Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரி. ஐ. சி வரதகுமாரின் இழப்பு ஈடுசெய்யப்படமுடியாதது: முகநூல்களில் தமிழ் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிப்பு

ரி. ஐ. சி வரதகுமாரின் இழப்பு ஈடுசெய்யப்படமுடியாதது: முகநூல்களில் தமிழ் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிப்பு

லண்டனில் நேற்று புதன்கிழமை இரவு காலமான ஈழ தமிழ் மனிதஹ் உரிமைகள் செயற்பாட்டாளர் TIC வரதகுமார் என்று அழைக்கப்படும் வைரமுத்து வரதகுமாரின் மறைவு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிவரை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து அளப்பெரும் பணியாற்றிய அவரின் இழப்பு ஒரு பேரிழப்பு என்று முகநூல்களில் தமிழ் செயற்பாட்டாளர்கள் பல் பதிவுகளை இட்டுள்ளனர். அவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.

சீலன் இதயச்சந்திரன்

80 களில், சென்னை பெசன்ட் நகரிலுள்ள தமிழர் தகவல் நடுவத்தில் ஆரம்பித்தது எமது உறவு.
இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் ஈஸ்வரச்சந்திரன்.
ஈரோஸின் ஆவணக்காப்பகத்திற்கும் வரதரின் நடுவத்திற்குமிடையே , நெருங்கிய ஆவணப்பரிமாற்ற தொடர்பாடல் இருந்தது.

அன்பான மனிதர்.
வாக்கினில் இனிமை உடையோர்.
அன்று சந்தித்த அதே மனிதர்தான் இன்றும்.
அவர் மாறவேயில்லை.

அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி ஒன்றுகூடலில் கடைசியாகச் சந்தித்தேன்.
அதே வரதர்.

போராட்டகால நினைவுகள் துளிர்த்தன.

உங்கள் சமூகம் சார்ந்த பங்களிப்புகள்
என்றும் நினைவுகூரப்படும்.
சென்று வாருங்கள் நண்பரே.😪

யமுனா ராஜேந்திரன்

லண்டன் சூழலில் வரதர் என்றால் அவர் ஒருவர்தான். தமிழ்ச்சூழலில் புரொபஷனல் எதிக்ஸ் என்றால் அதற்கு அவரையே உதாரணமாகச் சொல்வேன். செய்கிற எதனையும் காலத்தே நேர்த்தியாகச் செய்வார். அவருடன் இணைந்து நான் நிறையக் காரியங்கள் செய்திருக்கிறேன். அவரோடு இரவும் பகலும் தமிழ் தகவல் நடுவத்தில் நான் கழித்த நாட்கள் ஏராளம். அவருடன் மிக நெருங்கியிருந்தும் அவர் மீது வருத்தப்பட ஒரு நொடியையும் அவர் விட்டுத்தரவில்லை. எப்போதும் கனிவுடன் பேசுவார். செய்ய முடிந்ததை மட்டுமே பேசுவார். அறிவு வளம் தேடிய அவரது மரணம் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் இழப்பு. எந்தவகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு அவருடையது. ஓய்வறியாத அந்த மனிதரின் மரணம் இந்த நள்ளிரவில் எட்டியபோது, அதனைச் சொன்ன தோழர் சேனன் போலவே அவரோடு நெருங்கிப் பழகியவனாக என்னை நிலைகுலைத்து விட்டிருக்கிறது. வரதர் எல்லா வகையிலும் ஒரு நூலகம்; வேடந்தாங்கல்; ஆலமரம். எமது நினைவின் பகுதியாக என்றும் இருப்பீர்கள் வரதர். இப்போதேனும் ஓய்வுகொள்ளுங்கள் வரதர்..

மனோ கணேசன்
கட்சி, பிரதேச, மத பேதங்களுக்கு அப்பால் நம்மை ஒன்று சேர்க்க முயன்ற, அமரர் வைரமுத்து வரதகுமார், சுவிட்சர்லாந்து அரசுடன் இணைந்து சுவிசில் (Zurich), 2009 வருடம் நவம்பரில் நடத்திய, “அனைத்து தமிழ் பேசும் கட்சி மாநாட்டு” முயற்சியை மறக்கவே முடியாது. அதன்போது எடுக்கப்பட்ட படம்.

அமர்ந்து இருப்போர் (இ-வ) சிவலிங்கம், மனோ கணேசன், சங்கரி, சந்திரசேகரன், சம்பந்தன், ரவுப், ஆறுமுகன், சித்தார்த்தன்.

பின்னால் நிற்போர் மத்தியில், சுரேஷ், ஹிஸ்புல்லா, பிள்ளையான், தவராசா, கஜேன் பொன்னம்பலம், மாவை ஆகியோர் உள்ளனர்.

1

சேனன்- தமிழ் சொலிடாரிட்டி

ரி. ஐ. சி வரதர் என்று அழைக்கப்பட்ட வரதரின் இழப்பு குறித்து முகுந்த கவலை அடைகிறேன். தமிழ் சமூகத்தின் அனைத்து செயற்பாட்டாளர்களும் இது ஒரு பேரிழப்பு.

