின் நிறைவாக ஐ.தே.க.வின் அமைச்சரான ராஜித சேனாரத்னவே பதிலளித்து உரையாற்றினார். அவர் பதிலளித்து உரையாற்றிய அரைமணி நேரமும் சபை அமளிதுமளிப்பட்டது. அவரை உரையாற்ற விடாது தடுப்பதற்கு மகிந்த அணி உறுப்பினர்கள் முயன்றபோதெல்லாம் அவர்களைப் பற்றிய இரகசியங்கள், அசிங்கங்கள் எல்லாவற்றையும் சபையில் ராஜித சேனாரட்ன அம்பலப்படுத்தினார்.

மகிந்த அணி எம்.பி.யான ரஞ்சித் டி சொய்சா எழுந்து  ராஜிதவின் உரைக்கு குறுக்கீடு செய்தபோது, வயதுபோன தம்பதியை மிரட்டி விரட்டி விட்டு அவர்களின் வீட்டையும் காணியையும் அபகரித்த கள்வன்தானே நீரென ராஜித கூறியபோது, அந்த எம்.பி. மெதுவாக அமர்ந்துவிட்டார். அடுத்ததாக அதே அணியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக இருந்தவருமான  விமலவீர திசாநாயக்க எழுந்து ராஜிதவின் உரையை குறுக்கீடு செய்தபோது சாதாரணதரப் பரீட்சை சித்தியடையாத உங்களுக்கு எப்படி நான் கூறும் புள்ளிவிபரங்கள் தெரியவரும். நீங்கள் எந்த நேரமும் வாய்க்குள் வெற்றிலையை குதப்புவதால் உங்களுக்கு வித்தியாசமான நோயொன்று உள்ளது. எனவே பேசாது அமருங்கள் எனக் கூறிய போது அவரும் அமர்ந்துவிட்டார்.

முன்னாள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுர ரத்வத்தவின் மகனும் மகிந்த அணி எம்.பி.யுமான லோஹான் ரத்வத்த ராஜிதவுக்கு குறுக்கீடு செய்த போது அப்பனும் மகனுமாகச் சேர்ந்து அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தீர்களே மறந்துவிட்டீர்களா. அந்தப் பாவம் உங்களை சும்மாவிடாது. நீங்கள் படுகொலை செய்த முஸ்லிம்களின் குடும்பங்கள் இன்றும் கண்ணீரில் உள்ளன எனக் கூறி கடுமையாக விமர்சித்ததையடுத்து லொஹான் ரத்வத்தவும் அமைதியடைந்துவிட்டார்.

சி.ஐ.டி. , எப்.சி.ஐ.டி. ஆவணங்களுடன் வந்த ராஜித

ராஜித சபைக்குள் வரும்போதே 5,6 ஆவணங்களைக் கொண்டுவந்தார். அவர் தனது உரையை ஆரம்பிக்கும்போதே, ஒவ்வொரு ஆவணமாக எடுத்து இது கடந்த அரசின் ஊழல் மோசடிகள், படுகொலைகள், ஆள்கடத்தல்கள், காணி அபகரிப்புகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பான சி.ஐ.டி. அறிக்கை. இது எப்.சி.ஐ.டி. அறிக்கை. இது ஊழல் மோசடி அறிக்கையென்று ஒவ்வொன்றாக தூக்கிக்காட்டிவிட்டு எவராவது தேவையற்று வாய் திறப்பீர்களானால் இதில் உள்ளவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு  கூறவேண்டியேற்படுமென கூறியதனால் மகிந்த அணியின் பெரிய தலைகள் பலவும் அமைதியாக இருந்தன.

வாடிய முகத்துடன் இறுதியில் வந்த மகிந்த 

விவாதம் காலை 9.50 மணியுடன் இரவு 9.30 மணி வரை இடம்பெற்ற நிலையில், சபைக்குள் வராது பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்து காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இரவு  9.30 மணிக்கு வாக்கெடுப்புக்கான கோரமணி ஒலித்ததையடுத்தே சபைக்குள் வாடிய முகத்துடன் வந்தமர்ந்துகொண்டார்.  நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு அவர் வெளியேறிச் செல்லும் வரை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் முகத்தை பார்க்கவில்லை. எனினும், ரணில் விக்கிரம சிங்க சிரித்தவாரே மகிந்த ராஜபக்ஷவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆதரவாக 76, எதிராக  122

இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் ஐ.தே.கட்சியுடன் அதன் பங்காளிக் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து  122 வாக்குகளை அளித்த அதேவேளை,  மகிந்த ஆதரவு அணியுடன் ஸ்ரீல.சு. கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களென  16 அமைச்சர்கள் ஜே.வி.பி.யின்  6 உறுப்பினர்களென 76 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதில் 26 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கைதட்டி குதூகலித்த சரவணபவன் எம்.பி. 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிகவும் உற்சாகமாகவிருந்தனர். தமது பெயர் எப்போது அழைக்கப்படுமென பரபரப்புடன் காத்திருந்தனர். ஒவ்வொருவரும் வாக்களித்து முடிய ஏதோ வரலாற்றுக் கடமையை முடித்துவிட்ட பெருமையில் புன்முறுவல் செய்துகொண்டிருந்தனர். அதிலும் வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த போது சரவணபவன் எம்.பி. குழந்தை  பிள்ளைப்போல் கைகளைத் தட்டி ஐ.தே.க.வினரை  பார்த்து பெருவிரலைக் காட்டி வெற்றிப் பெருமிதம் கொண்டார்.

காலை முதல் இரவு வரை 

இதேவேளை, அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் தலைவரான லால் விஜேயநாயக்க தலைமையிலான குழுவினர் சபாநாயகர் கலரியில் காலை  9.30 மணி முதல் இரவு  10.30 மணிக்கு வாக்கெடுப்பு முடியும் வரை அமர்ந்திருந்து அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தனர். இவர்களைப் போன்றே இன்னும் பல முக்கியஸ்தர்களும் சபாநாயகர் கலரியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *