செய்திகள்

வடக்கின் அடுத்த முதல்வர் யார்?

தாயகன்
எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் களமிறக்கப்பட மாட்டாரென அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுமந்திரன் பகிரங்கமாகக் கூறியுள்ளமை தமிழர் அரசியல் வட்டாரங்களில் ஒரு கொதி நிலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வார இறுதியில் யாழிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சராக 2 வருடங்கள் மட்டுமே பதவி வகிப்பேன், மிகுதி ஆட்சிக்காலத்தில் தம்பி மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்க வேண்டுமென முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அரசியலுக்கு நாம் அழைத்து வந்தபோது அவர் எமக்கு கூறியிருக்கிறார். அவ்வாறு 2 வருடங்கள் எனக் கூறியவர் 5 வருடங்கள் முதலமைச்சராக இருந்துவிட்டார். திரும்பவும் அவரை முதலமைச்சராக்கி கஷ்டபடுத்த நாம் விரும்பவில்லை. ஆகவே, அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டாரென சுமந்திரன் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நான் முதலமைச்சராக இருப்பேன். அதற்குப் பிறகு தம்பி மாவை இதனைப் பொறுப்பேற்க வேண்டும். மாவையும் என்னுடன் சேர்ந்து தேர்தலில் நிற்க வேண்டும். இதற்கமைய நான் இரண்டு வருடங்கள் பதவி வகித்த பின்னர் அந்தப் பொறுப்பை அவரிடம் கொடுப்பேன் என்று விக்னேஸ்வரன் கூறியபோது நாம் எவரும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனினும், அன்றைய பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில், நாங்கள் ஒரு தேர்தலுக்குப் போகின்றோம் என்பதால் 2 வருடங்களுக்கு என்று கூறிக்கொண்டு மக்கள் முன் செல்வது அழகல்ல என எமது கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டதுடன், இந்த 2 வருட கதையை இப்போதைக்கு சொல்லத் தேவையில்லையென்றும் கூறியிருந்தார். விக்னேஸ்வரனின் இந்த இரண்டு வருட கதைக்கு நான் மட்டுமல்ல குறைந்தது இன்னும் ஆறு, ஏழு பேர் சாட்சிகளாக இருக்கிறார்கள் என்றும் சுமந்திரன் தனது கருத்திற்கு வலுச்சேர்த்துள்ளார்.
சுமந்திரன் எம்.பி.யின் இந்தக் கருத்து தற்போது பலவிதமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடனடியாகவே சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளதன் மூலமும் தனது பதிலடியில் அவர் தெரிவித்திருக்கும் சூசகமான கருத்துகள் மூலமும் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது விக்னேஸ்வரன் தரப்புக்கோ இலகுவானதாக இருக்கப் போவதில்லையென்பது தெளிவாகின்றது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியொன்றும் எதிரும் புதிருமாக களமிறங்கவுள்ளமையும் வெளிச்சமாகியுள்ளது.
விக்னேஸ்வரன் தனது பதிலில் சுமந்திரனின்  கருத்துக்கு “என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோநிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார்’ என்று கிண்டலாகவே சுமந்திரனை சாடியுள்ளார். அதுமட்டுமன்றி நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்களிடமிருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடர வேண்டுமென்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துகளுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துகளைக் கொண்டோரின் கருத்துகளைக் கேட்டு கலவரம் கொள்ளத் தேவையில்லையென்றும் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது எதற்காக, யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்க பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. வடக்கு, கிழக்கு தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைக்க உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதே கொள்கையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபகக் கட்சிகள் உள்ளன? அப்படியொரு அமைப்பே இல்லாதவிடத்து அக்கூட்டமைப்பிடமிருந்து எங்கிருந்து அழைப்பு வருமெனவும் கேட்டு உங்கள் கட்சியில் போட்டியிட நான் தயாரில்லை என்பதையும் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடமிருந்து எனக்கு அழைப்புவரக் கூடிய சாத்தியமில்லை. எனவே மக்கள் நலன் கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறொரு கட்சியூடாக தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள், இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. புதிய கட்சியொன்றை தொடங்குமாறு பலரும் ஆலோனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்துவிட்டதோ என்பதை நான் அறியேன் என்றும் கூறியுள்ள  விக்னேஸ்வரன், நிறுவன மயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு, எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், சமூகவியலாளர், புத்தி ஜீவிகள் , ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது அறிக்கை மூலம் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தனி அணியுடன் களமிறங்குவது தொடர்பில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதுடன் மட்டுமல்லாது, தான் முதலமைச்சராக பதவி வகித்த இந்த 5 வருட காலத்திலும் தமிழரசுக் கட்சியின் தலைமையினாலும் அதிலுள்ள மண்டைக்கனம் பிடித்தவர்களினாலும் தானும் வடக்கு மாகாண சபையும் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையை ஆட்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியிலும் உள்ள போதும் வடக்கு மாகாண சபை எடுத்த தீர்மானங்களை, திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவோ அல்லது வடக்கு மாகாண சபைக்கு சிறிதளவேனும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவோ கடுகளவேனும்  அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கவில்லையென்றும் குழிபறிக்கும் வேலைகளிலேயே அவர்கள் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போல், புதிய அணியொன்றை உருவாக்கி வடக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதி என்ன? என்பதே இன்றுள்ள பிரதான கேள்வி. ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் மரண அடி வாங்கியதால் தான் தங்களாலேயே துரோகிகள் ,  இராணுவ ஒட்டுக் குழுக்கள், காட்டிக் கொடுப்போர், கொலையாளிகள், கப்பக் காரர்கள் , ஆள் கடத்தல் காரர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள், பேரினவாதக் கட்சிகள், தமிழின படுகொலையாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் எல்லாம் கூட்டு வைத்துக் கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க வேண்டிய கேவலமான நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில், விக்னேஸ்வரனையும் ஒதுக்கிவிட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தை எதிர்கொள்வது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுத் தற்கொலைக்கு ஒப்பானதாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களுடைய ஆதரவு சரிந்திருக்கின்றது என்பதை அதன் பேச்சாளர் சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். 75 80 சதவீதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள், இந்தத் தடவை  35 வீதமே வாக்களித்துள்ளனர். அப்படியானால் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியெழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதரவுச் சரிவினால் தேசிய அளவிலே தாங்கள் அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற சக்தி குறைகின்றதா என்ற கேள்வியும் எழுவதாகவும் ஏனெனில், இதுவரைக்கும் அரசாங்கத்துடன் கம்பீரமாகப் பேசுகின்ற போது மக்களின் ஜனநாயக விடயத்தில் எந்தவித மாற்றமும் கிடையாது. 1956 இலிருந்து மக்கள் ஒரே செய்தியையே சொல்லிவருகிறார்கள். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது எனச் சொல்லி வந்துள்ளோம். அதை இந்த முறை தேர்தலிலே எங்களால் சொல்ல முடியவில்லை எனவும் சுமந்திரன் கவலைப்பட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு பரிதாப நிலையில்தான் சாகிறேன் பந்தயம் பிடி என்பது போல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்க மாட்டோமென சுமந்திரன் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான புதைகுழியை தோண்டத் தொடங்கியுள்ளார். வடக்கு மாகாண சபை ஆட்சி பீடமேறிய சிறிது காலத்திற்குள்ளேயே விக்னேஸ்வரனுக்கு எதிரான காய்நகர்த்தல்களை தனது கைக்கூலிகள் மூலமும் கூஜா தூக்கிகள் மூலமும் சுமந்திரன் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அதில் அவரினால் அரங்கேற்றப்பட்ட முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நாடகம் மரண அடியை வாங்கியிருந்தது. எனினும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விக்னேஸ்வரனை உரசிப் பார்ப்பதிலேயே சுமந்திரன் அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வந்தார். கட்சித் தலைமையின் தீர்மானத்தைக் கேட்காமலேயே தானொன்றை அறிவிப்பது சுமந்திரனின் வழக்கம். பின்னர் அது தொடர்பில் ஏற்படும் சர்ச்சைகள், விமர்சனங்களினால் பின்னர் அந்த அறிவிப்புகளிலிருந்து பின்வாங்குவதும் அவரின் வழமை. தற்போது கூட விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படமாட்டாரென பகிரங்கமாகவும் அவருக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படுவாரென சூசகமாகவும் சுமந்திரன் எம்.பி.தெரிவித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனோ வடக்கு மாகாண முதலமைச்சருக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த வேட்பாளர் யாரென இதுவரை தீர்மானிக்கவில்லை. தீர்க்கமான நேரத்தில் அதனை நாம் அறிவிப்போம் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு சென்று கொண்டிருக்கின்றது. அதனை கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன. அதுமட்டுமன்றி கிழக்கு மாகாண சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள்ளது. வடக்கு மாகாணமொன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிமிர்ந்து நிற்கக்கூடிய முதுகெலும்பாகவும் தனித்து ஆட்சியமைத்து பலம் வழங்கக்கூடிய களமாகவும் உள்ளது. அதனையும் கெடுத்து கிழக்கிலும் ஆட்சியில்லை, வடக்கிலும் ஆட்சியில்லை, தமிழ் மக்கள் மனதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லையென்பதை முழு நாட்டுக்கும் மட்டுமன்றி சர்வதேசத்துக்கும் வெளிக்காட்டும் வேலையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்று சொல்லப்படுகின்ற மண்டை வீங்கியவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் தனித்தனியாக களமிறங்கினால் தமிழ் மக்களின் வாக்குகள் உடையப்போவது உறுதி. இதில், சில வேளைகளில் இரு தரப்புமே ஆட்சியமைக்க முடியாத நிலையேற்பட்டால், தற்போது போன்றே தன்மானம் இழந்து, கௌரவம் இழந்து கேவலமான ஒரு கூட்டை உருவாக்க வேண்டிய சூழ்நிலைதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மாகாண சபையிலும் ஏற்படும். ஏனெனில் அவ்வாறானதொரு கேவலமான கூட்டுக்கு விக்னேஸ்வரன் தலைமையிலான அணி செல்லாது என்பதை உறுதிப்படுத்த முடியும். ஆகவே, வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களின் பலத்தை உடைப்பதற்கான ஒரு தேர்தலாகவே இடம்பெறப் போகின்றது என்பதை சுமந்திரனதும் விக்னேஸ்வரனினதும் பகிரங்க அறிவிப்புகள் பிரகாசமாகவே வெளிப்படுத்தியுள்ளன.