கோபி ரத்தினம்
தமிழீழப் போராட்டம் தொடர்பான விபரங்கள், தகவல்கள், ஆட்களின் தொடர்புகள் போன்றவற்றை அறியவிரும்புவர்களுக்கு முதல் தொடர்பு மையம் (first port of call) திரு. வரதகுமார் ஆகத்தான் இருக்கும். தனித்து தமிழர்கள் என்றில்லை இந்தியா, சிறிலங்கா மற்றும் மேற்கின் அரசறிவியலாளர்கள், இராஜதந்திரிகள் எனப் பலரும் அவரை அணுகுவதுண்டு.

தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இப்பணிக்காகவே அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு ரீஜசி இலிருந்து பிரித்து தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஓன்று இருந்தாகத் தெரியவில்லை. ஒவ்வொரும் நாளும் தனக்கு கிட்டிய நேரத்தின் பெரும் பகுதியை இப் பணிக்காகவே செலவிட்டார்.

வரதகுமாரின் அரசியலில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை. அதிகார மையங்களுடன் ஒத்தோடும் அவரது அரசியலை ‘ஒரு பேப்பர்’ இல் நான் பல தடவைகள் வெளிப்படையாகவே விமர்சித்து எழுதியிருக்கிறேன். அவற்றிற்கு அவர் பதிலும் எழுதியிருக்கிறார். இருப்பினும் இவை எங்களுக்கிடையிலான உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதில்லை.லண்டனில் தமிழ் அமைப்புகளின் பணிமனை என்று வரும்போது. ரீஜசி இன் பணியகம் ஒன்றுக்குத் தான் நான் இன்றுவரை செல்லவில்லை. அவர் இருக்கும்போது ஒரு நாள் செல்லவேண்டும் என்றிருந்தேன். அதுவும் இனி சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிட்டது.தான் நம்பியிருந்த பணிக்காக ஒய்வின்றி உறுதியாக உழைத்த வரதருக்கு நிரந்தர ஒய்வு கிட்டிவிட்டது. ஆனால் அவரில்லா வெற்றிடம் நிரப்பப்பட முடியாமல் இருக்கப்போகிறது.இறுதி வணக்கம் வரதகுமார் அண்ணை!

ராஜ்குமார்

4 தசாப்தங்களாக தமிழர் போராட்டத்துக்கு வரதகுமாரின் பங்களிப்பது அளப்பரியது. சுயநலமற்ற எளிமையான ஒரு மனிதன்.

His contribution to tamil struggle over 4 decades is immense. A simple selfless man.

மயூரன்

1987 காலப்பகுதியிலிருந்து பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் ,தற்போதைய தலைவராகவும் பணியாற்றிய TIC வரதகுமார் என அனைவராலும் அமைக்கப்படும் வைரமுத்து வரதகுமார் அண்ணர் அவர்கள் நேற்றையதினம் இயற்கையெய்தினார்

தமிழ்த்தேசிய ஆவணப்படுத்தல் முயற்சியில் முழுமூச்சாக இயங்கிய இதயம் இன்று நின்றுபோய்விட்டது!

கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் தமிழரின் விடுதலைக்கான பயணத்தில் முரண்பட்டுடையவரோடும் பேசுவதும், செயற்படுத்துவதும் என தமிழர் நலன்சார்ந்த அனைத்து செயற்பாடுகளிலும் பங்குபற்றி பயணித்த தமிழ் உணர்வாளனை இழந்துவிட்டோம்

இத்தகைய உயர்ந்த மனிதருக்கு எனது அஞ்சலிகள்

சாம் பிரதீபன்

தமிழ் மக்களின் மற்றுமொரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.
நெஞ்சு நிறைந்த வலியுடன் அஞ்சலிக்கிறேன்.
ஆத்மா சாந்தியடையட்டும்.

திருக்குமரன்
TIC வரதர்(வரதகுமார்) காலமானார்..
(Tamil Information Centre தமிழ் தகவல் நடுவம்)

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலங்களில் இருந்து இயங்கத் தொடங்கியவர், TIC வரதர் என்று அழைக்கப்பட்ட இவர், ’சகல இயக்கங்களுடனும், அரசுகளுடனும் தொடர்பில் இருந்தவர்’, இதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெறுமதியான ஆவணங்களை எல்லாம் எல்லாப் பகுதியினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டு அவற்றை பத்திரமாக ஆவணப்படுத்தினார். தமிழீழ காவல்துறைக்கு அயர்லாந்தில் வழங்கப்பட்ட பயிற்சிக்கான ஏற்பாட்டாளரில் ஒருவராகவும் இவர் இருந்தார்.

அரசியல் ரீதியில் இவரது சில நிலைப்பாடுகளில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், ஆவணங்களின் பெறுமதியை உணர்ந்து அதற்காக அவர் கொடுத்த வாழ்நாள் உழைப்பை என்றும் மதித்திருக்கிறேன்.
பிழையான வரலாறுகளை எல்லோரும் பேசத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தன்னிடம் உள்ள சகல ஆவணங்களையும் இனியும் மூடிவைக்காமல் இலத்திரனியல் பதிகை மூலமாக எல்லோருக்கும் பொதுமைப்படுத்தும் வேலையை ஆரம்பித்திருக்கிறாரென அறிந்தேன்

அதற்குள்…. 😞

சென்று வாருங்கள் ஐயா..

எய்ம்ஸ் சிவா

ஈழத்து மக்களுக்காக 1979 முதல் சர்வதேசத்தில் மனிதவுரிமை செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உத்தமர் , கடினமாக ஆவணப்படுத்தலில் ஈடுபட்டவரை இழந்து தவிக்கிறோம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *