Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் தொடர்ந்து நீதிமன்ற சேவைகள் முடக்கம்

வடக்கில் தொடர்ந்து நீதிமன்ற சேவைகள் முடக்கம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .நீதிமன்றத்தின் கட்டளையை உதாசீனம் செய்த ஞானசார தேரர் உட்பட சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களையும் கட்டளையை அமுல்படுத்த தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை 2ஆவது நாளாகவும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மன்னார் நீதிமன்றத்திற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்து தமது வாயை கருப்பு பட்டியினால் கட்டி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இதனையடுத்து இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, இன்றைய தினம் இடம்பெறவிருந்த வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக இன்று விசாரணைகள் இடம்பெறவிருந்த வழக்குகள் பிரிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டுள்ளன.அதேபோல கிளிநொச்சி மாவட்டத்திலும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் 1 மணித்தியாலம் மாத்திரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும் தற்போது வழமைபோன்று வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் குறித்த பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *